இயல்பு நிலையில் நீடிப்பது

You are currently viewing இயல்பு நிலையில் நீடிப்பது

இந்தக் காலகட்டத்தின் மிகப் பெரிய சவால் என்ன தெரியுமா? நாம் இயல்பு நிலையில் நீடிப்பதுதான். எந்த இயல்பில் நாம் படைக்கப்பட்டோமோ அந்த நிலையில் நாம் நீடிப்பது. பிறழ்வு நிலை இயல்பு நிலையாக சித்தரிக்கப்படும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வீடியோக்கள், சினிமாக்கள், பிறழ்வு எழுத்துக்கள் வழியாக நம் சிந்தனை சிதைக்கப்படுகிறது. பிறழ்வு நிலை  இயல்பு நிலையாக காட்டப்படுகிறது. இயல்பு நிலை அந்நியமான ஒன்றாக முன்வைக்கப்படுகிறது.  

ஷைத்தான்களால் திட்டமிட்டு உருவாக்கப்படும் வீடியோக்கள் நம் அகத்தில் கொந்தளிப்பை, குழப்பத்தை ஏற்படுத்துகின்றன; நம் ஆற்றலை வீணடிக்கின்றன; நம் குடும்பத்தை நாசம் செய்கின்றன. அவை மனிதர்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாகக் காட்டுகின்றன. ஆணுக்கு எதிராக பெண்ணையும் பெண்ணுக்கு எதிராக ஆணையும் நிறுத்துகின்றன. இருவரும் இணைந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை அகற்றுகின்றன. இருவருக்குள்ளும் இருக்கும் மிருக உணர்ச்சிகளை கூர்தீட்டுகின்றன.  மனிதர்களிடையே காணப்படும் நம்பகத்தன்மையை இல்லாமல் ஆக்குகின்றன. துரோகத்தை இயல்பான ஒன்றாகக் காட்டுகின்றன. அவர்களின் ஈகோவைத் தூண்டி அவர்களை தனியர்களாக மாற்றுகின்றன. நவீன வாழ்க்கை முறையும் நவீன கல்வித் திட்டமும் இப்படித்தான் நம்மை மிருகங்களாக மாற்றி விடுகின்றன.  

ஷைத்தான்கள் நலம்விரும்பிகளின், சீர்திருத்தவாதிகளின் வடிவத்தில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். பெரும் குழப்பத்தையும் சீர்குலைவையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஷைத்தான்கள் தாங்கள் மனித சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் என்றும் தாங்கள் சீர்திருத்தம் செய்பவர்கள் என்றும் கூறிக் கொள்கிறார்கள். எப்போதுதான் அநியாயக்காரன் தன்னை அநியாயக்காரன் என்று ஒத்துக் கொண்டான்? குழப்பவாதி தன்னை குழப்பவாதி என்று ஒத்துக் கொண்டான்?

ஷைத்தான்களை ஷைத்தான்கள் என்று அடையாளம் காண முடியாத அளவு இன்று மனிதர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பாவங்களில், கேளிக்கைகளில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். அது அவர்களின் இயல்பு சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான அடையாளமேயாகும். அவர்கள் சரியையும் தவறையும் பிரித்துப் பார்க்கும் பக்குவத்தை இழந்து விட்டார்கள். அவர்கள் ஷைத்தான்களால் ஓட்டிச் செல்லப்படும் மந்தைகளாக ஆகிவிட்டார்கள். ஷைத்தான்களை வழிகாட்டிகளாகக் கொண்ட மனிதர்கள் வாழ்வின் இலக்கை கண்டடைய முடியாது. அவர்களால் ஒருபோதும் நிம்மதியாக வாழ முடியாது. அவர்கள் ஒரு இருள், அதனைத் தொடர்ந்து வரக்கூடிய இன்னொரு இருள் இப்படி அடுத்தடுத்த இருள்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

குழப்பங்களும் சிக்கல்களும் மிகுந்த இந்தக் காலகட்டம் திறமையும் அகப்பார்வையும் ஆன்ம வலிமையும் கொண்ட இஸ்லாமிய அழைப்பாளர்களை வேண்டி நிற்கிறது. இஸ்லாத்திடம் மட்டுமே இந்த குழப்பங்களை, சிக்கல்களை எதிர்கொள்வதற்கான கண்ணோட்டங்களும் வழிகாட்டல்களும் வாழ்க்கை வழிமுறையும் இருக்கின்றன. அதனால் மட்டுமே இயல்பு நிலையையும் பிறழ்வு நிலையையும் பிரித்துக் காட்டி மனிதர்களை இயல்பு நிலையின் பக்கம் அழைக்க முடியும். ஏனெனில் அது இறைவன் அருளிய மார்க்கம். அதுதான் அனைத்தையும் உரசிப்பார்ப்பதற்கான உரைகல்.  

இயல்பு நிலையில் நீடிப்பதில்தான் இயல்பான மகிழ்ச்சி இருக்கிறது. இன்று இயல்பான மகிழ்ச்சி காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. செயற்கையான மகிழ்ச்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த செயற்கையான மகிழ்ச்சி ஒரு கட்டத்திற்கு மேல் மனிதனிடம் கடும் வெறுமையை, சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. மகிழ்ச்சிக்கான வெளிப்படையான காரணிகள் இருந்தும் மனிதர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. அவர்கள் இயல்பான மகிழ்ச்சியை தொலைத்து விட்டதனால் செயற்கையான மகிழ்ச்சி கடும் சலிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகி விட்டது. இயல்பு சிதைதல் என்பது மனிதனின் தனித்துவம் அழிவதாகும். அவன் இங்குள்ள மிருகங்களில் ஒரு மிருகமாக மாறுவதாகும். அவன் கேடுகெட்ட ஷைத்தானாக மாறுவதாகும்.

இன்னபிற உயிரினங்களைவிட மனிதன் தனித்துவமானவன். இன்னபிற படைப்பினங்கள், உயிரினங்கள் அனைத்தும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது என்று குர்ஆன் கூறுகிறது. இங்குள்ள அனைத்தும் அவனுடைய வாழ்க்கைக்காக வசப்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் கவனித்துப் பார்க்கும் மனிதன் இந்த உண்மையை எளிதில் கண்டுகொள்ள முடியும். ஆகவேதான் ஷைத்தான் மனிதனை சிந்திக்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறான்.

இஸ்லாமிய அழைப்பாளர்கள் இந்தக் காலகட்டத்தின் சிக்கலை உணர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அவர்கள் தங்களின் இயல்பு நிலையைச் சிதைக்கும் அனைத்துவிதமான விசயங்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் முதலில் தங்களைப் பாதுகாத்துக் கொண்டால்தானே மற்றவர்களையும் பாதுகாக்க முடியும்! இஸ்லாத்தை நன்கு புரிந்து கொண்ட, இந்தக் காலகட்டத்தின் சிக்கல்களை, பிரச்சனைகளை உணர்ந்து கொண்ட அழைப்பாளர்களால்தான் மனித சமூகத்தைப் பாதுகாக்க முடியும்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

This Post Has 2 Comments

  1. SaFni

    உங்கள் website இல் நீங்க புதிய Post போடும் போது E-Mailகு Notification வர மாதிரி Subscribe button சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    1. Shah Umari

      என்னுடைய வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். புதிய பதிவு இடும்போது அங்கு லிங்கைப் பகிர்வேன்.

Leave a Reply