மனம் காயமடைவது

You are currently viewing மனம் காயமடைவது

உடல் காயமடைவது போன்று மனமும் காயமடைகிறது. உடலில் ஏற்படும் காயம் வெளியில் தெரியக்கூடியதாக இருப்பதால் அதனை எளிதாக நாம் புரிந்து கொள்கின்றோம். காயமுற்றவர்களை நாம் பரிவோடு நடத்துகின்றோம். அவர்களை மற்ற மனிதர்களைப் போன்று கருதுவதில்லை. ஆனால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை நாம் அவ்வாறு நடத்துவதில்லை. அவர்களின் காயம் வெளிப்படையாகத் தெரியக்கூடியதல்ல என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம்.

மனமும் காயமடைகிறது, அது விரும்பாத பெரு நிகழ்வுகளால், விருப்பத்திற்குரிய ஒன்றை திடீரென இழப்பதால், இன்னும் பல காரணங்களால். காயமடைந்த மனதில் எளிதாக பதற்றமும் பயமும் தொற்றிக் கொள்கின்றன. சிறு சிறு பிரச்சனைகள்கூட அவர்களுக்குப் பூதாகரமானவையாகத் தெரிகின்றன. அவர்களின் மனம் பிரச்சனைகளை மிகையாகக் கற்பனை செய்து கொள்கிறது. அது அவர்களை தீர்க்க முடியாத சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டதாக உணர வைக்கிறது.

இப்படியான மனிதர்களுக்கு நான் பின்வரும் சில ஆலோசனைகளை முன்வைக்கிறேன். அவை அவர்களுக்குப் பயனளிக்கலாம்:

  • மனதிற்கு இதம் தரும் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். ஆனால் தீங்கான, பாவமான காரியங்களில் ஈடுபடாதீர்கள். பாவமான செயல்கள் உங்களை மேலும் சிக்கல்களில் ஆழ்த்தக்கூடியவை.
  • எதிர்மறையாக பேசக்கூடிய, வாழ்க்கையை குறித்த சரியான கண்ணோட்டங்கள் அற்ற, உங்களைப் புண்படுத்தக்கூடிய மனிதர்களிடமிருந்து விலகியிருங்கள். அவர்களுக்குப் பதிலாக நல்ல மனிதர்களுடன் இணைந்திருங்கள். அவர்களின் சகவாசம் உங்களுக்குப் பெரிதும் பயன்தரும்.
  • தொடர்ந்து இறைவனிடம் நெருங்கிச் செல்லுங்கள். அவனிடம் உங்கள் பாரங்கள் அனைத்தையும் இறக்கி வையுங்கள். உங்கள் பிரச்சனைகளை அவனிடம் சொல்லி மன்றாடுங்கள். அவனிடம் அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேளுங்கள். இஸ்திக்ஃபார் என்று சொல்லப்படக்கூடிய பாவமன்னிப்புக் கோரிக்கை உங்களின் பல சிக்கல்களை தீர்க்க வல்லது. மனதில் ஆச்சரியமான அமைதியை, நிம்மதியை ஏற்படுத்தக்கூடியது.
  • அவனிடம் தவிர வேறு எங்கும் அடைக்கலம் இல்லை என்பதையும் அவனால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்பதையும் அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன என்பதையும் அவன் நாடினால் உங்களின் பிரச்சனை ஒரு நொடியில் மறைந்து விடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
  • நல்லதொரு ஆலோசகரை, நலன் விரும்பியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மனதில் தோன்றும் பயத்தையும் பதற்றத்தையும் அவரிடம் பகிருங்கள். அவர் தரும் ஆலோசனைகளின்படி செயல்படுங்கள்.

உங்களின் மனம் சுமைகள் இன்றி இருப்பது மிக அவசியம். உங்களின் மனம் குறுகி விடாமல் இருப்பதும் மிக அவசியம். பயணம் என்பது குறிப்பிட்ட இலக்கை அடைவது அல்ல. குறிப்பிட்ட இலக்கை அடையும்வரை நீங்கள் காணும் காட்சிகள்தாம். அந்தக் காட்சிகள் உங்கள் மனதின் சுமைகளைக் குறைக்கின்றன. உங்கள் மனதின் வெளியை விசாலப்படுத்துகின்றன.

உள்ளம் விசாலமாக்கப்பட வேண்டும். பயணம் அதற்கான வழிமுறைகளுள் ஒன்று. பயணத்தை இன்பம் அனுபவிப்பதற்கான, பொழுது போக்குவதற்கான ஒரு வழிமுறையாக நீங்கள் கருதினால் அதனால் உங்களின் மனம் விசாலமடையப் போவதில்லை. அது உங்களின் ஆன்மிக எண்ணங்களைத் தூண்டுவதற்கான ஒரு வழிமுறை. அது உங்கள் உள்ளத்தை விசாலப்படுத்துவதற்கான ஒரு வழிமுறை. பயணத்தில் நீங்கள் பார்க்க வேண்டும். உங்களின் அகக் கண்களால் கடந்து செல்லும் ஒவ்வொன்றையும் நீங்கள் பார்க்க வேண்டும். இசை கேட்பதிலோ அரட்டை அடிப்பதிலோ நீங்கள் மூழ்கி விட்டால் பயணத்தின் பெரும் பயன்களை நீங்கள் இழந்து விடுவீர்கள். இசை உங்களை ஒருவித கிறக்கத்தில் ஆழ்த்தும் ஒரு போதை.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் புதிய இடங்களைப் பாருங்கள், புதிய மனிதர்களுடன் பேசுங்கள். ஓடும் நதிபோல ஓடிக் கொண்டேயிருங்கள். நீங்கள் சலிப்படையாமல் இருப்பதற்கு அது அவசியமானது. ஓரீடத்தில் நீங்கள் தேங்கி விட்டால், இனி யாருடனுடம் பழக வேண்டியதில்லை என்று நீங்கள் முடிவு செய்து விட்டால் இனி யாரிடமிருந்தும் கற்க வேண்டியதில்லை என்ற எண்ணம் உங்களுக்குள் உருவாகி விட்டால் உங்கள் உள்ளம் சுருங்கி விடும். நீங்கள் கிணற்றுத் தவளைபோன்று ஆகி விடுவீர்கள்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply