“நீங்கள் ஒன்றை வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கலாம். நீங்கள் ஒன்றை விரும்பலாம். அது உங்களுக்குத் தீமையானதாக இருக்கலாம். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.” (திருக்குர்ஆன் 2:216)
அல்லாஹ்வின் கட்டளை என்று தெரிந்துவிட்டால் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதனைச் செயல்படுத்துங்கள். உங்களின் அறிவு எல்லைக்குட்பட்டது. அந்த எல்லையைத் தாண்டி அதனால் செல்ல முடியாது. ஒன்றை நீங்கள் நல்லதெனக் கருதலாம். ஆனால் அது உங்களுக்குத் தீங்களிப்பதாக இருக்கலாம். ஒன்றை நீங்கள் கெட்டதெனக் கருதலாம். ஆனால் அது உங்களுக்கு நன்மையளிப்பதாக இருக்கலாம். இந்த விசயத்தில் முடிவு செய்யும் உரிமை அல்லாஹ்வுக்கு இருக்கிறது. ஏனெனில் அவன் அனைத்தையும் படைத்தான். அவன்தான் அனைத்தையும் நிகழ்த்துகிறான். ஒவ்வொன்றையும் குறித்து நன்கறிந்த அல்லாஹ் உங்களுக்கு என்ன கட்டளை இட்டுள்ளானோ அதனைச் செயல்படுத்துங்கள். ஒவ்வொன்றையும் நிகழ்த்தும் அல்லாஹ் உங்களுக்கு எதை வழங்கியுள்ளானோ அதனை மனமுவந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
அவனுடைய கட்டளையில், அவன் அமைத்த விதியில் நன்மை இருக்கிறது. அந்தச் சமயத்தில் அதனை உங்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை என்றால் பின்னால் ஒரு கட்டத்தில் அதுதான் உங்களுக்கு நல்லது என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.
அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன். அவனுடைய அறிவு எல்லைக்குட்பட்டது அல்ல. இங்கு அவனுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. ஒவ்வொன்றையும் அவன்தான் படைத்தான். தான் படைத்த ஒவ்வொன்றையும் குறித்து அவன் நன்கறிவான். அவனே விவகாரங்களை நிகழ்த்துகிறான். அவனுடைய அனுமதியின்றி எதுவும் இங்கு நிகழ்ந்துவிட முடியாது.
ஒரு நம்பிக்கையாளன் மீண்டும் மீண்டும் தன் அனுபவங்களின் வாயிலாக இந்த வசனத்தின் எதார்த்தத்தை உணர்ந்து கொண்டேயிருப்பான். அல்லாஹ்வின் கட்டளைகளை, அவன் நமக்கு அளித்த வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால் நாம் எந்த இழப்பிற்கும் உள்ளாகி விட மாட்டோம். அவ்வாறு பின்பற்றுவதில்தான் நம்முடைய இவ்வுலக வெற்றியும் மறுவுலக வெற்றியும் அடங்கியுள்ளது. நம்முடைய வெற்றியும் கண்ணியமும் மன நிறைவும் அவனுடைய மார்க்கத்தில்தான் இருக்கிறது.
நாம் அவனுடைய வழிகாட்டல்களைப் புறக்கணித்தால், அவனுடைய விதியை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அதனால் நமக்குத்தானே இழப்பே அன்றி அவனுக்கோ அவனுடைய மார்க்கத்திற்கோ எந்த இழப்பும் இல்லை. அவன் தேவையற்றவன். நாம்தாம் தேவையுடையவர்கள். அவனுடைய மார்க்கம் எல்லா வகையிலும் மேலோங்கிய தீரும், நாம் அதனை வலுப்படுத்தினாலும் அல்லது வலுப்படுத்தாவிட்டாலும் சரியே.
