பொறாமை

You are currently viewing பொறாமை

பொறாமை யார் மீதெல்லாம் ஏற்படுகிறது, ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விகள் கொஞ்சம் சிக்கலானவை. அதற்குச் சில காரணங்களை நம்மால் வரையறுக்க முடியும். ஆனால் ஒட்டுமொத்தமாக அது இப்படித்தான் என்று நம்மால் உறுதியாக வரையறுத்துவிட முடியாது. நெருக்கம் பொறாமையை ஏற்படுத்தலாம். உங்கள் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் உங்கள் மீது அதிகம் பொறாமை கொள்ளலாம். அதே சமயம் அவர்கள் உங்கள் மீது அக்கறை கொண்டவர்களாகவும் தக்க சமயத்தில் உங்களுக்கு உதவக்கூடியவர்களாகவும் இருக்கலாம். சில சமயம் நீங்கள் ஒருவர் மீது கொண்டிருக்கும் பொறாமைகூட உங்களுக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தி அவருக்கு உதவிசெய்யக்கூடியவராக உங்களை ஆக்கிவிடலாம். அவருக்குக் கிடைக்கும் வசதியும் புகழும் உங்கள் பொறாமையைத் தூண்டிவிடலாம். அவருக்கு ஏற்படும் சிரமம் உங்கள் பொறாமையை தணித்து உங்கள் அக்கறையைத் தூண்டி விடலாம். இந்தப் பொறாமை எங்கிருந்து, எப்படி தோன்றுகிறது என்பது அறுதியிட்டுக் கூற முடியாது ஒன்றுதான். அறிமுகம் இல்லாதவர்கள்கூட உங்கள் மீது பொறாமை கொள்ளலாம்.

பிரபல்யமாக இருப்பவர்கள் ஏன் வசைபாடப்படுகிறார்கள்? அவர்களின் சிறு குறைகள்கூட பூதாகரமாக்கப்பட்டு விவாதிக்கப்படுவதேன்? ஒரு கூட்டம் அவர்களை வரம்புமீறி கொண்டாடும்போது அந்தக் கொண்டாட்டம் இன்னொரு கூட்டத்திற்கு எரிச்சலை, பொறாமையை ஏற்படுத்துகிறது. அது அவர்களின் சறுக்கல்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. சிறிய விசயம் கிடைத்துவிட்டாலும் அதனை ஊதிப் பெரிதாக்கி தன் மனஅரிப்புகளைத் தீர்த்துக் கொள்கிறது. கொண்டாடப்படுபவர்கள் வசைபாடப்படவும் படுவார்கள் என்பது இங்கு செயல்படும் விதியோ என்னவோ!

அதிகம் வசைபாடப்படுபவர்கள், இழிவுபடுத்தப்படுபவர்கள் கர்வம் கொள்பவர்கள்தாம். அவர்கள் கொண்டிருக்கும் கர்வமும் அதற்கு ஒரு காரணமாகிவிடுகிறது. ஒருவரின் சுயமோகத்தை மற்றவர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். அது அவர்களின் பொறாமையுணர்வைத் தூண்டுகிறது. பணிவை வெளிப்படுத்துபவர்கள் தவறிழைத்தாலும் நாம் அவர்களை விட்டுவிடுவோம். பணிவு பல சமயங்களில் நம்மைப் பாதுகாக்கும் அரணாக அமைந்துவிடுகிறது.

தமக்குத் தாமே அநீதி இழைத்தல்

தமக்குத் தாமே ஒருவர் அநீதி இழைப்பாரா? தர்க்கப்படி, அப்படிச் செய்ய மாட்டார் என்றுதான் நாம் பதிலளிப்போம். ஆனாலும் அப்படிச் செய்யும் மனிதர்களை நாம் எதிர்கொண்டு கொண்டேயிருக்கிறோம். மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைக்கக்கூடியவர்கள்தாம். இஸ்லாமியக் கண்ணோட்டமும் நம் அனுபவங்களை வலுப்படுத்துகிறது. ஏன் அப்படிச் செய்கிறார்கள்? அதற்கான காரணங்கள் மாறுபடலாம். கர்வம், பொறாமை, வெறுப்பு, காழ்ப்பு, கோபம், மிகைக்கும் இச்சை இப்படி காரணங்களை நாம் வகைப்படுத்த முடியும்.

தமக்குத் தீங்கு தரக்கூடியது என்று தெரிந்தும் மனிதர்கள் தீய, பாவமான செயல்களில் ஈடுபடத்தான் செய்கிறார்கள். அவர்களின் அறிவு அவற்றைத் தவறு என்று கூறினாலும் மனம் வேறு சாக்குப்போக்குகளைக் கொண்டு அவற்றை ஒதுக்கி விடுகிறது.

சம்பந்தமேயில்லாத புறத்திலிருந்து தீங்கு நம்மை வந்தடைய முடியுமா? சம்பந்தமேயில்லாத புறத்திலிருந்து நன்மை நம்மை வந்தடைய முடியும் எனில் தீங்கும் நம்மை வந்தடைய முடியும். அவர் ஏன் உங்களுக்கு எதிராக இப்படிச் செய்ய வேண்டும்? என்ற கேள்வியை நாம் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்கொள்ளக்கூடும் அல்லது நமக்கு நாமே இந்தக் கேள்வியை கேட்கக்கூடும். பொறாமையோ இனம்புரியாத வெறுப்போ இருக்கலாம்.

பொறாமை உள்ளிருந்து நிதானமாகச் செயல்படக்கூடியது. அது மறைந்திருந்து தாக்குதல் தொடுக்கக்கூடியது. அது சந்தர்ப்பங்களை உருவாக்குவதோடு கிடைக்கும் எந்தச் சந்தர்ப்பத்தையும் விட்டு வைக்கவும் செய்யாது. மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்வதற்கு, தங்களுக்குத் தாங்களே இழப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு பொறாமையும் ஒரு காரணம். குறிப்பிட்ட இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும், அந்த இயக்கத்திலிருந்து தொடர்ந்து பயனடைந்து கொண்டிருக்கும் அந்த மனிதர் தம் இயக்கத்திற்கு எதிராக ஏன் செயல்பட்டார் என்று நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதில் இது. தம்முடன் இணைந்து பணிபுரியும் தம் சக ஊழியரின் மீதுள்ள பொறாமையே அவரை இப்படிச் செயல்படத் தூண்டியது. அதற்குப் பிறகு இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தும் மனிதர்களோடு சேர்ந்து அவரும் வருந்தத்தான் செய்வார். வருத்தமும் பழியும் ஒரு சேர அவரைத் தாக்கும்.      

பொறாமை குறித்தும் அது செயல்படும் விதம் குறித்தும் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் எழுத விரும்புகிறேன். எனக்கு அதிகம் திகைப்பை ஏற்படுத்துவது இந்த பொறாமை எதிர்பாராத புறத்திலிருந்து உருவாகி வருவதும் கடும் விளைவுகளை ஏற்படுத்துவதும்தான். இரு சகோதரர்களுக்கு மத்தியில் நண்பர்களுக்கு மத்தியில் உறவுகளுக்கு மத்தியில் உருவாகும் பொறாமை சில சமயங்களில் எதிர்பாராத, நம்ப முடியாத கடும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. தொடர்ந்து இது பேசப்பட்டு வருகின்ற ஒன்றுதான் என்றாலும் அதிலிருந்தும் நம்ப முடியாமை மீண்டும் மீண்டும் பேச வைக்கிறது, திகைப்பை ஏற்படுத்துகிறது. இது குறித்து நானும் ஒரளவுக்கு எழுதியிருக்கிறேன் என்றாலும் அதன் முதன்மையான விசயங்களைக் குறித்து இன்னும் பேசவில்லை என்றே தோன்றுகிறது. 

பொறாமை என்ன செய்யும்? கண்களைக் குருடாகக்கி, காதுகளைச் செவிடாக்கி உள்ளத்தை ஊனமாக்கிவிடும். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பேருரு கொண்டு கொடிய அரக்கனைப் போன்று பின்விளைவுகள் எதுவும் யோசிக்காமல் அநியாயமான முறையில் செயல்படத் தொடங்கிவிடும். ஆதமின் ஒரு மகன் இன்னொரு மகனை ஏன் கொன்றான்? வடிகட்டிய பொறாமையே அவனை கொலை செய்யத் தூண்டியது. அந்தப் பொறாமையே மனிதர்களுக்கு மத்தியில் பல்வேறு வடிவங்களில் முறைகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பொறாமையை எப்படிக் கண்டறிவது? அதனை சம்பந்தப்பட்டவர்தான் உணர முடியும். அவரே அதிலிருந்து விலக முடியும். சில சமயங்களில் எதிரிகளின் காழ்ப்பைவிட நண்பர்களின், உடன்பணிபுரிபவர்களின் பொறாமை வீரியமானதாக, அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகக்கூட இருக்கலாம். இந்த விசயத்தில் திருக்குர்ஆனின் வழிகாட்டுதல் கச்சிதமானது. அது எல்லோரையும் சந்தேகக்கண்டுகொண்டு பார்க்கச் சொல்லாமல் அந்த விவகாரத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கச் சொல்கிறது. அது மறைவான தீங்குகளின் வரிசையில் பொறாமைக்காரனின் பொறாமையும் சேர்த்து அவற்றிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருமாறு நம்பிக்கையாளர்களை அறிவுறுத்துகிறது. அல்ஃபலக் என்ற அத்தியாத்தை வாசித்துப் பாருங்கள். அதில் கூறப்பட்டுள்ள விவகாரங்கள் குறித்து, அவற்றுக்கிடையே காணப்படும் ஒற்றுமை குறித்து சிந்தனை செய்யுங்கள்.   

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply