“உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதுபோன்றே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் தக்வா உடையவர்களாக ஆகலாம்.” (2:183)
நோன்பு ஒரு மகத்தான அருட்கொடை. அது நம்மை தக்வா உடையவர்களாக, இச்சைகளின் பிடியிலிருந்து விடுபட்ட சுதந்திரமான மனிதர்களாக மாற்றுகிறது. ஷைத்தான்கள் மனிதர்களின் இச்சைகளைப் பயன்படுத்தியே அவர்களை வழிகெடுக்கிறார்கள். ஷைத்தான்கள் மனிதர்களை இச்சைகளுக்கு அடிமையானவர்களாக ஆக்கி அவர்களை பாவங்களில் உழல வைக்கிறார்கள். படைப்பின் நோக்கத்தை மறக்கடித்து வாழ்க்கை என்பது அனுபவித்தல்தான் என்ற மாயைக்குள் அவர்களை சிக்க வைக்கிறார்கள். இஸ்லாத்தைக் கொண்டு விழிப்படையாத மனிதர்கள் ஷைத்தான்களின் சதி வலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
ரமலான் மாதம் ஈமானைப் புதுப்பிப்பதற்கான மாதம். ரமலான் மாதம் நம்மை நாமே சுயபரிசோதனை செய்வதற்கான மாதம். ரமலான் மாதம் எல்லா வகையான அடிமைத்தனங்களிலிருந்து நம்மை நாமே மீட்டெடுப்பதற்கான மாதம். இந்த மாதத்தில் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள். அவர்களின் சூழ்ச்சிகள் வீரியமிழக்கின்றன. இது நம்பிக்கையாளர்களுக்கு வசந்த காலம். பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் நன்மைகள் கொள்ளையடிக்கப்படுவதற்குமான காலம். நாம் போட்டி போட்டுக் கொண்டு வழிபாடுகளிலும் நற்செயல்களிலும் ஈடுபடுவதற்கு இதுதான் உகந்த காலம். இதுதான் போட்டியிட்டுக் கொண்டு செயல்படுவதற்கான காலம். எதிரி பலவீனமாக இருக்கும்போது நாம் முழு பலத்துடன், வீரியத்துடன் செயல்பட வேண்டியிருக்கிறது.
திருக்குர்ஆன் மனிதர்களுக்கும் அல்லாஹ்வுக்குமான தொடர்பை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. அது ஷைத்தானின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி நம்பிக்கையாளர்களை விழிப்பு நிலையில் இருப்பவர்களாக ஆக்குகிறது. ரமலான் மாதத்தில்தான் திருக்குர்ஆன் அருளப்படத் தொடங்கியது. குர்ஆனை அருள்வதற்கு அல்லாஹ் ஏன் ரமலான் மாதத்தைத் தேர்ந்தெடுத்தான்? அவனுடைய தெரிவு ஆயிரம் அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம். அவனிடமிருந்து வெளிப்படும் எந்தவொன்றும் நோக்கமற்றது அல்ல.
நோன்பின் நோக்கம் தக்வாவை அடைவதுதான். நோன்பு மனிதர்களை தக்வா உடையவர்களாக மாற்றுகிறது. அவர்கள் மனக்கட்டுப்பாடு கொண்டவர்களாக மாறுகிறார்கள். தக்வா உடையவர்களே திருக்குர்ஆனிலிருந்து பயனடைய முடியும். தக்வா உடையவர்களுக்குத்தான் அது வழிகாட்டும். அல்லாஹ்வின் வழிகாட்டல்களிலிருந்து பயனடைய விரும்புபவர்களுக்குத்தான் அது வழிகாட்டும். மனக்கட்டுப்பாடு கொண்டவர்களால்தான் ஷைத்தானின் சதி வலைகளில் சிக்காமல் தப்ப முடியும். அவர்கள்தாம் அல்லாஹ்வின் வழிகாட்டலைக் கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள். நோன்பு நம்மை அகரீதியான அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்தி திருக்குர்ஆனிலிருந்து பயனடையும் தகுதி கொண்டவர்களாக நம்மை மாற்றுகிறது.
