இஸ்லாம் குறித்து ஆட்சேபனைகளை முன்வைப்பவர்கள் பல வகையினர். ஒரு வகையினர், உண்மையிலேயே சந்தேகத்தில் உழல்பவர்கள். அவர்கள் அந்த ஆட்சேபனைகளுக்கு தங்களின் மனம் திருப்தியுறும் பதில்களை விரும்புகிறார்கள். அவர்கள் பொருட்படுத்தத்தகுந்தவர்கள். நாம் அவர்களைப் பொருட்படுத்தவில்லையெனில் அவர்கள் நம்மைவிட்டு விலகிச் செல்லக்கூடும்.
இன்னொரு வகையினர், எதிரிகள் இஸ்லாம் குறித்து முன்வைக்கும் ஆட்சேபனைகளை அதிகம் வாசித்தவர்கள். இஸ்லாத்தை அதன் மூலாதாரங்களின் வழி, மார்க்க அறிஞர்களின் வழி கற்காதவர்கள். அவர்களிடம் இருப்பது கிட்டத்தட்ட தாழ்வு மனப்பான்மைக்கு இணையான ஒரு மனப்பான்மை. தாங்கள் இஸ்லாம் குறித்து எதுவும் அறியவில்லை என்பதையும் அவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதே சமயம் எல்லாவற்றையும் அறிந்தவர்கள்போன்று ஆட்சேபனைகளை முன்வைப்பார்கள். அந்த ஆட்சேபனைகளோடு அவர்களின் கர்வமும் கலந்திருக்கும். அந்த ஆட்சேபனைகள் நிராகரிக்கப்படும்போது அல்லது அவற்றுக்குக் கடுமையான முறையில் பதிலளிக்கப்படும்போது அவர்களின் கர்வமும் சீண்டப்படும். விளைவாக, அப்படிப் பதிலளிப்பவர்களை அடிப்படைவாதிகளாக, மூடர்களாக சித்தரிக்க முயல்வார்கள். அவர்களுக்கு சரியான முறையில் பதிலளிக்கப்பட்டால் அவர்களில் சிலர் நம் பக்கம் சாயக்கூடும். மதில் மேல் நிற்கும் பூனைகளைப் போல அவர்கள் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். எந்தப் பக்கம் தங்களுக்கான ஆதரவுக்கரங்கள் நீட்டப்படுகின்றனவோ அந்தப் பக்கம் சாய்ந்து விடுவார்கள்.
இன்னொரு வகையினர், நம் எதிரிகள். நம்மை முற்று முதலாக வெறுப்பவர்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொன்றும் அவர்களின் வெறுப்பையே அதிகப்படுத்தும். என்னைப் பொறுத்தவரை அவர்களிடம் எந்த விவாதத்தையும் முன்னெடுக்கக்கூடாது. அப்படியே முன்னெடுத்தாலும் இஸ்லாம் குறித்துப் பேசாமல் அவர்களிடம் என்ன கொள்கை, கருத்தியல் இருக்கிறதோ அதைக் குறித்தே பேச வேண்டும். அவர்கள் இஸ்லாத்தை நிராகரித்தால் அதற்கு மாற்றாக தங்களிடம் உள்ள கருத்தியல்தான் மனித சமூகத்திற்கு உகந்தது, சிறந்தது என்பதை அவர்கள் நிரூபித்தாக வேண்டும். பலர் தங்களிடம் உள்ள கருத்தியல்களை நேரடியாக முன்வைக்க முடியாமல் மறைமுகமாக இஸ்லாத்தைத் தாக்குவதன் வழியாக முன்வைக்கிறார்கள். நம்மை வெறுப்பவர்களை நாம் எந்த வகையிலும் திருப்திபடுத்த முடியாது. அவர்கள் முன்வைக்கும் ஆட்சேபனைகளின் வழி அவர்களின் மன அரிப்பை நாம் தெரிந்து கொள்ளலாம். அவ்வளவுதான்
மற்றவர்களின் நம்பிக்கையை உங்களுக்கு கேள்வி கேட்க உரிமை உண்டு. ஆனால் அதனைப் பரிகாசம் செய்ய உரிமை யாருக்கும் இல்லை. அப்படி நீங்கள் பரிகாசம் செய்தால் சக வாழ்வுக்கு நீங்கள் ஆபத்தானவராக ஆகிவிடுவீர்கள். நம்பிக்கை என்பது உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது. அதனைப் பரிகாசம் செய்தால் நிச்சயம் உள்ளம் புண்படத்தான் செய்யும். ஒரு மத நம்பிக்கையாளன் இன்னொரு மத நம்பிக்கையாளனை பரிகாசம் செய்வது தவறு எனில் ஒரு நாத்திகன் ஒரு மதநம்பிக்கையாளனை பரிகாசம் செய்வதும் தவறு. நாத்திகர்களுக்கு மட்டும் நம்பிக்கையாளர்களை பரிகாசம் செய்யும் உரிமையைக் கொடுத்தது யார்? நாங்கள் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. ஆனால் எல்லா மதத்தினரையும் பரிகாசம் செய்வோம் என்று சொல்லும் நாத்திகர்களின் வாதம் அப்பட்டமான பித்தலாட்டம். நாத்திகம் என்பது ஒரு கொள்கைதானே? நாத்திகம் என்பது ஒரு வழிமுறைதானே? சக வாழ்வுக்கு பெரும் ஆபத்தாக இருப்பவர்கள் இந்த நாத்திகர்கள்தாம்.
அவர்களுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பு இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வையும் வேண்டுமென்றே இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி எழுதுகிறார்கள். மனித உணர்வுகளைக் குறித்து அவர்கள் அறியாதவர்கள் அல்ல. ஆனாலும் மன அரிப்பு அவர்களை வேண்டுமென்றே அவ்வாறு செய்யத் தூண்டுகிறது. எல்லாம் செய்து விட்டு கருத்துச் சுதந்திரம் என்ற குல்லாவை அணிந்து கொள்கிறார்கள்.
ஒரு சிலர் கேலி செய்வதால் உங்கள் மதம் அழிந்து விடுமா? நிச்சயமாக அழியாது. வரலாறு முழுவதும் அது எதிர்ப்புகளையும் கேலிகளையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. அது தன் இயல்பில் சிறிதும் மாறாது. ஆனால் உங்கள் வேஷம் வெளிப்படுகிறதே? எங்களுக்கு எதிராக நீங்கள் கொண்டிருக்கும் காழ்ப்பு வெளிப்படுகிறதே? சக வாழ்வுக்கு நீங்கள் வேட்டு வைக்கிறீர்களே? நாங்கள் நேசக்கரம் நீட்டினாலும் நீங்கள் எங்களுக்கு எதிராக ஆசிடுகளை வீசுகிறீர்களே? எல்லாவற்றையும் செய்துவிட்டு பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எங்களுக்கு எதிராக காழ்ப்பு கொண்டவர்கள் யார்? எங்களுடன் இருப்பவர்கள் யார்? என்பதை நாங்கள் தெளிவாக அறிந்து கொள்கிறோம். உண்மையில் முஸ்லிம் பெயர் கொண்ட இந்த வகையான நாத்திகர்கள் சிறிதும் சகிப்புத்தன்மையற்ற விஷ ஜந்துகள். தொடர்ந்து வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கும் இழிபிறவிகள்.
