மற்றவர்கள் எரிச்சலடைவார்கள் என்று தெரிந்தும் நாம் பெருமையடிக்கிறோம். மற்றவர்கள் அடிக்கும் பெருமை நமக்கு எரிச்சலூட்டினாலும் நாமும் அதைப் போலவே பெருமையடிக்கிறோம். இது நாம் செய்யும் தவறுகளை நாம் உணராமலில்லை என்பதையே காட்டுகிறது. நாம் பொய்யான வாதங்களை மீண்டும் மீண்டும் முன்வைப்பதன்மூலம் அவற்றை உண்மையென நம்ப ஆரம்பிக்கின்றோம். நம் பார்வையில் பொய்கள் இயல்பானவையாக உண்மைகள் அந்நியமானவையாக ஆகிவிடுகின்றன. இயல்பை தொலைத்தவர்கள் இயல்பானவர்களாக இயல்பு நிலையில் இருப்பவர்கள் அந்நியமானவர்களாக பார்க்கப்படுவது இந்தச் சூழலின் பெரும் துரதிஷ்டம்.
மனிதர்களிடம் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ பெருமையடிக்கும் பண்பு காணப்படத்தான் செய்கிறது. அது அவர்களிடம் காணப்படும் இயல்பான உணர்வுபோலவே இருக்கிறது. ஆனாலும் அதிலிருந்து விடுபடுவது கடினமான ஒன்றல்ல. தங்களைச் சூழ்ந்திருக்கும் இறைவனின் அருட்கொடைகளை உணரும் நம்பிக்கையாளர்கள் அதிலிருந்து விடுபடுகிறார்கள். பெருமைடியத்தல் என்னும் பண்பு அவர்களிடம் இறைவனின் அருட்கொடைகளை எடுத்துரைத்தலாக வெளிப்படுகிறது. உண்மையில் அதுதான் இயல்பான பண்பு. அதுதான் இருக்க வேண்டிய பண்பு. அதுதான் போற்றப்பட வேண்டிய பண்பு. அவனுடைய உதவியும் கிருபையும் எப்போதும் தங்களைச் சூழ்ந்திருப்பதை அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.
உம் இறைவனின் அருட்கொடைகளை எடுத்துரைப்பீராக என்று அல்லாஹ் தன் தூதருக்குக் கட்டளையிட்டான். அது அவரைப் பின்பற்றும் நம்பிக்கையாளர்களுக்கும் இடப்பட்ட கட்டளைதான். பெருமிதம் கொள்வது வேறு. நன்றியுணர்வால் நிரம்பப்படுவது வேறு. நன்றியுணர்வால் நிரம்பி இருக்கும் உள்ளம் அவனுடைய அருட்கொடைகளை வெளிப்படுத்தி பேசுவதில் ஆனந்தம் கொள்ளும். அது தன் புகழைப் பாடுவதற்கு வெட்கப்படும். தன் இறைவனின் புகழைப் பாடுவதில் பேரானந்தம் கொள்ளும். அல்லாஹு அக்பர் என்றோ அல்ஹம்துலில்லாஹ் என்றோ சுப்ஹானல்லாஹ் என்றோ நம்பிக்கையாளர்கள் உச்சரிப்பது பொருளற்ற மந்திரச் சொற்கள் அல்ல. அவை நன்றியுணர்ச்சியின் வெளிப்பாடுகள்.
கண்ணியமும் பெருமையும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானவை. அவனைக் கண்ணியப்படுத்துபவர்கள் கண்ணியமடைவார்கள். அவன் புகழ்பாடுபவர்கள் புகழப்படுவார்கள். அவன் அளிக்கும் கண்ணியமே உண்மையான கண்ணியம். அவன் பாதையில் செல்பவர்கள் இழிவடைய மாட்டார்கள். அவனை நம்பியவர்கள் நிராசையடைய மாட்டார்கள். அவனையே சார்ந்திருப்பவர்கள் கைவிடப்பட மாட்டார்கள்.
