ஆரோக்கியம் அளப்பரிய அருட்கொடை என்பதை அதை இழந்த பிறகுதான் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம். அறபு மொழியில் ஆஃபியா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அது எல்லா வகையான ஆரோக்கியத்தையும் குறிக்கும் ஒரு செறிவான வார்த்தை. உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், அடிப்படையான உலகியல் வசதிகளைப் பெற்றிருப்பது, மார்க்க அடிப்படையில் பிறழ்வுகள் இன்றி நிலைத்திருப்பது, நல்ல வாழ்க்கைத்துணையை, குழந்தைகளைப் பெற்றிருப்பது… இப்படி ஒவ்வொன்றையும் அது குறிக்கிறது. ஆரோக்கியம் என்பது உடலளவில் மட்டுமல்ல. இப்படி ஒவ்வொன்றிலும் நமக்கு அவசியமாகிறது.
இப்படிப்பட்ட முழுமையான ஆரோக்கியம் அல்லாஹ் நமக்கு வழங்கும் மகத்தான அருட்கொடை. பாவிகளுக்கு இது வழங்கப்படாது. அல்லாஹ்வை நெருங்கிச் செல்லும் அடியார்களுக்கே இத்தகைய மகத்தான அருட்கொடை வழங்கப்படுகிறது. அவனை நெருங்கிச் செல்பவர்கள் தேவையற்ற பயத்திலிருந்தும் பதற்றத்திலிருந்து விடுபட்டு விடுவார்கள். அவனை நெருங்கிச் செல்பவர்கள் அவனுடைய அரவணைப்பை, அன்பை உணர்வார்கள்.
இப்படிப்பட்ட முழுமையான ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் கேட்குமாறு நபியவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார்கள். பின்வரும் பிரார்த்தனையில் வாசகங்களைக் கவனித்துப் பாருங்கள்:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ استُرْ عَوْرَاتي، وآمِنْ رَوْعَاتي، اللَّهمَّ احْفَظْنِي مِنْ بَينِ يَدَيَّ، ومِنْ خَلْفي، وَعن يَميني، وعن شِمالي، ومِن فَوْقِي، وأعُوذُ بِعَظَمَتِكَ أنْ أُغْتَالَ مِنْ تَحتي
“அல்லாஹ்வே! இந்த உலகிலும் மறுவுலகிலும் உன்னிடம் நான் ஆரோக்கியத்தை வேண்டுகிறேன். அல்லாஹ்வே! நான் உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன். என் மார்க்கத்திலும் என் உலக விவகாரங்களிலும் என் குடும்பத்தினர் விசயத்திலும் என் செல்வத்திலும் நான் உன்னிடம் ஆரோக்கியத்தை வேண்டுகிறேன். அல்லாஹ்வே! என் குறைகளை, குற்றங்களை மறைத்து விடுவாயாக. என் அச்சத்தைப் போக்கி அமைதிப்படுத்துவாயாக. அல்லாஹ்வே! எனக்கு முன்னாலிருந்தும் எனக்குப் பின்னாலிருந்தும் என் வலப்பக்கமிருந்தும் என் இடப்பக்கமிருந்தும் எனக்கு மேலிருந்தும் வரக்கூடிய தீங்குகளிலிருந்து என்னைப் பாதுகாத்திடுவாயாக. நான் திடீரென தண்டிக்கப்படுவதிலிருந்து உன் மகத்துவத்தைக் கொண்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.“ (அபூதாவூத், திர்மீதி)
இது காலையிலும் மாலையிலும் கேட்க வேண்டிய பிரார்த்தனைகளுள் ஒன்று. இதிலிருள்ள வாசகங்களை கவனித்துப் பாருங்கள். அவை நம்முடைய இயல்பையும் இயலாமையையும் அப்பட்டமாக நமக்கு உணர்த்தி விடுகின்றன. அவை அல்லாஹ்வின் பேராற்றலை, நாம் எந்த அளவு அவனை சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தி விடுகின்றன.
எந்தச் சமயத்தில் என்ன நிகழும் என்று யாருக்கும் தெரியாது. எந்தப் புறத்திலிருந்து ஆபத்துகள் வந்து சேரும் என்று நமக்குத் தெரியாது. நமக்குத் தெரிந்தவை எல்லாம் வெறும் கணிப்புகள்தாம். நம்முடைய குறுகிய அனுபவங்களைக் கொண்டே நாம் கணிக்கிறோம். நம்முடைய கடும் உழைப்பு, பெரும் திட்டம் ஒரு நிமிடத்தில் ஒன்றுமில்லாமல் ஆகிவிடலாம்.
பாவங்கள் நம்முடைய ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன என்பதனால்தான் நாம் முதலில் பாவங்களுக்கான மன்னிப்பைக் கோரிவிட்டு ஆரோக்கியத்தைக் கேட்கிறோம். நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனையில் ‘ஆஃபியா’ என்ற வார்த்தைக்கு முன்னால் ‘அஃப்வு’ என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. ‘அஃப்வு’ என்றால் பாவங்களை கண்டும் காணாமல் மன்னித்து விட்டு விடுதல் என்று பொருள். அல்லாஹ்வே! எங்களின் பாவங்களின் காரணமாக தண்டித்து விடாதே என்று நாம் கேட்கிறோம்.
நாம் பாவங்களிலிருந்து விலகியவர்கள் அல்ல. நாம் பாவங்களில் ஈடுபடுகிறோம். ஆனாலும் அல்லாஹ் நம் மீது கருணை காட்டுகிறான். அவன் நம்முடைய பாவங்களை மறைக்கிறான், மன்னிக்கிறான். நாம் உள்ளபடியே வெளிப்பட்டு விட்டால் இழிவடைந்து விடுவோம். பாவம் செய்ய விடாமல் நம்மைப் பாதுகாப்பதும் அவன்தான். பாவம் செய்து விட்டால் நம்முடைய பாவங்களை மறைத்து விடுவதும் அவன்தான். அவன் நம்பிக்கையாளர்களை இழிவுபடுத்துவதில்லை.
