மனிதர்களின் வாழ்வில் திடீரென புகுந்துகொள்ளும் இருட்டு பற்றி அறிவீர்களா? அது சம்பந்தப்பட்ட மனிதரை மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பத்தையும் நாசப்படுத்தி விடுகின்றது. அந்த இருட்டு ஏதேனும் ஒரு வடிவில் அவனுடைய வாழ்வில் மெல்ல நுழைகிறது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவனை ஆக்கிரமித்து அடிமைப்படுத்தி அவனை மட்டுமல்லாமல் அவனைச் சார்ந்தவர்களையும் மூழ்கடிக்கத் தொடங்குகிறது. மனிதன் எப்படி ஒரு விசயத்திற்கு அடிமையாகிறான்? அது அவனை வழிநடத்தும் பேருருவாக எப்படி உருக்கொள்கிறது என்பது புரியாத புதிர். ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி தற்கொலை செய்துகொண்ட அந்த மனிதனின் குரல்பதிவை வாசித்தபோது எனக்கு அந்த இருட்டே நினைவுக்கு வந்ததது. அது ஒரு இருள். இப்படி பல இருள்கள் இருக்கின்றன. காதல்கூட சில சமயங்களில் இருளாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு போதையும் இருள்களே. அதையும் தாண்டி புரிந்துகொள்ள முடியாத இருள்களும் மனித வாழ்க்கையில் புகுந்து விடுகின்றன. விதி என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர வேறு எதையும் கூற முடியாதவர்களாக நாம் மாறிவிடுகிறோம். அதிலிருந்து தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. ஜெயமோகனின் டார்த்தீனியம் என்ற குறுநாவல் அந்த இருட்டைக் குறித்துதான் பேசுகிறது.
மனித அறிவை மழுங்கடிக்கும், மனிதனை இயல்பாக சிந்திக்க விடாமல் தடுக்கும் ஒவ்வொன்றும் போதைதான். ஒவ்வொரு போதையும் சிறிய ஈர்ப்பாகத்தான் மனிதனுக்கு அறிமுகமாகிறது. அதில் என்ன இருக்கிறது என்ற எண்ணத்தோடுதான் பலரும் அதன் பக்கம் செல்கிறார்கள். வெறுமை அதன் பக்கம் அவனை அழைத்துச் செல்கிறது. போகப் போக அது தன் ஆழமான வேர்களை அவனுள் ஊன்றி விடுகிறது. ஒரு கட்டத்தில் அவனைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு, அவனுடைய வாழ்க்கையின் போக்கை திருப்பும் அளவுக்கு அதிகாரம் பெற்றதாகி விடுகிறது. அவனுடைய பலவீனத்தின் காரணமாக அவன் வீழ்த்தப்படுகிறானா? அல்லது அதனுடைய பலத்தால் அது அவனை வீழ்த்திவிடுகிறதா? என்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்படுபவைதான். மனிதன் அறிந்துகொண்டுதான் தவறுகளில் ஈடுபடுகிறான். அந்த தவறுகளின் விளைவுகளையும் அவன் அறிவான்.
மனித வாழ்வில் நுழையும் இருள்கள் பலவிதம். இருள்கள் என்ற அடிப்படையில் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவையே. ஒவ்வொன்றும் மனிதனை அடிமைப்படுத்தி அவனுடைய கையாலேயே அவனுக்கு அழிவைக் கொண்டு வருபவை. எந்தவொன்றுக்கும் மனிதன் மிக எளிதாக அடிமையாகிவிடுகிறானே? அடிமைத்தனம் மனிதனுக்குள் இயல்பாக இருக்கின்ற பண்புபோலும். அவன் ஏதாவது ஒன்றுக்கு அடிமையாகியே தீர வேண்டும்போல. அடிமைத்தனங்கள் அனைத்துமே தவறானவை அல்ல. சில அவனுக்கு நன்மையளிப்பவை. நல்லவற்றுக்கு அடிமையாகும் மனிதன் நன்மைகளைச் சம்பாதிக்கிறான். தீயவற்றுக்கு அடிமையாகும் மனிதன் தனக்குத்தான அழிவை தேடிக் கொள்கிறான்.
நம் வாழ்வில் புகுந்துகொள்ளும் இருளை எப்படி அறிந்துகொள்வது? அது சாதாரண ஒன்றுபோலத்தான் நமக்கு அறிமுகமாகும். சில சமயங்களில் மனிதன் தன்னையும் மீறி அதன் பக்கம் சென்று விடுகிறான். சில சமயங்களில் அதன் பக்கம் சென்றாலும் அவன் காப்பாற்றப்பட்டுவிடுகிறான். இந்த இடம்தான் நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது. இதற்குப் பின்னால் செயல்படும் விதி சில சமயங்களில் அருட்கொடையாகவும் சில சமயங்களில் தண்டனையாகவும் அமைந்து விடுகிறது.
பிரார்த்தனைக்கு விதியை மாற்றும் வலிமை இருக்கிறது என்ற கருத்தில் ஒரு நபிமொழி உண்டு. ஏதேனும் ஓர் இருளில் சிக்கிக் கொண்டவர் அதிலிருந்து வெளியேற விரும்பினால் பிரார்த்தனையையே அவர் ஒரே வழியாகத் தெரிவு செய்ய வேண்டும். பிரார்த்தனை என்பது நம் ஆசையின் வெளிப்பாடுதான். அந்த இருளிலிருந்து வெளியேற வேண்டும் என்ற ஆசை ஒரு கட்டத்தில் பிரார்த்தனையாக மாறிவிடுகிறது. பிரார்த்தனை ஒரு மனிதனுக்குள் நிகழ்த்தும் அற்புதம் மகத்தானது. பிரார்த்தனை வலுவான செயல்பாடாக மாறும் அளவுக்கு வலிமையானது. அந்த இருளிலிருந்து வெளியேற நாம் எதிர்பாராத புறத்திலிருந்து உதவியைப் பெறுவதும் நம் பிரார்த்தனையின் வெளிப்பாடுதான். மனம் தீமையின் பக்கம் சாய்ந்தாலும் பல சமயங்களில் நாம் விலக்கப்படுகிறோம், பாதுகாக்கப்படுகிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.
உங்கள் மனதில் எந்த உணர்வு மிகைத்துக் காணப்படுகிறதோ அதன் பக்கமே நீங்கள் தள்ளப்படுவீர்கள். பாவத்தின் வசீகரத்தை நீங்கள் விரும்பினால் மனம் அதற்கான சாக்குப்போக்குளை ஏராளமாக உருவாக்கி உங்களுக்கு முன்னால் வைக்கும். குற்றவுணர்ச்சி உங்களைக் கொல்லத் தொடங்கிவிட்டால் அதிலிருந்து மீளக்கூடிய வழிகளை நீங்கள் கண்டடைந்து விடுவீர்கள். நீங்கள் தேடியது உங்களுக்குக் கிடைக்கும்.
நிச்சயம் நீங்கள் இறைவனின் உதவியைப் பெறுவீர்கள். ஆனால் அதற்கான நிபந்தனை, நீங்கள்தான் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். அது கொஞ்சம் கடினமானதுதான். தற்காலிகமாக வேறு ஏதேனும் ஒன்றைக் கொண்டு நீங்கள் உங்களை நிரப்பிக் கொள்ள வேண்டும். மனம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த போதையிலிருந்து விடுபடத் தொடங்கும். அது ஒரு கட்டத்தில் விடுபட்டுவிடும், பால்குடி மறக்கடிக்கப்படும் குழந்தையைப்போல. நினைவுகள் கொஞ்சம் தேங்கி நிற்கலாம். அதுவும் ஒரு கட்டத்திற்குப் பிறகு வலுவிழந்துவிடும். நீங்கள் நேரான வழியை விரும்பினால் நிச்சயம் பாதுகாக்கப்படுவீர்கள். நம் பாதையைத் தீர்மானிப்பதில் நம் உள்ளத்தில் கொண்டிருக்கும் கண்ணோட்டங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
