மனிதன் இங்கும் அங்கும் தடுமாறக்கூடியவன்தான். மிருக உணர்ச்சி அவனை கீழ்நோக்கி இழுக்கும். உன்னதத்தை நோக்கிய ஆவல் அவனை மேல் நோக்கி இழுக்கும். அதாவது உடலின் இச்சைக்குக்கும் ஆன்மாவின் விருப்பத்திற்கும் மத்தியில் ஒரு இழுபறி இருந்துகொண்டேயிருக்கும். இங்கு நம்பிக்கையாளன் என்பவன் பாவம் செய்யாத புனிதன் அல்ல. மிருக உணர்ச்சி அவனை ஒரேயடியாக அடிமைப்படுத்திவிடாது. மற்றவர்களைவிட உடனடியாக அவன் மீண்டு விடுவான். அதுதான் மற்றவர்களையும் அவனையும் வேறுபடுத்தும் முக்கியமான அம்சம். மற்றவர்கள் அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை அனுபவித்த பிறகே மீள வேண்டும் என்று விரும்புவார்கள்.
இந்த இரண்டில் எந்தவொன்றிலும் மனிதன் நிரந்தரமாக இருந்துவிட முடியாது. ஒருவிதமான மனப்பிறழ்வே அவனை அந்த நிலைக்குக் கொண்டு செல்லும். மனிதனின் தனித்தன்மையே அவன் நேர்எதிரான இரண்டு பண்புகளையும் ஒருசேரப் பெற்றிருப்பதுதான். இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் அவன் தடுமாறிக் கொண்டேயிருப்பது அவனது இயல்புதான்.
மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்பது ஜி. நாகராஜனின் பிரபல்யமான வாசகம். ஃப்ராய்டின் கோட்பாடும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறது. ஃப்ராய்டின் கருத்தை அடிப்படையாகக் கொண்டே ஜி. நாகராஜன் இந்த வாசகத்தை அமைத்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன். ஜி. நாகராஜனின் படைப்புகளில் இடம்பெறக்கூடிய கதாபாத்திரங்கள் பெரும்பாலும் கீழ்மை நிரம்பிய இத்தகைய மனிதர்களே. இந்தக் கருத்தில் பாதி அல்லது பாதிக்கு அதிகமான உண்மை இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். மனிதர்களை ஒட்டுமொத்தமாக இப்படி அணுகிவிட முடியாது என்பதே என் கருத்து.
மனிதர்களிடம் எதிரெதிர் பண்புகள் ஒருசேரக் காணப்படுகின்றன. அவர்களிடம் காணப்படும் கீழ்மைகளுக்கேற்ப உன்னதங்களும் காணப்படுகின்றன. அவர்களின் அகத்தில் கீழ்மைகளுக்கும் உன்னதங்களுக்கும் சமஅளவில் இடம் இருக்கின்றன. புறச்சூழலால் வலுவூட்டப்படுவவையே வளர்கின்றன. ஆன்மீகப் பயிற்சிகள் அவர்களுக்குள் காணப்படும் உன்னதங்களை வலுப்படுத்துகின்றன. தொழுகை மானக்கேடான, தீய காரியங்களைவிட்டும் தடுக்கின்றது என்ற வசனத்தை இந்த அடிப்படையில்தான் நான் புரிந்துகொள்கிறேன்.
மேற்கத்திய உளவியல் ஆய்வுகள் மனிதர்களின் ஆன்மீக வாழ்வை கவனத்தில் கொள்ளவில்லை என்கிறார் அறிஞர் முஹம்மது குதுப். அந்த ஆய்வுகளில் கவனத்தில் கொள்ளப்பட்டவை இறைவனைவிட்டு தூரமான மனிதர்களின் செயல்பாடுகளே. அதன் ஆய்வின் இந்த ஒற்றப்படையான தன்மைக்கு அவர் முன்வைக்கும் காரணி இதுதான்.
உன்னதத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஆவல் மனித மனதில் இயல்பாகவே இருக்கின்ற விருப்பங்களில் ஒன்றுதான். அந்த ஆவலை வலுப்படுத்தக்கூடிய புறச்சூழலை மனிதன் பெறும்போது அவன் அதனை நோக்கி அடியெடுத்து வைக்கவே செய்கிறான். இஸ்லாம் கூறுவதுபோன்று மனிதர்களால் வானவர்களைவிட மிகச்சிறந்த படைப்பினங்களாக மின்னவும் முடியும். மிருக உணர்ச்சிகளுக்கு அடிமையாகி கேடுகெட்ட ஷைத்தான்களாக உருமாறவும் முடியும்.
****************
ஒரு மனிதன் நல்ல விசயங்களைக் கொண்டு தன்னை நிரப்பிக்கொள்ளவில்லையெனில் வீணான, தீய விசயங்களால் அவன் நிரப்பப்படுவான். எதுவுமேயின்றி வெறுமையாக யாரும் இருக்க முடியாது. ஏதாவது ஒன்றால் அவன் ஆக்கிரமிக்கப்படுவான். ஏதாவது ஒன்றுக்கு அவன் அடிமையாகிவிடுவான். களவும் கற்று மற என்பார்கள். எல்லாவற்றையும் இப்படி அணுகிவிட முடியாது. சில சமயங்களில் அவன் மீள முடியாத தூரத்திற்குச் சென்றுவிடுவான். பாவமான ஒன்றில் சிக்கிவிட்டு அதிலிருந்து மீண்டுவருவது அவ்வளவு எளிதானது அல்ல. மனம் பாவமான ஒரு செயலில் நீடிக்க ஆயிரம் நியாய வாதங்களை உருவாக்கி வைத்திருக்கும்.
குடும்ப அமைப்பை புறக்கணித்துவிட்டு தனியாக வாழக்கூடிய மனிதர்கள் கொஞ்சம் ஆபத்தானவர்கள். தனியர்கள் பொறுப்புகள் அற்றவர்கள். அவர்கள் எதைச் செய்யவும் தயங்க மாட்டார்கள். விதிவிலக்கான மனிதர்களும் இருக்கிறார்கள். பொறுப்புகள் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துகின்றன. நிர்ப்பந்தங்கள் மனிதர்களை சமூகம் உருவாக்கிய வரையறைகளைப் பேணச் செய்கின்றன.
ஒரு மனிதன் எந்த அளவு தன்னை நற்செயல்களில் ஈடுபடுத்திக்கொள்வானோ அந்த அளவு அவனால் தீய செயல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். நம்மைச் சுற்றி நாம் அமைத்துக் கொள்ளும் சூழல்கள் அல்லது நாம் அகப்பட்டுக்கொள்ளும் சூழல்கள் நம் வாழ்வில் பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நம் வாழ்க்கைப் பாதையை தீர்மானிப்பதில் நம் நண்பர்கள், உடனிருப்பவர்கள் ஆகியோருக்கு கணிசமான பங்கு இருக்கிறது. சில சமயங்களில் நம் அருகில் இருப்பவர்கள் நமக்கு முன்மாதிரிகளாகிவிடுகிறார்கள்.
