சில நாட்களாக எதுவும் எழுதவில்லை, வாசிக்கவும் இல்லை. எழுத வேண்டும் என்று தோன்றவில்லை என்பதால் எதையும் எழுதாமல் முற்றிலுமாக விலகியிருந்தேன். என்னுடைய சூழலும் அதற்கான காரணங்களில் ஒன்று. கொஞ்ச நாட்கள் அப்படி இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனாலும் எதையோ இழந்ததுபோன்று உணர்வு. சில சமயங்களில் குழப்பமான நிலையும் வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மையும் தன்னம்பிக்கை அற்ற நிலையும் சூழ்ந்து கொண்டதை உணர்ந்தேன்.
நமக்குப் பிடித்தமான ஒரு செயல்பாட்டை சட்டென நிறுத்தி விடும்போது இந்த வகையான உணர்வுகள் எழுவது இயல்பு என்பதையும் நம்முடைய செயல்பாடுகள்தாம் நமக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை உணர வைப்பவை என்பதையும் உணர்ந்து கொண்டேன். உண்மையில் எழுதும்போதும் பிடித்த புத்தகங்களை மொழிபெயர்க்கும்போதும் அமைதியடைகிறேன், நிறைவடைகிறேன். எழுத வேண்டும் என்ற குரல் எனக்குள் ஒலிக்கும்போது எழுதுகிறேன். மற்ற சமயங்களில் நான் எழுதுவதற்கும் அந்தச் சமயத்தில் எழுதுவதற்கும் மத்தியில் பெரிய அளவில் வேறுபாட்டைக் காண்கிறேன். ஆகவே என் மனதின் குரலுக்கு செவிசாய்க்கிறேன்.
தொடர்ந்து வாசிப்பது நமக்கு ஒருவிதமான தன்னம்பிக்கையை அளிக்கிறது. வாசிப்பு நின்று விடும்போது அந்த தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடைகிறது. வாசிப்போடு சிந்தனையும் ஒன்று சேர்கிறது. வாசிப்பவர்கள் அனைவரும் சிந்திப்பதில்லைதான். பலர் வாசித்தவற்றை தாண்டிச் செல்வதில்லை. வாசிப்போடு சிந்தனையும் ஒன்றுசேரும்போது அது அடுத்த கட்டத்தை அடைகிறது. அது அளிக்கும் தைரியம் அலாதியானது.
காட்சி ஊடகங்கள் நம் சிந்தனையைத் தூண்டுவதில்லை. அவை நம் உணர்வோடு கலக்கின்றன. ஆகவே வாசிப்பையும் காட்சி ஊடகங்களைக் காண்பதையும் ஒன்றெனக் கருத முடியாது. முதலாவது உங்களின் சிந்தனையைத் தூண்டுகிறது. இரண்டாவது உங்களின் உணர்வுகளோடு கலக்கிறது. ஆகவே அது உங்களுக்குள் ஒரு வகையான பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.
மன அழுத்தத்திலிருந்து தப்பிப்பதற்கான வழியாக ‘செயல்படுதல்’ முன்வைக்கப்படுகிறது. தொடர்ந்து செயல்படுவதன் வழியாக மனிதன் தன்னைக் காத்துக் கொள்ளலாம். ஆனால் அது அவனுக்குப் பிடித்த, அவன் பயனளிப்பவை என்று எண்ணக்கூடிய செயல்பாடுகளாக இருக்க வேண்டும். செயலின்மை மன அழுத்தத்தை இன்னும் அதிகரிக்கும். மனிதன் அவன் நிறைவேற்றும் பயனுள்ள, நல்ல பணிகளைக் கொண்டும் பொறுப்புகளைக் கொண்டும் நிறைவடையக்கூடியவன். செயலின்மை அந்த சமயத்தில் இனிமையான ஒன்றாகத் தெரிந்தாலும் காலம் கடந்த பிறகு கடும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. மனிதன் வீணாகப் படைக்கப்படவில்லை. தன் வாழ்க்கையை வீணடிக்கும் மனிதன் தேவையற்ற அழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் குற்ற உணர்ச்சிக்கும் உள்ளாவான்.
படைப்பின் நோக்கத்தை அறிந்து அதனடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் நம்பிக்கையாளன் மற்ற சில்லறை விசயங்களால் பாதிக்கப்படுவதில்லை. படைப்பின் நோக்கத்தை அறிந்து அதனை நிறைவேற்றுவதை தன்னுடைய முதன்மையான பணியாக கருதுபவனின் மனமும் படைப்பின் நோக்கத்தை அறியாதவனின் மனமும் ஒருபோதும் சமமாகாது. முந்தையவனின் மனம் பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை. அப்படியே பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து மீள்வதற்கான வழியையும் அவன் அறிந்து விடுகிறான். பிந்தையவனின் மனம் சில்லறை விசயங்களால் நிரப்பப்பட்டு விடும். விளைவாக, அவை தேவையற்ற அழுத்தங்களுக்கு அவனை உள்ளாக்கி விடும்.
