செயல்படுங்கள்

You are currently viewing செயல்படுங்கள்

“செயல்படுங்கள், ஒவ்வொருவரும் தாம் எதற்காக படைக்கப்பட்டார்களோ அதை நோக்கி இலகுபடுத்தப்படுவார்கள்” (நபிமொழி)

ஒவ்வொரு முறையும் இந்த நபிமொழி வாசகத்தை படிக்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. விதியை அற்புதமான முறையில் முன்வைக்கும் வாசகம் இது. விதியின் மீதான உங்களின் நம்பிக்கை உங்களை செயலின்மையின் பக்கம் இட்டுச் சென்று விடக்கூடாது. அது உங்களை செயல்படத் தூண்டும் அற்புதமான நம்பிக்கை. நீங்கள் ஆற்ற வேண்டிய பணிகளை நீங்கள் மட்டுமே ஆற்ற முடியும். உங்களின் இடத்தை நீங்கள் மட்டுமே நிரப்ப முடியும். உங்களுக்கானது உங்களைத் தவிர வேறு எங்கும் சென்றடைய முடியாது.

நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் விரும்பும் பாதையில் உங்களுக்கு இலகுபடுத்தப்பட்ட வழியில் செல்ல வேண்டியது. முடிவுகளை எண்ணி நீங்கள் பின்வாங்க வேண்டியதில்லை. உங்களைக் கொண்டு என்ன நிகழ வேண்டுமோ அது நிகழ்ந்து விடும். பெருங்கடலின் சிறு துளிகளாக நீங்கள் இருப்பீர்கள். அதற்கு அதிகமாகவும் இருப்பீர்கள். நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் மற்றவர்கள் பார்ப்பதற்கு கடினமானவையாக, சிரமமானவையாக, சிக்கல் நிரம்பியவையாகத் தெரிந்தாலும் அவை உங்களுக்கு இலகுவானவையாக, தெளிவானவையாக மாறிவிடும். செயல்படுங்கள் என்பதே உங்களுக்கு இறைவன் இட்டுள்ள ஆணை.  

செயல்படுவது மட்டுமே நம்முடைய கடமை. அதற்கான கூலி நம்முடைய வாழ்நாளில் கிடைக்கலாம் அல்லது நமக்குப் பிறகு வரக்கூடியவர்கள் அதன் பலனை அறுவடை செய்யலாம் அல்லது அதற்கான கூலி நம்முடைய வாழ்நாளில் கிடைக்காமலும் போகலாம். ஆனால் நம்முடைய நோக்கம் சரியானதாக இருந்தால் நாம் அல்லாஹ்வின் திருப்தியையும் அவனிடத்தில் கூலியையும் இவ்வுலகில் மனநிறைவையும் அடைவோம்.

ஒரு நம்பிக்கையாளன் இவ்வுலகில் தான் செய்யும் நற்செயல்களின் பலன்களை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும் என்று எண்ண மாட்டான். அவன் மறுமையை முன்னிறுத்தி வாழக்கூடியவன். அங்குதான் அவனுக்கான முழுமையான கூலி கிடைக்கும். ஒரு நம்பிக்கையாளன் கொண்டிருக்கும் இந்தப் பார்வை அவனையும் மற்றவர்களையும் வேறுபடுத்தும் அடிப்படையான அம்சங்களுள் ஒன்று. இவ்வுலகில் தன்னுடைய செயல்பாடுகளுக்கான கூலியை பெறாவிட்டாலும் அவன் நிராசையடைய மாட்டான். ஆனால் மற்றவர்கள் அப்படியல்ல. அவர்கள் நிராசை என்னும் புதைகுழியில் விழுந்து விடுகிறார்கள். அவர்களிடமிருந்து வெளிப்படும் புலம்பல்கள் அடுத்து வரும் செயல்பாட்டாளர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன.

அல்லாஹ் நற்செயல்களை, பயனுள்ள செயல்பாடுகளை வீணாக்கி விடுவதில்லை. அவன் இவ்வுலகில் அமைத்த நியதிகளுள் ஒன்று, இங்கு நல்லவை நீடிக்கும். மற்றவை நீடிக்க முடியாது. கலங்கிய நீரோடை தெளிந்து விடும். கலங்கல் தற்காலிகமானது. தெளிவு அதன் நிரந்தரமான பண்பு. இங்குள்ள தீய சக்திகள் உங்களை அச்சுறுத்தலாம். ஆனால் அவை தம்மைத் தாமே அழித்துக் கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை. பொறாமையும் வெறுப்பும் காழ்ப்பும் அவர்களை ஒன்றிணைக்கின்றன. ஆனால் அவை அவர்களை அழித்தும் விடும். திருக்குர்ஆன் கூறுவதுபோன்று, நீங்கள் அவர்கள் இணைந்திருக்கிறார்கள் என்று எண்ணுவீர்கள். ஆனால் அவர்களின் உள்ளங்கள் பிரிந்து கிடக்கின்றன. அன்பின், சகோதரத்துவத்தின் அடிப்படையில் அல்லாமல் வெறுப்பின் அடிப்படையில் இணைபவர்கள் அதனால் அழிந்தும் விடுவார்கள். கடந்த கால வரலாறுகள் இதற்குச் சான்று. அல்லாஹ்வின் வாக்குறுதி ஒருபோதும் பொய்யாகாது.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply