வெறுப்பிலிருந்து விடுபடுவது

You are currently viewing வெறுப்பிலிருந்து விடுபடுவது

சண்டை பிடிக்க வேண்டும் என்ற உணர்வு எங்கிருந்து வருகிறது? அது ஒரு மன அரிப்புபோல தொடங்குகிறது. அதன் விளைவாகவே நாம் வம்பிழுக்கிறோம். உள்ளுக்குள் வைத்திருக்கும் வெறுப்பை வெளிப்படுத்துகிறோம். உண்மையில் நாம் சொல்லும் காரணம் காரணமாக இருக்காது. தேங்கியிருக்கும் வெறுப்புதான் அசலான காரணமாக இருக்கும்.

மனமார விட்டுக் கொடுத்தல் ஒரு வகை. வேறு வழியில்லாமல் இயலாமையின் காரணமாக விட்டுக் கொடுத்தல் இன்னொரு வகை. மனமார விட்டுக் கொடுக்கும்போது மனதில் எதுவும் தேங்குவதில்லை. இயலாமையின் காரணமாக நாம் விட்டுக் கொடுக்கும்போது வெறுப்பை மனதில் தேக்கி வைக்கிறோம். உண்மையில் நாம் விட்டுக் கொடுப்பதில்லை. வேறொரு சந்தர்ப்பத்திற்காக வெறுப்பை தேக்கி வைக்கிறோம். நாம் யார் மீது வெறுப்பு கொண்டிருக்கிறோமோ அவர் ஏதேனும் ஒரு தவறில் வீழ்ந்து விட்டால், வேறு எங்காவது மாட்டிக் கொண்டால் அதையே சாக்காகக் கொண்டு தேக்கி வைத்த வெறுப்பை நாம் கொட்டுகிறோம். அந்தச் சமயத்தில் அந்த வெறுப்பு நலம்விரும்பியின் வடிவில் வெளிப்படுகிறது.

மன்னிப்பது என்பது இயலாமையின் காரணமாக நிகழ்வதல்ல. தண்டிப்பதற்கான வாய்ப்பு இருந்தும் தண்டிக்காமல் மனதில் எதையும் தேக்கி வைக்காமல் மன்னித்து விடுவதுதான் உண்மையில் மன்னிப்பாகும். அது அல்லாத மற்றவை தேக்கி வைத்தல்கள். அவை காழ்ப்புகளாக உள்ளத்தில் தேங்குகின்றன. நம்பிக்கையாளர்களைக் குறித்து “அவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவார்கள். மனிதர்களின் தவறுகளை கண்டும் காணாமல் விட்டு விடுவார்கள்” என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இந்த இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்தால்தான் பயனளிக்கும்.

இருவருக்குமான சண்டையில் ஒருவர் விட்டுக் கொடுக்கிறார் எனில் விட்டுக் கொடுக்கப்பட்டவர் அதிகபட்ச பணிவை வெளிப்படுத்துவதன்மூலமும் விட்டுக் கொடுத்தவருக்கு ஏதேனும் ஒரு வகையில் உபகாரம் செய்வதன்மூலமும் அவர் மனதில் தேங்கும் வெறுப்பை ஓரளவு நீக்க முடியும் என்று கருதுகிறேன். மனிதர்கள் உபகாரத்தின் அடிமைகள். உபகாரம் மனிதர்களை நெகிழ வைத்து விடும். நம் மீது வெறுப்பு கொண்டவர்களுக்கு உபகாரம் செய்வதன்மூலமாக அவர்களின் வெறுப்பை மட்டுப்படுத்த முடியும். தீமையை நன்மையைக் கொண்டு எதிர்கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் கூறுவது இந்தப் பொருளில்தான். அது கடும் பகைவனையும் நெருங்கிய நண்பனாக மாற்றும் அற்புதமான நடவடிக்கை.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply