என் உள்ளத்தில் ஒரு கல்விரீதியான ஒரு விவகாரம் தொடர்பாக அல்லது ஏதேனும் விசயம் தொடர்பாக சிக்கல் ஏற்பட்டுவிட்டால் நான் அல்லாஹ்விடம் ஆயிரம் முறை அல்லது அதற்கு அதிகமாக அல்லது அதற்குக் குறைவாக பாவமன்னிப்புக் கோருகிறேன். இறுதியில் என் உள்ளம் விசாலமாகிவிடுகிறது. சிக்கல் அகன்றுவிடுகிறது.”
இப்னு தைமிய்யா அதிகம் மறுப்புரைகள் எழுதியவராக, விவாதங்கள் புரிந்தவராகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். அவரது ஆத்மீக அனுபவங்கள் போதுமான அளவு முன்வைக்கப்படவில்லை. அவை ஒரு சூஃபியின் ஆத்மீக அனுபவங்களுக்கு ஒப்பானவை என்கிறார் அபுல் ஹசன் அலீ நத்வீ.
நம்முடைய உள்ளம் முன்மாதிரியை விரும்புகிறது. ஒருவருடைய சொல்லைவிட அவரது செயலே நம்முள் அதிகம் தாக்கம் செலுத்துகிறது. இப்னு தைமிய்யாவின் இந்தக் கருத்தை படித்ததிலிருந்தே நானும் இதனைப் பின்பற்றி வருகிறேன். மனதில் ஏதேனும் பாரம் இருந்தால் அல்லது குழப்பம் இருந்தால் அமைதியான இடத்தில் கொஞ்ச நேரம் நடந்தவாறு இஸ்திக்ஃபார் (பாவமன்னிப்புக்கோரிக்கை) செய்கிறேன். ஆச்சரியமான முறையில் குழப்பம் நீங்கி மனம் அமைதியடைவதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். நண்பர்கள் பலருக்கும் இந்த முறையை பரிந்துரை செய்திருக்கிறேன்.
திருக்குர்ஆனின் நூஹ் அத்தியாயத்தில் இடம்பெறும் ஒரு வசனத்திலிருந்தே அவர் இந்த முறையை அமைத்திருக்கக்கூடும் என்று கருதுகிறேன். அவர் மட்டுமல்ல, நம்முடைய கடந்த கால, தற்கால அறிஞர்களில் பலரும் இந்த முறையை முன்வைத்திருக்கிறார்கள். பாவங்கள் சிக்கல்களை, தடைகளை, பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. பாவமன்னிப்புக்கோரிக்கை அவற்றைப் போக்கி அல்லாஹ்வின் அருளைக் கொண்டு வருகிறது.
நாம் புறத்தைவிட அகத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு மனிதனும் தன்னைக் குறித்துதான் முதலில் விசாரிக்கப்படுவான். ஒரு மனிதன் வணக்க வழிபாடுகளில், திக்ர், இஸ்திக்ஃபார் செய்வதில் ஈடுபாடு கொண்டிருக்கிறான் எனில் அவன் அல்லாஹ்வை உறுதியாக நம்புகிறான் என்றே பொருள். அதற்கு மாறாக இருப்பவன் என்னதான ஆதாரங்களை அடுக்கி தன்னுடைய கருத்தை வலுப்படுத்தினாலும் அவனுடைய நம்பிக்கையில் குறைபாடு இருக்கிறது என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. மறுப்புரைகள் வழங்குவது மிகவும் சிக்கலான பணி. மறுப்புரைகள் வழங்குபவர்கள் தஸ்கியா எனப்படும் மனத்தூய்மையில் ஆழமாகக் கவனம் செலுத்த வேண்டும். அவர்களை தங்களைத் தாங்களே கண்காணித்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில் அவர்கள் கேடுகெட்ட அரசியல்வாதிகளாக மாறிவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு என்ற புத்தகத்தின் இரண்டாவது பாகம் முழுக்க முழுக்க இமாம் இப்னு தைமிய்யாவைக் குறித்தே பேசுகிறது

