ஒரு தவ்ஹீத் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கின்ற ஒருவரிடம் கேட்டேன், “நீங்கள் ஏன் முன்னர் கூறியதுபோன்று குர்ஆன், சுன்னாவே போதும் என்ற வாதத்தை முன்வைப்பதில்லை? ஏன் இப்போது ஸலஃபி வாதத்தை முன்வைக்கிறீர்கள்?”
அவர் கூறினார்: அந்த வாதம் மக்களை வெகுதூரம் அழைத்துச் செல்கிறது. ஒவ்வொருவரும் தம்முடைய தனிப்பட்ட புரிதலைக் கொண்டு அதுதான் குர்ஆன், சுன்னா என்று விளங்கிக் கொள்கிறார்கள். ஆகவேதான் இப்போது நபித்தோழர்களின் புரிதலுக்கு உட்பட்டு நம்முடைய புரிதல் இருக்க வேண்டும் என்ற வாதத்தையும் சேர்த்து முன்வைக்கிறோம்.”
இப்னு தைமிய்யாவின் காலகட்டத்தில் ஸலஃபி தஃவா வலுப்பெற்றதும் இதே போன்ற ஒரு சூழலில்தான். ஒரு புறம் சூஃபிகள் தங்களின் தனிப்பட்ட ஆன்மிக அனுபவங்களைக் கொண்டு புதுப்புது வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். சில மார்க்கத்திற்கு உட்பட்டவையாகவும் சில மார்க்கத்தின் வரம்புகளை மீறக்கூடியவையாகவும் இருந்தன. இன்னொரு புறம் தத்துவவியலாளர்கள் கிரேக்க தத்துவத்தின் அடிப்படையில் புதுப்புது புரிதல்களை முன்வைத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக பல்வேறு தரப்பினரால் புதுப்புது வழிமுறைகள் உருவாகிக் கொண்டேயிருந்தன. அவை இஸ்லாத்தின் ஆன்மாவை சிதைத்து விடுமோ என்ற அச்சம் இஸ்லாத்தின் மீது பற்று கொண்ட அறிஞர்களிடத்தில் உருவானது.
அதன் விளைவாகத்தான் ஸலஃபி தஃவா உருவானது.
புதுப்புது புரிதல்களை, கண்ணோட்டங்களை, அனுபவங்களை ஏற்றுக்கொள்வதில் நாம் வரம்புகளை விதிக்க வேண்டிய அவசியமிருக்கிறது என்ற தரப்பு உருவானது. அந்த நபித்தோழர்களும் அவர்களுக்குப் பின்வந்தவர்களும் எப்படி சிக்கலான விசயங்களை எப்படி புரிந்து கொண்டார்களோ அப்படி நாமும் புரிந்து கொள்வோம். அவர்கள் எந்த விசயங்களைக் குறித்து பேசவில்லையோ அந்த விசயங்களை நாமும் பேசாமல் அமைதி காப்போம். அவர்கள் எந்த விசயங்களில் தலையிடவில்லையோ அந்த விசயங்களில் நாமும் தலையிடாமல் ஒதுங்கி நிற்வோம். நாம் இந்த மார்க்கத்தை பாதுகாக்கும்பொருட்டு ஒரு பாதுகாப்பான வளையத்தை உருவாக்கிக் கொள்வோம்.
இஸ்லாத்தின் பெயரால் வெள்ளமென உருவாகி வந்த புதுப்புது சிந்தனைகளை தடுப்பதற்காக கட்டப்பட்ட அணைதான் ஸலஃபி தஃவா. இது பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் அவசியமான தடுப்பு அரணாக அமைந்தது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. இமாம் கஸ்ஸாலிகூட தம்முடைய இஹ்யாவில் இந்த தஃவாவை முன்வைத்துள்ளார்.
ஸலஃபி தஃவா ஒரு தடுப்பு அரணாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இன்னொரு புறம், அது அறிவுச் செயல்பாட்டுக்கு எதிரான வாதமாகவும் அமைந்தது. முந்தையவர்களே சிறந்தவர்கள், பிந்தையவர்கள் அவர்களைப் பின்பற்ற வேண்டியவர்கள், அவர்கள் புதிதாக எதையும் சிந்திக்கக்கூடாது என்ற சிந்தனை உருவானது. புதிய சிந்தனைகள் அனைத்தும் ஒதுக்கப்பட வேண்டியவை என்ற எண்ணத்தையும் அது உருவாக்கியது. மார்க்கம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அறிவைப் பயன்படுத்தக்கூடாது, குர்ஆனிலும் சுன்னாவிலும் உள்ளவற்றை அப்படியே பின்பற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை என்ற வாதமும் உருவானது. இங்கிருந்து புது வகையான தக்லீதும் உருவானது.
தக்லீத் பரவிய சமயத்தில் அதற்கு எதிர்வினையாக புதிய சிந்தனைகள் வரவேற்கப்பட வேண்டும் என்ற கண்ணோட்டம் உருவாகியது. புதிய சிந்தனைகள் வெள்ளமென உருவாகி பெரும் குழப்பங்களை உருவாக்கிய போது நாம் முந்தையவர்களின் வழிமுறையில் நின்று கொள்ள வேண்டும், அவர்களை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற கண்ணோட்டம் உருவானது. ஒவ்வொன்றும் அதற்குரிய அளவைத் தாண்டும்போது ஆபத்தான ஒன்றாக அமைந்து விடுகிறது. ஒவ்வொன்றுக்கும் எதிர்வினையாக அதற்கு முற்றிலும் மாறான புதிய ஒன்று தோன்றி விடுகிறது.
முஃதஸிலாக்கள் அறிவை முதன்மையான உரைகல்லாக கொண்டவர்கள். இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம். அறிவுக்கு முரணான ஒவ்வொன்றும் இஸ்லாமாக இருக்காது. அது நிராகரிக்கத்தக்கது என்ற வாதத்தை முன்வைத்தார்கள். அந்த அடிப்படையில் தங்கள் அறிவுக்கு முரணான ஒவ்வொன்றையும் நிராகரித்தார்கள். அவர்களுக்கு எதிர்வினையாக உருவாகியவர்கள் ளாஹிரியாக்கள். இஸ்லாத்தின் விசயத்தில் அறிவைப் பயன்படுத்தக்கூடாது. இஸ்லாம் சொல்லக்கூடிய விசயங்களை அப்படியே பின்பற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. அறிவு ஒரு உரைகல்லே அல்ல. அது உங்களை வழிகேட்டில் ஆழ்த்தக்கூடியது என்ற வாதத்தோடு புறப்பட்டார்கள். இந்த இரண்டு பிரிவினரையும் தாண்டி இன்னொரு தரப்பு உருவானது. இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம்தான். அறிவுக்கு முரணான எதுவும் இஸ்லாத்தில் இல்லை. ஆனால் அறிவுக்கு மேலான, அறிவைக் கொண்டு புரிந்துகொள்ள முடியாத அம்சங்களும் இஸ்லாத்தின் இருக்கின்றன என்ற சமநிலையான ஒரு வாதத்துடன் அந்த தரப்பு உருவானது.
ஸலஃபி தஃவா முன்வைக்கப்பட்ட சூழலை புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அது ஒரு தடுப்பு அரண் என்ற ரீதியில்தான் அணுகப்பட வேண்டும். ஒருபோதும் அது அறிவுச் செயல்பாட்டுக்கு தடையான ஒன்றாக அமைந்து விடக்கூடாது. அது மட்டுமே வழியல்ல. அது ஒரு பாதுகாப்பான கரை என்று சொல்லலாம். இது ஒரு புரிதல். இந்த புரிதலுக்கு உட்பட்டு தங்களை ஸலஃபி என அறிவித்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இது ஒன்றே வழி, இதைத் தவிர மற்றவை அனைத்தும் வழிகேடுகள் என்ற அடிப்படையில் தங்களை ஸலஃபி என அறிவித்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். நாங்கள் மட்டுமே நேர்வழிபெற்றவர்கள், மற்றவர்கள் அனைவரும் வழிகேடர்கள் என்று கூறுவது கர்வத்தின் வெளிப்பாடு. கிட்டத்தட்ட யூதர்களும் இதே மாதிரியான ஒரு வாதத்தையே முன்வைத்தார்கள்.
நாம் ஒவ்வொரு சிந்தனைப் பள்ளியையும் அதற்கேயுரிய சூழலைக் கொண்டு புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் அந்த சூழலை நீக்கி விட்டு முன்வைத்தால் அநியாயம் இழைத்தவர்களாக மாறிவிடுவோம். முரணியக்கம் ஒரு நிலையான விதி. அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ஒரு சிந்தனைப்பள்ளியோடு மனதளவில் ஒன்றுபவர்கள் அதற்காக உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக மாறிவிடுவது இயல்புதான். அறிஞர்கள், பொதுமக்கள் என யாரும் இதற்கு விதிவிலக்கானவர்கள் இல்லை.
ஒவ்வொரு சிந்தனைப்பள்ளியும் காலப்போக்கில் எதிர்மறை விளைவுகளையும் கடும்போக்குகளையும் கொண்டதாக ஆகிவிடுவதும் உண்டு. அவற்றை ஏதோ ஒன்றின் மீது மட்டும் நாம் சுமத்திவிட முடியாது. இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொன்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வழிமுறை என்பதையும் அவர்களால் உருவாக்கப்பட்ட எந்தவொன்றும் அறுதியான ஒரே தீர்வு அல்ல என்பதையும்தான்.
கிரேக்க தத்துவம் அறபியில் மொழியாக்கம் செய்யப்பட்ட பிறகு முஸ்லிம் சமூகத்தில் கருத்தியல் குழப்பங்கள் உருவாயின. அப்பாஸிய கலீஃபா மஃமூனுடைய காலகட்டத்தில்தான் அது அதிக அளவில் மொழியாக்கம் செய்யப்பட்டது. மஃமூனுக்கு அதில் அலாதியான ஆர்வம் இருந்தது. கிரேக்க தத்துவத்தால் கவரப்பட்ட முஸ்லிம் அறிஞர்களில் சிலர் அதை அளவுகோலாகக் கொண்டு அதற்கேற்ப குர்ஆன், சுன்னாவுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பத்தினர், இன்று எப்படி முஸ்லிம் அறிஞர்களில் சிலர் அறிவியலைக் கொண்டு விளக்கம் அளிக்கிறார்களோ அப்படி. முஸ்லிம் தத்துவவியலாளர்கள் என்ற ஒரு தரப்பு உருவானது. அவர்களிடமிருந்து இஸ்லாத்திற்கு முரணான கருத்துகளும் வெளிப்படத் துவங்கின.
கிரேக்க தத்துவத்தை எதிர்கொண்டவர்களில் முதன்மையானவர்கள் முஃதஸிலாக்கள்தாம். அவர்கள்தாம் கிரேக்க தத்துவத்தின் குழப்பங்களை எதிர்த்து அரணாக நின்றார்கள். தத்துவவியலாளர்களுடன் விவாதப்போர் புரிந்தார்கள். அவர்கள் கிரேக்க தத்துவத்தைக் கற்று அதன் வழியாக கிரேக்க தத்துவத்தை எதிர்கொண்டார்கள். இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்பதையும் அறிவுக்கு முரணாக இருக்கும் எதுவும் இஸ்லாமாக இருக்காது என்பதையும் அவர்கள் தங்கள் வாதங்களில் முன்வைத்தார்கள். எதிர்வினை இன்னொரு பக்கம் வரம்பு மீறலுக்கு இட்டுச் செல்லும். அவர்கள் ஒரு கட்டத்தில் வரம்புமீறி அறிவை அறுதியான அளவுகோலாக ஆக்கினார்கள். அறிவுக்கு முரணாக இருக்கும் ஹதீஸ்களை மறுத்தார்கள்.
முஃதஸிலாக்களுக்கு நேர் எதிர் திசையில் இருந்தவர்கள் ஹம்பலிகள். அவர்கள் கிரேக்க தத்துவத்தை படிப்பதையும் அது குறித்து பேசுவதையும் வெறுத்தவர்கள். அறிவைக் கொண்டு இஸ்லாத்தை அணுகக்கூடாது என்று வாதிட்டார்கள். இஸ்லாம் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னதை அப்படியே நம்புவதுதான் என்று வாதிட்டார்கள். முஃதஸிலாக்கள் அறிவின் பயன்படுத்துவதில் வரம்பு மீறினார்கள் எனில் ஹம்பலிகள் இஸ்லாம் சம்பந்தப்பட்ட விசயத்தில் அறிவின் பயன்பாட்டை மட்டுப்படுத்தினார்கள். ஒன்றின் எதிர்வினையாக இன்னொன்று அமைந்தது. எதிர்வினைகள் வரம்பு மீறலுக்கு இட்டுச் செல்லலாம்.
மூன்றாவது ஒரு தரப்பு அஷாயிராக்கள் தரப்பு. இமாம் அபுல் ஹசன் அல்அஷ்அரீயின் தரப்பு. ஆரம்பத்தில் இவர் முஃதஸிலா தரப்பை ஆதரித்தாலும் ஒரு கட்டத்தில் அந்த தரப்பை தவறென உணர்ந்து அதிலிருந்து முழுமையாக விலகினார். அஷாயிராகக்கள் ஹம்பலிகளைப் போல முழுமையாக விலகியும் இருக்கவில்லை. முஃதஸிலாக்களைப் போல அறிவை அறுதியான அளவுகோலாகக் கொண்டு வரம்பு மீறவும் இல்லை. ஒரு நடுநிலையான ஒரு வழியைத் தெரிவு செய்தார்கள். குர்ஆன், சுன்னாவைப் புரிந்து கொள்வதில் அறிவின் பயன்பாட்டை அவர்கள் மறுக்கவில்லை. இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினார்கள். ஆனாலும் அறிவுக்கு மேலான அம்சங்களும் இருக்கின்றன என்று அவர்கள் முன்வைத்தார்கள். அறிவால் புரிந்துகொள்ள முடியாத அறிவுக்கு மேலான அம்சங்களை அறிவுக்கு முரண் என்று கூறி மறுப்பது மடமைத்தனம் என்று என்று கூறினார்கள்.
கிரேக்க தத்துவம் உருவாக்கிய குழப்பங்களை எதிர்கொண்டதில் மேற்கூறப்பட்ட இரண்டு தரப்புக்கும் பெரிய பங்களிப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதற்குப் பிறகு இன்னொரு தரப்பு இருக்கிறது. அது மாதுரிதிய்யா தரப்பு. மாதுரிதிய்யா தரப்புக்கும் அஷாயிரா தரப்புக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. ஹனஃபீ மத்ஹபைச் சார்ந்தவர்கள் மாதுரிதிய்யா தரப்பையும் ஷாஃபிஈ மத்ஹபைச் சேர்ந்தவர்கள் அஷாயிரா தரப்பையும் ஆதரிக்கிறார்கள். அஷாயிரா, மாதுரிதிய்யா தரப்பை கிட்டத்தட்ட ஒரே தரப்பாக முன்வைக்கலாம்.
ஹம்பலி மத்ஹபே ஸலஃபித்துவம் என்று அறியப்படுகிறது. அது ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் உருவானது. இந்த தரப்பு இமாம் அஹ்மது இப்னு ஹம்பலுடன் இணைக்கப்படுகிறது. ஹிஜ்ரீ ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய இமாம் இப்னு தைமிய்யா இந்த தரப்பிற்கு மேலும் வலுவூட்டினார். இன்னும் கூடுதலான சில அம்சங்களையும் இணைத்து அதன் பக்கம் மக்களை அழைத்தார். அவரும் ஹம்பலி மத்ஹபைச் சார்ந்தவர்தாம். பிற்காலத்தில் ஒரு முஜ்தஹிதாக அறியப்பட்டார்.
வலுவான ஆளுமையான இப்னு தைமிய்யாவின் வருகைக்குப் பிறகே ஸலஃபி தஃவா வலுப்பெற்றது. முந்தைய ஹம்பலிகளுக்கு மாறாக இப்னு தைமிய்யா கிரேக்க தத்துவத்தை ஆழமாகக் கற்றார். அதற்கு விரிவான அளவில் விமர்சனம் எழுதினார். அது குறித்து சமூகத்தில் பரவியிருந்த மாயைகளை உடைத்தெறிந்தார். முஸ்லிம் தரப்பில் கிரேக்க தத்துவத்திற்கு விரிவான அளவில் விமர்சனம் எழுதியவர்கள் இமாம் கஸ்ஸாலியும் அவருக்குப் பிறகு வந்த இமாம் இமாம் தைமிய்யாவும்தான். இருவரும் தத்துவவியலாளர்களாகவும் கருதப்படுகிறார்கள். இமாம் கஸ்ஸாலி அஷ்அரீ தரப்பைச் சேர்ந்தவர். இமாம் இப்னு தைமிய்யா ஹம்பலி தரப்பைச் சேர்ந்தவர்.
ஆரம்பத்தில் மத்ஹபுகளை வெறுத்தவர்கள், ஹம்பலி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் என இரு தரப்பினராலும் ஸலஃபி தஃவா உருவானது. இப்னு தைமிய்யாவின் வருகைக்கு முந்தைய ஸலஃபி தஃவாவும் வருகைக்குப் பிந்தைய ஸலஃபி தஃவாவும் சிறிய அளவில் இயல்பில் வேறுபட்டவை. இப்னு தைமிய்யாவின் வருகைக்குப் பிறகு அது ஓரளவுக்கு அறிவுச் செயல்பாட்டை ஆதரிக்கும் தரப்பாகவும் மாறியது. ஆனாலும் அது முந்தைய அந்த வரம்புகளை தாண்டிச் செல்லவில்லை.
இப்னு தைமிய்யாவை வெறுத்தவர்களில் அஷாயிராக்களும் உள்ளடங்கும். அதற்கான காரணம், இப்னு தைமிய்யாவை ஹம்பலி தரப்பை பிரதிநிதித்துவம் செய்தார். அதற்கு ஆதரவாக அஷாயிராக்களுடன் தர்க்கப் போர்களில் ஈடுபட்டார். இரு தரப்பினரும் ஒருவர் மற்றவர் மீது வரம்புமீறி கருத்துகளை கூறியிருக்கிறார்கள். வரலாற்றில் ஹம்பலிகளுக்கும் அஷாயிராக்களுக்கும் மத்தியில் நிகழ்ந்த மோதல்கள் பிரபல்யமானவை. இன்றளவும் அவை ஏதோ ஒரு வடிவில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இப்னு தைமிய்யாவை ஹம்பலி தரப்போடு சுருக்கி அதனைத் தவிர மற்ற அனைத்து தரப்புகளையும் வழிகேடுகளாக முன்வைப்பவர்கள் வஹ்ஹாபிகளாவர்.
இந்தியாவில் இப்னு தைமிய்யாவை விரிவான அளவில் அறிமுகம் செய்தவர்கள் இமாம் ஸர்ஹன்தீயும் ஷாஹ் வலியுல்லாஹ்வும் ஆவர். அபுல் ஹசன் நத்வீ இந்த இருவருக்காகவும் தம்முடைய ‘இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு’ என்ற நூலில் தனித்தனி இரு பாகங்களை அமைத்துள்ளார். மூன்றாவது பாகம் இமாம் ஸர்ஹன்தீயைக் குறித்தும் நான்காவது பாகம் ஷாஹ் வலியுல்லாஹ்வைக் குறித்தும் பேசுகிறது. மிக விரைவில் சீர்மை வெளியீடுகளாக வெளிவரும், இன்ஷாஅல்லாஹ். இந்தியாவில் ஸலஃபி தஃவா அஹ்லே ஹதீஸ் என்று அறியப்பட்டது.
ஷாஹ் வலியுல்லாஹ் இமாம் இப்னு தைமிய்யாவுக்கு நிகரான ஆளுமை என்கிறார் அபுல் ஹசன் அலீ நத்வீ. சில விவகாரங்களில் இப்னு தைமிய்யாவையும் அவர் தாண்டிச் சென்றிருக்கிறார். அந்த வகையில் இப்னு தைமிய்யாவுடன் ஒப்பிடத்தக்க பேராளுமையாக ஷாஹ் வலியுல்லாஹ் திகழ்கிறார். அவர் எழுதிய ‘ஹூஜ்ஜத்துல்லாஹில் பாலிகா’ என்ற நூல் இன்றளவும் பல அறபுக்கல்லூரியில் பாடத்திட்டமாக இருக்கிறது. இஸ்லாத்தின் நிலைத்தன்மை, ஷரீஆவின் நோக்கங்கள் குறித்துப் பேசும் அற்புதமான நூல் அது. தொடர்ந்து அது இன்றளவும் வாசிக்கப்பட்டுக் கொண்டும் விவாதிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.
முஸ்லிம் சமூகத்தில் பரவியிருந்த பித்அத்துகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தல், கொள்கையைச் சீர்படுத்துதல், திருக்குர்ஆனை மொழிபெயர்த்து அதன் போதனைகளின் பக்கம் அழைப்பு விடுத்தல், ஹதீஸ் கலையை பரப்புதல், ஹதீஸூக்கும் ஃபிக்ஹூக்கும் மத்தியில் இணைப்பை ஏற்படுத்துதல், வலுவான முறையில் மறுப்புரைகள் வழங்குதல், புத்தகங்கள் எழுதுதல், வீழ்ச்சியில் இருந்த முஸ்லிம் அரசை பாதுகாக்க முயற்சித்தல்… இப்படி அவரது சீர்திருத்த பணிகளை சொல்லிக் கொண்டே போகலாம். அவரது அழைப்புப்பணியின் தனித்தன்மையாக மென்மையான வழிமுறையைக் குறிப்பிடலாம் என்கிறார் அபுல் ஹசன் நத்வீ. இந்தியாவில் ஸலஃபி தஃவாவிற்கு முன்னோடிகளாக இந்த இருவருமே இருக்கிறார்கள்.

இதை பற்றி இன்னும் சற்று தெளிவாக பதிவிடுங்கள்!!