இஸ்லாம் இறைவன் அருளிய மார்க்கம் என்று எப்படி கூறுவீர்கள்? நபியவர்கள் அவனிடமிருந்து வந்த உண்மையான தூதர் என்பதற்கான ஆதாரம் என்ன?
இஸ்லாம் இறைவன் அருளிய இறுதி மார்க்கம் என்பதற்கும் நபியவர்கள் அவனிடமிருந்து வந்த இறுதியான தூதர் என்பதற்குமான ஆதாரம் திருக்குர்ஆன்தான். திருக்குர்ஆனைக் கொண்டே இஸ்லாம் அல்லாஹ்வின் மார்க்கம் என்பது அறிந்து கொள்ளப்படுகிறது. அதனைக் கொண்டே நபியவர்கள் அவனுடைய தூதர் என்பதும் அறிந்து கொள்ளப்படுகிறது.
திருக்குர்ஆன் எந்த மனிதனாலும் உருவாக்க முடியாத தன்னிகரற்ற வேதம். மனிதர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தாலும் அதனைப் போன்ற ஒன்றை உருவாக்க முடியாது. திருக்குர்ஆன் இதனை ஒரு சவாலாக முன்வைக்கிறது. இந்த வேதம் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்பதில் நீங்கள் சந்தேகம் கொண்டால் இதனைப் போல ஒன்றை உருவாக்கிக் காட்டுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறது:
“மனிதர்களே! நம்முடைய அடியாருக்கு நாம் அருளிய குர்ஆனின் மீது நீங்கள் சந்தேகம் கொண்டால் நாம் உங்களுக்கு சவால் விடுகிறோம், இதைப்போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர உங்களின் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.” (2:23)
திருக்குர்ஆன் நபியவர்களுக்கு வழங்கப்பட்ட மாபெரும் சான்று. ஒவ்வொரு தூதருக்கும் அவர்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும்விதமாக சான்றுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மற்ற தூதர்களுக்கு வழங்கப்பட்ட சான்றுகள் அவர்களின் காலகட்டத்தோடு, அவர்கள் வாழ்ந்த சூழலோடு முடிவடையக்கூடியவையாக இருந்தன. ஏனெனில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தூதுத்துவங்கள் கால, இட வரம்புகளுக்கு உட்பட்டவையாக இருந்தன.
நபியவர்களுக்கு வழங்கப்பட்ட தூதுத்துவம் கால, இட வரம்புகளைத் தாண்டி மறுமை நாள்வரை வரக்கூடிய மனிதர்கள் அனைவருக்கும் உரியது. ஆகவே அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதமும் மனிதர்கள் அனைவருக்குமான அற்புதமாக இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறைக்கு முன்னரும் திருக்குர்ஆன் விடுக்கும் சவால் அப்படியேதான் உள்ளது. திருக்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது அல்ல என்று யாரேனும் கூறினால் அவர் அதனுடைய இந்த சவாலை முறியடித்துக் காட்டட்டும்.
நபியவர்களின் காலகட்டத்தில் திருக்குர்ஆனின் இந்த சவாலை முறியடிப்பதற்கு யாரும் முயலவில்லை. ஏனெனில் அது முறியடிக்க முடியாத ஒன்று என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்திருந்தார்கள். அது எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நபியால் கொண்டு வர முடியாத ஒன்று என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்திருந்தார்கள். அதனால்தான் அவர்கள் அவரைக் குறித்து கூறிய எந்தவொரு குற்றச்சாட்டிலும் நிலைத்திருக்கவில்லை. ஒன்றுக்குப் பிறகு இன்னொன்று என்று அடுத்தடுத்த விசயங்களின் பக்கம் தாவிக் கொண்டிருந்தார்கள்.
எந்த வகையில் எல்லாம் திருக்குர்ஆன் மனிதர்களால் கொண்டு வர முடியாத அற்புதமாக இருக்கிறது?
ஒன்று, அதன் நுணுக்கமான மொழிக்கட்டமைப்பு. அன்றைய அறபுக்கள் பேசிய அதே மொழியில்தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது. அன்றைய அறபுக்கள் தங்களின் மொழியில் ஜாம்பவான்களாக, அதில் பெருமிதம் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனாலும் இந்தக் குர்ஆனின் மொழிக்கட்டமைப்பு அவர்களால் உருவாக்க முடியாத அளவு நுணுக்கமானதாக, அற்புதமானதாக இருந்தது. உன்னதமும் அழகும் இலகுவும் ஒருசேரக் கொண்ட மொழிக்கட்டமைப்பு அது. வெறுமனே அது வார்த்தை விளையாட்டுகளாக இருக்கவில்லை. அதன் வார்த்தைகளும் வாசகங்களும் செறிவான கருத்துகளை உள்ளடக்கியதாக இருந்தன.
இரண்டு, குறிப்பிட்ட காலகட்டத்தில், குறிப்பிட்ட சூழலில், குறிப்பிட்ட மக்களுக்கு அருளப்பட்ட அதன் வசனங்கள் கால, இட வரம்புகளைத் தாண்டி மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடியவையாக இருப்பது. மனிதர்களால் கால, இட வரம்புகளைத் தாண்டி சிந்திக்க முடியாது. அவர்கள் தங்கள் காலகட்டத்தின், சூழலின் அடிமைகள்.
அதன் எந்தவொரு வசனமும் அந்தக் காலகட்டத்தோடு, அந்த சூழலோடு முடங்கி விடவில்லை. ஒவ்வொரு வசனமும் அந்தந்த காலகட்டத்திற்கு தேவையான தனித்துவமான வழிகாட்டல்களையும் பொதுவான வழிகாட்டல்களையும் கொண்டிருக்கிறது. மனிதர்கள் அதன் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்துவதன் வழியாக அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அதன் வசனங்கள் என்றும் மாறாத மனித இயல்புகளை விளித்து உரையாடுகின்றன. மனிதர்கள் எந்தக் காலகட்டத்தில், எந்த இடத்தில் இருந்தாலும் மனிதர்கள் என்ற வகையில் ஒரு மாதிரியான இயல்புகளையே கொண்டவர்கள். அவர்களிடம் காணப்படும் வேறுபாடுகள் அவர்களின் வெளிப்படையான அம்சங்களில் காணப்படும் வேறுபாடுகள்தாம். உண்மையில் ஆதிகாலத்தில் மனிதன் என்னென்ன இயல்புகளைக் கொண்டிருந்தானே அதே இயல்புகளைத்தான் இன்றும் கொண்டிருக்கிறான். அதே இயல்புகளைத்தான் என்றும் கொண்டிருப்பான்.
அது முன்வைக்கும் கண்ணோட்டங்கள், வழிகாட்டல்கள், சட்டங்கள் மனித இயல்புக்கு கச்சிதமாக பொருந்தக்கூடியவையாக, இயல்பின் குரலுடன் முழுமையாக ஒத்திசைந்து செல்லக்கூடியவையாக இருக்கின்றன. அவை மனித இயல்புடன் எந்த இடத்திலும் மோதுவதில்லை. ஏனெனில் அவற்றை வழங்கியவன்தான் மனித இயல்பையும் படைத்தான். அவனால் மட்டுமே மனித இயல்புக்கு உகந்த கண்ணோட்டங்களை, வழிகாட்டல்களை, சட்டங்களை வழங்க முடியும்.
அதன் அற்புதங்கள் என்றும் நிறைவடையாதவை. குறிப்பிட்ட சில விசயங்களோடு மட்டும் நாம் அவற்றை சுருக்கி விட முடியாது. அதன் வசனங்களில் எந்த அளவு நாம் ஆழ்ந்து கவனம் செலுத்துகிறோமோ அந்த அளவு அதன் அற்புதங்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அள்ள அள்ள வற்றாத ஞானங்களை தன்னத்தே கொண்டிருக்கும் தன்னிகரற்ற வேதம் அது.
