ததப்புர் என்னும் செயல்பாடு – 2

You are currently viewing ததப்புர் என்னும் செயல்பாடு – 2

அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் மத்தியில் இணைப்புப் பாலமாக இருப்பது திருக்குர்ஆன்தான். அதன் வழியாகவே அல்லாஹ் தன் அடியார்களுடன் உரையாடுகிறான். அவன் நேரடியாக அவர்களுடன் உரையாடுவதில்லை. மனிதர்கள் தங்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை திருக்குர்ஆனிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். நாம் தேடுவதை திருக்குர்ஆனில் பெற்றுக் கொள்ள முடியும்.  

திருக்குர்ஆனின் வசனங்களை வாசிப்பது முதல் நிலை. வாசித்தவற்றை சரியாகப் புரிந்து கொள்வது இரண்டாவது நிலை. அதில் ஆழ்ந்து கவனம் செலுத்துவது மூன்றாவது நிலை. நாம் நமக்குத் தேவையான, நமக்கு மட்டுமே அவசியமான வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வதற்கு மூன்றாவது நிலை மிக அவசியம்.

நாம் எந்தவொன்றையும் திரும்பத் திரும்ப படிக்கும்போது அதில் பல்வேறு விசயங்கள் வெளிப்படுவதை நாம் உணர முடியும். மனிதர்களின் வார்த்தைகளுக்கே இந்த ஆற்றல் இருக்கிறது எனில் அல்லாஹ்வின் வார்த்தைகள் எப்படிப்பட்ட ஆற்றல் கொண்டவையாக இருக்கும்? நாம் ஒவ்வொரு முறை ஆழ்ந்து கவனம் செலுத்தும்போதும் நமக்குப் புதிய புதிய விசயங்கள் தெளிவாகிக் கொண்டே செல்லும்; நம்முடைய மூளையின் முடிச்சுகள் அவிழ்ந்து கொண்டே செல்லும்.

நாம் எதை மீண்டும் மீண்டும் படிக்கிறோமோ அது நம் வாழ்க்கையில் ஆழமாக தாக்கம் செலுத்தும். அது நம்முடைய சொல்லிலும் செயலிலும் வெளிப்படும். திருக்குர்ஆன் நம் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தவில்லை எனில், அது நம்முடைய சொல்லிலும் செயலிலும் வெளிப்படவில்லை எனில் அதை நாம் வாசிக்கவில்லை என்று பொருள் அல்லது அதை வாசிக்க வேண்டிய முறைப்படி வாசிக்கவில்லை என்று பொருள்.  

திருக்குர்ஆனில் ஆழ்ந்து கவனம் செலுத்துவதற்கு, அவற்றின் வசனங்களை சிந்தித்துப் பார்ப்பதற்கு ஒருவர் அறிஞராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது அறிஞர்களுக்கு மட்டுமே உரித்தான வேதமும் அல்ல. அறிஞர்கள், பொதுமக்கள் அனைவரும் உரிய வேதம். ஒவ்வொருவரும் அவர்களுடைய ஆற்றலுக்கேற்ப, மனத்தூய்மைக்கேற்ப தமக்கானவற்றை அதிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். மனிதர்கள் அறிவுரை பெற்றுக் கொள்ளும்பொருட்டு இந்தக் குர்ஆனை இலகுபடுத்தியுள்ளோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply