மனிதர்கள் பாவம் செய்யக்கூடியவர்களா?

You are currently viewing மனிதர்கள் பாவம் செய்யக்கூடியவர்களா?

மனிதர்கள் எளிதாக பாவங்களில் விழுந்து விடுகிறார்கள். அதனால்தான் அல்லாஹ் பாவமன்னிப்பின் வாசலை எப்போதும் திறந்தே வைத்திருக்கிறான். தாங்கள் செய்த பாவத்தை பாவம் என ஒத்துக் கொண்டு அதற்காக மனம் வருந்தி அவர்கள் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து விடுகிறான். பாவம் செய்வது எளிதாக இருப்பதுபோல பாவமன்னிப்புக் கோருவதும் எளிதுதான்.

இச்சையினால் மிகைக்கப்பட்டு பாவம் செய்வது வேறு. பாவம் செய்து சரிதான் என்ற எண்ணத்தில் பாவம் செய்வது வேறு. முந்தைய பாவம் மன்னிக்கப்பட்டு விடும். மனிதன் செய்யும் பாவமன்னிப்புக் கோரிக்கை, அவனுடைய வழிபாடுகள், நற்செயல்கள் அவனுடைய பாவங்களைப் போக்கி விடுகின்றன.

பாவம் செய்வது சரிதான்; அப்படித்தான் வாழ முடியும்; வாழ்க்கை என்பது அனுபவித்தல்தான் என்ற எண்ணங்களில் பாவம் செய்பவர்கள் செய்த பாவங்களுக்காக வருத்தப்படுவதும் இல்லை. அவற்றுக்காக மன்னிப்புக் கோருவதும் இல்லை. மனதில் உருவாகும் குற்றவுணர்ச்சியைக் கூட வேறு செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன்மூலம் கடந்து விடுகிறார்கள்.

தங்கள் பாவங்களை நியாயப்படுத்துபவர்கள் அவற்றில் நீடிக்கிறார்கள். அவை அவர்களின் அன்றாட செயல்பாடுகளாக மாறிவிடுகின்றன. அவை பாவங்கள் அல்ல என்று சொல்லிச் சொல்லி அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

பாவங்கள் உடலளவில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று அவர்கள் எண்ணும்போது அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடலாம். ஒருவேளை அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் பாதிப்புகளிலிருந்து தப்பிக் கொண்டாலும் அவர்களுக்குத் தெரியாமல் மறைவின் புறத்திலிருந்து வரக்கூடிய பாதிப்புகளிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியாது. நாம் ஒருவருக்கு அநீதி இழைத்தோம் என்றால் அவர்மூலமாகத்தான் நமக்கு ஆபத்து வரும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆபத்து நாம் எதிர்பாராத ஒரு புறத்திலிருந்து நம்மை வந்தடையலாம். அந்த ஆபத்து நாம் செய்த பாவங்களின் விளைவாக இருக்கலாம்.

மனிதர்கள் அனைவரும் பாவம் செய்பவர்கள்தாம். நம்பிக்கையாளர்களும் பாவம் செய்கிறார்கள். நிராகரிப்பாளர்களும் பாவம் செய்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் பாவங்களில் மூழ்கி விடுவதில்லை. அவற்றில் நிலைத்திருப்பது இல்லை. அவற்றை நியாயப்படுத்துவதும் இல்லை. அவர்கள் செய்த பாவத்திற்காக வருத்தப்படுகிறார்கள், வெட்கப்படுகிறார்கள், அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பும் கோருகிறார்கள். அவனை அதிகமதிகம் நினைவு கூருகிறார்கள். அதற்குப் பரிகாரமாக முழு வீரியத்துடன் நற்செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் மற்றவர்கள் அப்படி இருப்பதில்லை. இந்த அடிப்படையில்தான் நம்பிக்கையாளர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள்.

திருக்குர்ஆன் நம்பிக்கையாளர்களின் பண்புகளை பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டுகிறது. அவற்றில் ஆலுஇம்ரான் என்ற அத்தியாயத்தில் இடம்பெறும் பின்வரும் வசனமும் ஒன்று:

“அவர்கள் மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டால் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டால் உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யார்தாம் அவர்களின் பாவங்களை மன்னிக்க முடியும்? தாங்கள் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.” (3:135 )    

இந்த வசனத்தில்  ‘ஃபாஹிஷா’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அது விபச்சாரம் போன்ற பெரும் பாவத்தைக் குறிப்பதற்கான வார்த்தை. அவர்களால் நிம்மதியாக பாவங்களில் ஈடுபட முடியாது. பாவம் செய்த பிறகு எங்கு அல்லாஹ் தங்களைத் தண்டித்து விடுவானோ என்ற பயம் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும், தாங்கள் செய்த பாவத்திற்காக வருத்தப்படுவார்கள், வெட்கப்படுவார்கள். முன்பு நினைவு கூர்ந்ததைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். தங்கள் பாவத்தையும் இயலாமையையும் ஒப்புக் கொண்டு அவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். வீரியத்துடன் வழிபாடுகளிலும் நற்செயல்களிலும் ஈடுபடுவார்கள். அந்தப் பாவங்கள் அவர்களை இன்னும் அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்குமே தவிர அவர்கள் அவனைவிட்டு தூரமாக மாட்டார்கள்.  

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply