முரண்பாடுகள் அற்ற வேதம்

You are currently viewing முரண்பாடுகள் அற்ற வேதம்

أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا

“அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா? அது அல்லாஹ் அல்லாத வேறு யாரிடமிருந்தாவது வந்திருந்தால் அதில் அவர்கள் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.”  (4:82)

முரண்படுதல் மனித இயல்பு. மனிதர்கள் முரண்படக்கூடியவர்கள். அவர்களின் நேற்றைய கருத்து இன்றைய கருத்தோடு முரண்படலாம். அவர்களின் இன்றைய கருத்து நாளைய கருத்தோடு முரண்படலாம். மனிதர்கள் சக மனிதர்களுடன் முரண்படுவதுபோன்று தங்களுடன்கூட முரண்படுகிறார்கள். அவர்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் சென்று கொண்டேயிருக்கிறார்கள். முரண்பாடு மனிதர்களின் பலவீனங்களில் ஒன்று. அவர்களால் முரண்படாமல் இருக்க முடியாது. மனிதர்களிடமிருந்து வெளிப்பட்ட எந்தவொன்றும் முரண்பாடுகள் இன்றி இல்லை.

இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ததப்புர்’ என்ற வார்த்தைக்கு ஆழ்ந்து கவனம் செலுத்துதல் என்று பொருள். இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்பதில் சந்தேகம் கொண்டிருப்பர்கள் இதன் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்தாதவர்கள் ஆவர். இதன் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்துபவர்கள் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி இதனை எந்தவொரு மனிதனாலும் கொண்டு வர முடியாது என்பதையும் இது இறைவனிடமிருந்து மட்டுமே வந்திருக்க முடியும் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்வார்கள்.

இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்பதில் சந்தேகம் கொண்டிருப்பவர்களுக்கு குர்ஆன் விடுக்கும் அழைப்பு இது. இது ஒரு வகையான அறைகூவலும்கூட. உங்களின் இந்த சந்தேகத்திற்கு அறியாமைதான் காரணம். நீங்கள் அதன் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்தவில்லை என்பதுதான் உங்களின் சந்தேகத்திற்கான காரணம். நீங்கள் அதன் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்தினால் அது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொள்வீர்கள்.

குர்ஆனின் வசனம் அறபு மொழியில் ’ஆயத்’ என்ற வார்த்தையைக் கொண்டு சுட்டப்படுகிறது. ஆயத் என்றால் சான்று, ஆதாரம் என்று பொருள். அதன் ஒவ்வொரு வசனமும் ஒரு சான்றுதான். ஒவ்வொரு வசனமும் அதனுடைய மூலம் அல்லாஹ் என்பதை அறிவித்துக் கொண்டே இருக்கக்கூடிய ஆதாரம்தான்.

தன்னை அப்படியே நம்பு என்று திருக்குர்ஆன் கூறவில்லை. அது தன் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்தும்படி கூறுகிறது. அது உங்களை சிந்தித்து முடிவெடுக்கும்படி கூறுகிறது. அது உங்களை சிந்திக்கத் தூண்டுகிறது. தேடலும் முயற்சியும் உங்களை இறைவழிகாட்டலின் பக்கம் இட்டுச் செல்லும்.

நீங்கள் இறைவனிடமிருந்து வழிகாட்டலை விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் இந்தக் குர்ஆனை வாசித்துப் பார்க்கும்போது நிச்சயம் அது உங்களை ஈர்க்கும். அதன் ஒலி அமைப்பு, வாசக அமைப்பு, வழிகாட்டல்கள், சட்டங்கள் என அதன் அத்தனை அம்சங்களும் உங்களை ஈர்க்கும். நீங்கள் அதன் அரவணைப்பில் நிம்மதியான, மகிழ்ச்சியான, அர்த்தம்நிரம்பிய ஒரு வாழ்க்கையை உங்களால் வாழ முடியும்.

திருக்குர்ஆன் முரண்பாடுகள் அற்ற வேதம். அதன் ஒரு வசனம் இன்னொரு வசனத்திற்கு விளக்கமாக அமையுமே தவிர, அதன் ஒரு வசனம் இன்னொரு வசனத்தை வலுவூட்டுமே தவிர, அதன் ஒரு வசனம் இன்னொரு வசனத்தின் தொடர்ச்சியாக அமையுமே தவிர அதன் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படாது. அதன் வசனங்கள் நுணுக்கமான இழைகளால் இணைக்கப்பட்டுள்ளன. ஆழ்ந்து கவனம் செலுத்துபவர்களாக அந்த நுணுக்கமான, அற்புதமான இழைகளைக் கண்டுகொள்ள முடியும்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply