ஆசிரியர் குறிப்பு

பெயர்: ஷாஹுல் ஹமீது.
ஊர்: கடையநல்லூர்.
தந்தை பெயர்: முஹம்மது அலீ
தாயின் பெயர்: ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்
திருமணமானவர். மனைவி பெயர், ஆமினா. உமர், நதீரா என்ற இரு பிள்ளைகள் அவருக்கு இருக்கிறார்கள்.
சொந்த ஊரில் +2 வரையிலான ஆரம்ப கல்வியை முடித்த பிறகு உமராபாத்தில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் என்ற கல்லூரியில் இஸ்லாமிய ஷரீஆவைக் குறித்து ஐந்து வருடங்கள் பயின்றார். இந்த அடிப்படையில்தான் அவர் தம் பெயரோடு ‘உமரீ’ என்ற பட்டத்தை இணைத்துக் கொள்கிறார். இவ்வாறு படித்த கல்லூரியில் வழங்கப்பட்ட பட்டத்தைக் கொண்டு அறியப்படுவது இஸ்லாமிய மரபில் தொடர்ந்து வருகின்ற ஒன்றுதான். பிறகு கேரளாவிலுள்ள ‘அல்ஜாமிஆ அல்இஸ்லாமிய்யா’ என்னும் கல்லூரியில் ‘உலூமுல் குர்ஆன்’ என்ற பிரிவில் இரண்டு வருடங்கள் பயின்றார்.
வாசிப்பில் ஆர்வம் கொண்டவர். சிறு வயதிலிருந்தே வாசித்து வருகிறார். அந்தச் சமயத்தில் கண்ணில் கண்ட எல்லாவற்றையும் வாசிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார். வாசிப்பின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் இயல்பான ஆர்வமாகும்.
தமிழ் அவரது தாய்மொழி. தவிர இஸ்லாமியக் கல்வியின் வழியாக அறபி, உருதூ ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராக ஆனார். அறபியிலிருந்தும் உருதுவிலிருந்தும் பல நூல்களை அவர் தமிழுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார். அவர் மொழிபெயர்ப்பு செய்த நூல்களுள் செய்யத் குதுப் எழுதிய ‘திருக்குர்ஆனின் நிழலில்’ அபுல் ஹசன் அலீ நத்வீ எழுதிய ‘இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
தமக்கென தனித்துவமான மொழிநடையைக் கொண்டிருக்கும் அவர் சிறந்த எழுத்தாளராக அறியப்படுகிறார். மனித மனம் குறித்தும் மனித வாழ்வு குறித்தும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அவர் எழுதும் கட்டுரைகள் காத்திரமானவை; செறிவுமிக்கவை; மனித மனதில் இயல்பாக எழும் கேள்விகளுக்கு விடையளிப்பவை; காயம் கொண்ட உள்ளங்களை ஆற்றுப்படுத்துபவை. அவரது கட்டுரைகள் ‘மனம் என்னும் மாய நதி’ என்னும் தலைப்பிலும் ‘உள்ளீர்க்கும் புதிர்வெளி’ என்னும் தலைப்பிலும் சீர்மை பதிப்பகம் வழியாக இரு புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த தளத்தின் வழியாக அவர் தீவிரமாக எழுதி வருகிறார்.
