இஸ்லாம் சொல்லக்கூடிய நற்செயல்களின், வணக்க வழிபாடுகளின் ஆன்மா ‘இக்லாஸ்’ ஆகும். இக்லாஸ் என்பது வேறு எந்த நோக்கத்தையும் கலக்காமல் இறைவனுக்காக மட்டுமே செயல்படுவதாகும். இதுதான் இஸ்லாம் சொல்லக்கூடிய ஆன்மீகத்தின் உன்னதமான நிலை.
புகழடைய வேண்டும், செல்வத்தைப் பெற வேண்டும், மக்களிடம் நன்மதிப்பை, அங்கீகாரத்தைப் பெற வேண்டும், சிறந்த சமூக சேவகனாக, ஆன்மீகவாதியாக, அறிஞனாக சமூகத்தில் தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும் போன்ற எந்தக் காரணியும் ஒருவனை செயல்படத் தூண்டக்கூடியதாக இருக்கக்கூடாது. அப்படியே ஏதேனும் ஒன்றால் அவன் தூண்டப்பட்டாலும் இறுதிவரை அதனை நீடிக்கச் செய்யக்கூடாது.
யார் இறைவனின் இருப்பை, அவனுடைய ஆற்றலை, கண்காணிப்பை சரியான முறையில் அறிகிறாரோ அவனுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்கிறாரோ அவரால்தான் இந்த நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். வேறு எந்த வகையான நோக்கத்தையும் ஒன்றுகலக்காமல் இறைவனுக்காக மட்டுமே செயல்பட முடியும்.
சமூக சேவைக்கு, உதவிக்கு பின்னால் மறைந்திருக்கும் புகழ்வெறியும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணமும் நமக்கு ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தவே செய்கின்றன. தனக்கு முன்னால் பெருமையடிக்கப்படுவதை மனிதன் விரும்புவதில்லை. சொல்லிக் காட்டப்படும் உதவிகள் அவனுடைய மனதைக் காயப்படுத்துகின்றன.
வேறு நோக்கங்களை எதிர்பார்த்து இந்த உலகில் மனிதன் செய்யக்கூடிய நற்செயல்களுக்கு இந்த உலகிலேயே அவற்றுக்கான முழுமையான கூலி வழங்கப்பட்டுவிடும். அவன் மறுமைநாளில் இறைவனிடத்தில் அவற்றுக்காக எந்தவொன்றையும் எதிர்பார்க்க முடியாது என்று இஸ்லாம் கூறுகிறது. உதவி செய்பவர் உதவி செய்யப்படுவார் என்பது இறைவன் இவ்வுலகில் அமைத்த நியதிகளுள் ஒன்று.
இக்லாஸ் எனப்படும் உன்னதமான நிலையை ஒருவன் எளிதாக அடைந்துவிட முடியாது. அதற்காக அவன் கடுமையாக முயற்சிக்க வேண்டும். தன்னை தொடர்ந்து சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். மேலெழும்பி வரக்கூடிய இச்சைகளுக்கு, ஷைத்தானிய ஊசலாட்டங்களுக்கு எதிராக போராடிக் கொண்டேயிருக்க வேண்டும். மற்ற எல்லாவற்றையும்விட இறைவனின் மகத்துவமே அவனுக்குப் பெரிதாகத் தெரியும்வரை அவனால் இந்த உன்னதமான நிலையை அடைந்துவிட முடியாது.
நற்செயல் சிறியதோ, பெரியதோ இறைவன் அதன் அளவைப் பார்ப்பதில்லை. அதனை செய்யத் தூண்டிய காரணியைத்தான் அவன் பார்க்கிறான். அதன் மூலம் இறை திருப்தி நாடப்பட்டால் அதற்கு இறைவன் கூலி வழங்குகிறான். ஆனால் அதுவன்றி வேறு நோக்கங்கள் நாடப்பட்டால் அவற்றை வேண்டுமானால் மனிதன் அடைந்து கொள்ளலாம். இறைவனிடத்தில் அவனுக்கு எந்த கூலியும் இல்லை. மாறாக அந்த செயலே மறுமையில் அவனுக்கு எதிரான ஆதாரமாகி விடும்.
“செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன” (நபிமொழி) அதாவது அவன் எந்த நோக்கத்திற்காக ஒரு செயலைச் செய்கிறானோ அதனையே பெறுவான்.
******************
மனிதர்கள் பல்வேறு வகைப்பட்டவர்கள். அவர்களின் விருப்பங்களும் இரசனைகளும் ஆர்வங்களும் பல்வேறுவிதமானவை. யாராலும் அவர்கள் அனைவரையும் ஒருசேர திருப்திபடுத்த முடியாது. அவர்கள் பல்வேறு வகையில் பிரிந்துகிடப்பவர்கள். ஒரு சாரார் உங்களை விரும்பினால் இன்னொரு சாரார் உங்களை வெறுக்கவும் செய்வார்கள். ஒரு பிரிவினரின் விருப்பை பெற நீங்கள் முயற்சிக்கும்போது கூடுதலாக இன்னொரு பிரிவினரின் வெறுப்பையும் நீங்கள் சம்பாதித்துவிடலாம். உங்களை நேசிப்பவர்கள்கூட ஒரு கட்டத்தில் உங்களை வெறுக்கவும் செய்யலாம். உங்களுக்கு பக்கபலமாக இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் உங்களுக்குத் தீங்கிழைக்கவும் முற்படலாம். இங்கு எதுவுமே நிரந்தரமில்லை. உச்சத்தை அடைந்த ஒவ்வொன்றும் கீழிறங்கித்தான் தீர வேண்டும். சில பொத்தென தள்ளிவிடப்படவும் செய்யலாம்.
இறைதிருப்தியை நாடி நம்முடைய செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில் நாம் மனிதர்களின் திருப்தியையோ அதிருப்தியையோ ஒரு பொருட்டாகக் கருத மாட்டோம். மனிதர்களின் திருப்தியும் அதிருப்தியும் தற்காலிகமானவை, மாறக்கூடியவை. இங்கு மனிதன் பொருட்படுத்த வேண்டியது தன் மனதின் குரலைத்தான். அவன் அநியாயம் செய்யும்போது நிச்சயம் அது அவனுக்கு எதிராக ஒலிக்கும். அந்தக் குரலை அவன் நசுக்கிவிட்டால் நியாயவாதம் பேசி அந்தக் குரலை மட்டுப்படுத்திவிடலாம் என்று அவன் நினைத்தால் நிச்சயம் அது அவனுக்கு ஆபத்தாகவே வந்து முடியும். தன் மனதின் குரலுக்கு தகுந்த முறையில் பதிலளிப்பவன் நிச்சயம் நிராசையடைய மாட்டான்.
இறைதிருப்தி இறைசார்ந்த மனிதர்களின் திருப்தியையும் கொண்டு வரும். இறைநேசத்தில் மனிதர்கள் ஒன்றிணைய முடியும். அவர்களிடம் காணப்படும் இறைவனுக்காக என்னும் தன்மை அவர்களின் பேராசையை, சுயநலத்தை மட்டுப்படுத்துகிறது. அவர்கள் நெகிழ்ந்து கொடுக்கும் மனிதர்களாக இருக்கிறார்கள்.
நாத்திகத்தில் ஒன்றிணையும் மனிதர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அப்பட்டமான சுயநலம், வீங்கிய கர்வம், பேராசை என ஒவ்வொன்றும் அவர்களிடம் ஆதிக்கம் செலுத்த முனைகின்றன. மதவெறுப்பு மட்டுமே அவர்களிடம் காணப்படும் பொதுவான அம்சமாக இருக்கும். மதவெறுப்பின் அடிப்படையில் அவர்கள் ஒன்றிணைந்தாலும் அவர்களிடம் காணப்படும் மற்ற மோசமான கூறுகளால் நிச்சயம் அவர்களால் ஒன்றிணைந்து இருக்க முடியாது. நிச்சயம் அவர்களால் ஒரு அமைதியான சமூகத்தை உருவாக்க முடியாது.
ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம்; ஒவ்வொருவருக்கும் ஒரு கவலை. ஒவ்வொருவரும் தங்களின் இருப்பு எந்த அளவு அவசியமானது என்பதை நிரூபிக்க ஏதேனும் செய்து கொண்டும் கூறிக் கொண்டும் இருக்கிறார்கள். உண்மையில் மனிதனின் சுயநலோடுதான் அவனது பொதுநலனும் கலந்துள்ளது. தூய பொதுநலம் என்று எதுவும் இல்லை. அது மனித இயல்புக்கு முரணான ஒன்று. அப்படி எந்த மனிதனாலும் இருக்க முடியாது. தன்னைக் குறித்து யோசிக்காத, தன்னை முன்னிறுத்த விரும்பாத, தன் இருப்பின் அவசியத்தை நிரூபிக்க விரும்பாத ஒரு மனிதனைக் காண்பது அரிதிலும் அரிது.
மனிதனின் சுயநலத்திலிருந்தே அவனது பொதுநலனும் துளிர்விட முடியும். அவன் ஈடுபடும் பொதுச் சேவையில் அவனுக்கு மனநிறைவு மட்டுமல்ல அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என அவன் எதிர்பார்க்கிறான். அது அவனது இயல்பான உணர்வுதான். அதனால்தான் மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறான். ஆனால் அது ஓர் அளவைத் தாண்டி வெளிப்படும்போது மற்றவர்களுக்கு அலர்ஜியைத் தருகிறது. சிலர் ஓர் அளவோடு நின்று விடுகிறார்கள். பலர் மற்றவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் அளவுக்கு, அளவுக்கு மீறி தங்களை வெளிப்படுத்துகிறார்கள்.
ஒருவன் இறைதிருப்தியை நாடி செயல்பட்டாலும் வேறு சில நோக்கங்களும் அதனோடு சேர்ந்து விடுகின்றன. அவை மிகைக்காத அளவு அவையே அசலானவையாக ஆகாத அளவு அவன் பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கு முற்றும் துறந்த துறவிகள் என்று யாரும் இல்லை. தங்களைத் துறவிகள் என்று அறிவித்துக் கொண்டவர்கள்கூட ஏதேனும் ஒரு வகையில் தங்களை வெளிப்படுத்திக் கொண்டும் தங்களுக்கான அங்கீகாரத்தை வேண்டிக் கொண்டும்தான் இருக்கிறார்கள்.
இக்லாஸ் என்னும் இறைதிருப்தியை நாடி மட்டுமே செயல்படுவது ஆன்மீகத்தின் உச்சம். அனைவரும் அந்த நிலையை அடைந்துவிட முடியுமா என்று தெரியவில்லை. அந்த நிலையை அடைய முயற்சிப்பவர் அதனை அடைவார் என்றே திருக்குர்ஆன் கூறுகிறது. அது எவ்வித சந்தேகமும் அண்ட முடியாத, களங்கமற்ற, தூய ஈமானிலிருந்து வெளிப்படக்கூடியது.
