எனக்குத் தெரிந்தவன்தான் அவன். தன் அம்மா திடீரென இறந்தபோது அவன் அழாமல் இருந்தான். ஏன் அவனுக்கு அழுகை வரவில்லை? அம்மாவுடன் மிகவும் பாசமாக இருந்த பிள்ளைதானே அவன்? என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். மய்யித்தை தூக்கி அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றபோது அவன் வெடித்து அழுத் தொடங்கினான். திடீரென அவனிடமிருந்து அழுகை வெடித்துக் கிளம்பியது என்றுதான் கூற வேண்டும். பார்ப்பவர்களை கண்கலங்கச் செய்திடும் அழுகை அது. அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போயிருந்திருக்கிறான் அல்லது நம்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்திருக்கிறான். அதனால்தான் அவன் அழவில்லைபோலும். நமக்குப் பிரியமானவர் திடீரென நம்மைவிட்டு பிரிந்துவிட்டால் நாம் அதிர்ச்சியில் உறைந்துவிடுவோம் அல்லது நம்ப முடியாமல் தவித்துக் கொண்டிருப்போம். அறிவுக்கு உடனடியாக விளங்கி விட்டாலும் மனம் உடனடியாக எதையும் ஏற்றுக்கொள்வதில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஏற்றுக்கொள்ள பழகுகிறது. சிலர் அதிர்ச்சி தாங்க முடியாமல் மனப்பிறழ்வுக்கும் உள்ளாகிவிடுகிறார்கள். அந்த அதிர்ச்சி அவர்களின் சமநிலையைக் குலைத்துவிடுகிறது.
நமக்குப் பிரியமானவர் நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டு மரணிப்பது வேறு. அந்த மரணத்தை மனம் உடனடியாக ஏற்றுக்கொள்கிறது. ஏனெனில் கொஞ்சம் கொஞ்சமாக அது அதனை எதிர்கொள்ள பழகிவிடுகிறது. அந்த மரணம் ஒருவகையான விடுதலையும்கூட. நமக்குப் பிரியமானவர் திடீரென மரணிப்பது வேறு. திடீர் மரணம் நம்மை உலுக்கிவிடுகிறது. தாங்க முடியாத பெரும் பாரம் நம் மீது ஏற்றப்பட்டதுபோன்று என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் நிலைகுலைந்து விடுகிறோம். உண்மையில் அது பெரும் துன்பம்தான். காலம் மட்டுமே அதற்கு நிவாரணமாக அமைய முடியும்.
திடீர் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருமாறு நபியவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார்கள். எதிர்பாராமல் நிகழும் பெரும் துன்பம் நம் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக உலுக்கிவிடுகிறது. அது விரைவில் மீள முடியாத துயரத்தில் நம்மை ஆழ்த்திவிடுகிறது. அல்லாஹ்விடம் அழுது மன்றாடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. அவன் மட்டுமே நமக்கு ஆறுதல் அளிக்க முடியும். அவனால் மட்டுமே சிறந்த மாற்றுகளை நமக்கு வழங்க முடியும். உண்மையில் அவனிடம் அழுது புலம்புவது மாபெரும் விடுதலையும்கூட.
மனம் தான் உணரும் அழுத்தங்களின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு பல வழிமுறைகளைக் கையாளுகிறது. அவற்றுள் பல நம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவை, மிக மிக எளியவை. ஒரு குழந்தையின் புன்சிரிப்பு, கண்ணியமான ஒரு மனிதரின் முகத்தோற்றம், இயற்கையின் ஒரு காட்சி, ஓர் அழகான சொல், கள்ளங்கபடமற்ற ஓர் எளிய புன்னகை இப்படி சாதாரணமான விசயங்களைக் கொண்டுகூட அது தன்னை மீட்டிக் கொள்கிறது. சாதாரண ஒரு நிகழ்வுகூட மனதின் பாரத்தை சட்டென குறைத்து விடுவதும் உண்டு. நம் மனம் எந்த அளவு சிக்கலானதோ அந்த அளவு எளிமையானதும்கூட. நம்மையும் மீறி அதில் அழுத்தங்கள் சேர்ந்து விடுவதுபோல அது அழுத்தங்களிலிருந்து மிக இயல்பாக விடுபடவும் செய்கிறது. மனம் என்னும் மாயநதி கடந்து செல்லும் பாதைகளை முழுமையாக நாம் அறிந்துகொள்ள முடியாது என்றாலும் அது தன்னைத்தானே சீர்படுத்திக்கொள்ளும் தன்மையும் வாய்ந்தது என்பது நமக்கு மிகப் பெரிய ஆறுதல்.
மனிதன் எளிய சூத்திரங்கள்மூலம் எல்லாவற்றையும் வகைப்படுத்தி விடலாம் என்று எண்ணுகிறான். ஆழம் செல்லச் செல்ல அப்படி உருவாக்கப்படும் சூத்திரங்கள் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு நாம் செய்யும் தந்திரங்களே என்பதைப் புரிந்துகொள்கிறோம். முடிவின்மை நம்மை அச்சமூட்டுகிறது. அது நம்மைக் களைப்பிலும் ஆழ்த்துகிறது. விளைவாக, ஏதேனும் ஒரு எல்லையில் நின்று கொண்டு இதற்கு மேல் ஒன்றுமில்லை என்று நம்மைச் சார்ந்தவர்களை நம்ப வைக்க முயற்சிக்கிறோம். மீண்டும் மீண்டும் அந்தப் பொய்யைச் சொல்வதன்மூலம் ஒரு கட்டத்தில் நாமே அதனை உண்மையென்றும் நம்ப ஆரம்பித்துவிடுகிறோம். நமக்குத் தெரிந்தவை வெறும் பெயர்களும் வகைப்படுத்தல்களும்தான். அவற்றின் உண்மைநிலையைக் குறித்து நாம் மிகக் குறைவாகவே அறிவோம். பெயர்களையும் வகைப்படுத்தல்களையும் கொண்டு அவற்றின் உண்மைநிலையை அறிந்துகொண்டதாக கூறிக்கொள்கிறோம்.
*************************
எந்தெந்த விசயங்களுக்காக நாம் கவலையடைகிறோம்? நமக்குச் சம்பந்தமில்லாத ஒரு செய்தி நம்மைக் கவலையில் ஆழ்த்த முடியுமா? ஒரு மனிதன் தன்னைச் சுற்றி நிகழும் எல்லாவற்றுக்காகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா? உண்மையில் நம்மை வந்தடையும் எல்லாவற்றுக்காகவும் நாம் கவலையடைவதில்லை. பல வெறுமனே செய்திகள், தகவல்கள் என்ற அளவில் நின்றுவிடுகின்றன. உணர்வுப்பூர்வமாக யாரேனும் ஒருவருடன் அல்லது ஏதேனும் ஒன்றுடன் நாம் தொடர்பு கொண்டிருந்தால் அவர்குறித்த அல்லது அதுகுறித்த துக்கரமான செய்தி நம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது. காதலில் விழுந்தவனின் மொத்த உணர்வும் காதலியை நோக்கியே இருப்பதால் மற்ற செய்திகள் அவனுக்குள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அவன் ஒன்றுமே நிகழாததுபோன்று இயல்பாக இருக்கிறான், அவனுடைய நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இறந்தாலும் சரியே.
இங்கு இன்னொரு விசயத்தையும் சொல்வது அவசியமெனக் கருதுகிறேன். சிலர் அவர்களை வந்தடையும் எல்லாவற்றுக்காகவும் கவலையடைகிறார்கள், பதற்றப்படுகிறார்கள். தாங்கள் இளகிய உள்ளம் கொண்டவர்கள், மனித சமூகத்தின் மீது அல்லது எங்கள் சமூகத்தின் மீது பெரும் பற்று கொண்டவர்கள். அதனால்தான் எல்லாச் செய்திகளும் எங்களைக் கவலையில் ஆழ்த்துகின்றன என்று அவர்கள் எண்ணுகிறார்கள். உண்மையில் இது வகையான சமநிலைக் குறைபாடு. உள்ளம் சமநிலையை இழக்கும்போது, அது ஏதேனும் ஒன்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அல்லது தொடர் அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தாங்கும் ஆற்றலை இழக்கும்போது இந்த வகையான குறைபாடுகள் ஏற்படுகின்றன. இது அவர்கள் இளகிய உள்ளம் கொண்டவர்கள் என்பதற்கோ அவர்கள் மனித சமூகத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதற்கோ ஆதாரம் அல்ல. மாறாக அது அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமே. அவர்களுக்குத் தேவை, தகுந்த மனநல சிகிச்சை. உண்மையில் நம்முடைய வட்டம் மிக மிகச் சிறியதுதான். அப்படி சிறியதாக இருப்பதால்தான் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம். மற்றவை அனைத்தும் நாம் உருவாக்கிய போலியான பிம்பங்கள், நாம் உருவகித்துக் கொண்ட கற்பனைகள்.
சிறு விசயம்கூட நம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்றால் அதற்கு முன்னால் ஏதேனும் ஒரு பெரும் பயத்தால் கவலையால் நம் மனம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பாதிக்கப்பட்டு இருக்கும்போது சிறு விசயம்கூட நம்மைக் கவலையில் பதற்றத்தில் ஆழ்த்தலாம். இதுவும் ஒரு வகையான தற்காலிகமான சமநிலைக்குலைவின் விளைவுதான்.
************************
மனிதன் ஒரு செயலை தன்னியல்பாகச் செய்வதற்கு முதலில் அவனது மனம் தயாராக வேண்டும். மனப்பூர்வமாக அவன் செய்யும் செயல்கள் நேர்த்தியையும் அழகையையும் கொண்டிருக்கும். நிர்ப்பந்தமாக அவன் செய்து முடிக்கும் செயல்களில் நேர்த்தியையும் அழகையையும் காண முடியாது. உடலுழைப்புக்காரர்களைவிட மூளையுழைப்புக்காரர்களுக்கு மனதின் பங்களிப்பு மிக அதிக அளவில் தேவைப்படுகிறது. அவர்களின் மனம் ஒத்துழைக்கவில்லையெனில் படைப்பூக்கத்திறன் அவர்களிடமிருந்து விடுபட்டுவிடும். அவர்களின் அறிவு குறிப்பிட்ட அந்தச் செயலை நிறைவேற்று நிறைவேற்று என்று ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தாலும் இரும்புக் கதவுக்குப் பின்னால் நிற்பதுபோன்று உள்ளே செல்ல முடியாமல் அவர்கள் விழிபிதுங்கி நிற்பார்கள். அந்தச் செயலுக்காக மனம்விரிந்து கொடுக்க வேண்டும். அதுவரையில் அவர்கள் அப்படியேதான் நின்று கொண்டிருப்பார்கள்.
“என் இறைவா! என் நெஞ்சத்தை விசாலமாக்கித் தருவாயாக. எனது விவகாரங்களை எனக்கு இலகுபடுத்தித் தருவாயாக. என் பேச்சை மக்கள் புரிந்துகொள்ளும்பொருட்டு என் நாவிலுள்ள திக்குவாய் முடிச்சுகளை அவிழ்த்து விடுவாயாக” என்ற பிரார்த்தனையிலுள்ள முதல் வாசகம் மனதின் இந்த விசாலத்தைத்தான் குறிக்கிறது என்று கருதுகிறேன். எந்தவொரு செயலாக இருந்தாலும் அதற்கு நம் மனம் விரிந்து கொடுத்தால்தான் நாம் அதனை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்ற முடியும். நம் மனம் சுருங்கிவிட்டால் நம் முன்னால் வலுவான இரும்புக் கதவு உருவாகிவிடும். உள்செல்வதே நம்மால் இயலாத ஒன்றாகிவிடும்.
இங்கு உடலுழைப்புக்காரர்களைவிட மூளையுழைப்புக்காரர்களே அதிகம் சம்பாதிக்கிறார்கள். வெளிப்படையாகப் பார்க்கும்போது அது அநியாயம் போன்று தெரியலாம். ஆனால் அது அநியாயமல்ல. அது நியாயமானதுதான். முந்தையர்கள் சிந்தும் வியர்வை நம் கண்ணுக்குத் தெரிகிறது. பிந்தையவர்கள் சிந்தும் வியர்வை நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதனால்தான் அப்படி ஒரு கருத்தை ஆதரிக்கிறோம். உடலுழைப்புக்காரர்களைவிட மூளையுழைப்புக்காரர்களே அதிக அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
**********************
நம்முடைய சிந்தனை தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கிறது. அது ஒரே நிலையில் இருப்பதில்லை. கொந்தளித்துக் கொண்டிருக்கும் நம் அகத்தில் எந்தச் சமயத்தில் எந்தச் சிந்தனை வந்து அமரும், அது நம்மை எங்கெல்லாம் இட்டுச் செல்லும் என்பதை நாம் அறிய மாட்டோம். அடுத்து நம்முள் உருவாகக்கூடிய எண்ணங்கள்கூட எங்கிருந்து உருவாகி வருகின்றன என்பதையும் நாம் அறிய மாட்டோம். நம் அகத்தில் உருவாகக்கூடிய ஒவ்வொன்றும் மாபெரும் அற்புதத்திற்கு ஈடானதே. நாம் சுவீகரித்துக் கொண்ட அரசியல் நிலைப்பாடுகளின் காரணமாகவே நாம் அதனை வெளிப்படுத்தத் தயங்குகிறோம், அஞ்சுகிறோம். அரசியல் நிலைப்பாடுகளுக்கு பெரிய ஆராய்ச்சி, சிந்தனை எல்லாம் தேவையில்லை. அந்தச் சமயத்தில் நம் இயல்புக்கு ஒத்திசைவானவற்றை, நமக்கு இலாபம் தரக்கூடியவற்றை நாம் அப்படியே தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம். நாம் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு அதிலிருந்து மற்றொன்றுக்கு இப்படி நாம் சென்று கொண்டேயிருக்கிறோம். குறைமதியாளர்கள்தாம் ஒரே இடத்தில் அப்படியே இருக்கிறார்கள். அவர்களின் அறிவு வளர்ச்சியடையவில்லை என்பதால்.
தங்களின் சிந்தனை மாறிக்கொண்டேயிருந்தாலும் பெரும்பாலோர் அதனை வெளிப்படுத்துவதில்லை. ஒரு வகையில் அது நன்மைதரக்கூடியதும்கூட. சில தற்காலிகமானவை. சில நாட்களில் அல்லது மாதங்களில் மறைந்து விடும். சில நீண்ட காலம்வரை நீடித்து இருக்கக்கூடியவை. நம்முடைய புற வாழ்க்கையிலும் வலுவான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றை நாம் வெளிப்படுத்தாவிட்டாலும் நம்மையும் மீறி அவை வெளிப்பட்டே தீரும்.
முன்முடிவுகளுடன், அரசியல் நிலைப்பாடுகளுடன் வாழ்க்கையை எதிர்கொள்பவர்கள் வெளிப்படையாகப் பார்ப்பதற்கு உறுதியானவர்களாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் தடுமாறிக் கொண்டிருப்பார்கள். அவர்களின் புறத்தில் காணப்படும் உறுதி அவர்களின் அகத்தில் எதிரொலிப்பதில்லை. அதனால்தான் அவர்களின் கொள்கைகள், நம்பிக்கைகள் எளிதாக தகர்க்கப்பட்டு விடுகின்றன. வெளிப்படையாக தங்களின் கொள்கைகளில், நம்பிக்கைகளில் உறுதியானவர்களாக அவர்கள் தங்களைக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவர்கள் முழுமையான மாற்றத்திற்கு உட்பட்டு விடுகிறார்கள். அதனால்தான் அவர்களின் அந்தரங்கத்திற்கும் புறத்திற்கும் மத்தியில் ஒட்டவே முடியாத மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டு விடுகிறது.
