அகீதா பிரச்சனை

You are currently viewing அகீதா பிரச்சனை

அகீதா என்றால் கொள்கைசார்ந்த, நம்பிக்கைசார்ந்த விசயங்கள் தொடர்பாக சொல்லப்படும் ஒரு வார்த்தை. இந்த வார்த்தை நபியவர்களின் காலகட்டத்திலோ அவர்களுடைய தோழர்களின் காலகட்டத்திலோ உருவாகி இருக்கவில்லை. இந்த வார்த்தையே பிற்காலத்தில் உருவாகி வந்த அந்நியமான ஒன்றுதான்.

சரி, இந்த வார்த்தையை நாம் ஏற்றுக்கொள்வோம். முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அகீதா என்பது ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனுடைய தூதராகவும் அடியாராகவும் இருக்கின்றார்கள்’ என்பதுதான். இதுதான் நம்முடைய அகீதா. இந்த கொள்கையை மனதளவில் ஏற்றுக்கொண்டு நாவளவில் வெளிப்படுத்தினால் ஒருவர் முஸ்லிமாகி விடுவார். இன்னும் விரிவாகச் சொன்னால் ஆறு விசயங்களை நாம் நம்ப வேண்டியிருக்கிறது. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் அவன் அனுப்பிய தூதர்களையும் அவர்கள் வழியாக அவன் வழங்கிய வேதங்களையும் அவனுடைய வானவர்களையும் நன்மை, தீமை அனைத்தும் அவனிடமிருந்தே நிகழ்கின்ற என்ற விதியையும் நம்ப வேண்டியிருக்கிறது.

பல்வேறு சமூக மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதனாலும் கிரேக்க தத்துவத்தின் தாக்கத்தினாலும் உள்ளிருந்து இஸ்லாத்தை அரிக்க நினைத்த எதிரிகளின் சூழ்ச்சிகளினாலும் சில மனிதர்களின் புரிதல் குறைபாட்டினாலும் புதிய புதிய குழப்பங்கள் முஸ்லிம் சமூகத்தில் உருவாயின. அந்த குழப்பங்களை எதிர்கொள்வதற்கு பல்வேறு சிந்தனைப் பள்ளியினர் முஸ்லிம் சமூகத்தில் உருவானார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தக் குழப்பங்கள் எதிர்கொள்ளப்பட்டிருக்கின்றன. அகீதா சிந்தனைப் பள்ளிகள் அப்படி உருவானவை. அவற்றுள் இஸ்லாத்திற்கு நெருக்கமான சிந்தனைப் பள்ளிகளும் இருக்கின்றன. இஸ்லாத்தைற்கு தூரமான சிந்தனைப் பள்ளிகளும் இருக்கின்றன.

அகீதா நூல்களில் உள்ளவை அனைத்தும் எந்த கருத்து வேறுபாட்டிற்கும் இடமளிக்காத அடிப்படையான உண்மைகளா? இல்லை. அடிப்படையான உண்மைகளும் இருக்கின்றன. கருத்து வேறுபாடுகளுக்கு இடம்தரும் விசயங்களும் இருக்கின்றன. இங்கு சிக்கல் என்னவென்றால், கருத்து வேறுபாட்டுக்குரிய விசயங்கள்கூட அகீதா நூல்களில் இணைக்கப்பட்டு அவை அடிப்படையான உண்மைகள்போன்று போதிக்கப்படுவதுதான்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புதிய குழப்பங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இஸ்லாமிய அறிஞர்கள் குர்ஆன், சுன்னாவின் ஒளியில் நின்று அவற்றை எதிர்கொள்கிறார்கள். அவற்றை இஸ்லாம் என்னும் உரைகல் கொண்டு உரசிப் பார்க்கிறார்கள். அவற்றுக்கான தீர்வுகளை முன்வைக்கிறார்கள். அவை நம்பிக்கை சார்ந்த விவகாரங்கள் எனில் அகீதா என்ற வட்டத்திற்குள் அடங்கி விடுகிறது. வாழ்வியல் சார்ந்த விவகாரம் எனில் ஃபிக்ஹ் என்ற வட்டத்திற்குள் அடங்கி விடுகிறது.

அப்பாஸிய கலீஃபா மஃமூனுடைய காலகட்டத்தில்தான் கிரேக்க தத்துவம் முஸ்லிம் உலகில் பரவலாக நுழைந்தது. மஃமூனுக்கு அதில் தனிப்பட்ட முறையில் பேரார்வம் இருந்ததனால் கிரேக்க தத்துவ நூல்கள் அறபியில் மொழியாக்கம் செய்யப்பட்டன. அந்த மொழியாக்கங்களின் வழியாக கிரேக்க தத்துவம் முஸ்லிம் உலகில் நுழைந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம் உலகில் மெய்யியல் வாதங்களை உருவாக்கத் தொடங்கியது. கிரேக்க தத்துவத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் முஸ்லிம் தத்துவவியலாளர்கள் உருவானார்கள். மிக விரைவிலேயே கிரேக்க தத்துவம்தான் உண்மையை அறிவதற்கான ஒரே வழி என்ற பிம்பம் முஸ்லிம் உலகிலும் உருவாகியது.

கிரேக்க தத்துவம் பயின்றவர்கள் இஸ்லாமிய நம்பிக்கைகளில் பலவீனப்பட்டனர். அவர்கள் அந்த பலவீனத்தை மக்களுக்கு மத்தியில் பரப்பவும் தொடங்கினார்கள். இன்னொரு தரப்பினர் கிரேக்க தத்துவத்தைவிட்டு முழுமையாக ஒதுங்கிக் கொண்டனர். அவர்கள் கிரேக்க தத்துவம் குறித்து எதுவும் அறியாமல் அதனை முழுமையாக நிராகரிக்கவும் தொடங்கினார்கள்.

முஸ்லிம் உலகில் கிரேக்க தத்துவத்தை முதன் முதலாக வீரியமாக எதிர்கொண்டவர்கள் முஃதஸிலாக்கள்தாம் என்கிறார் அஹ்மது அமீன். அவர்கள்தாம் கிரேக்க தத்துவம் எழுப்பிய வாதங்களுக்கு உடனுக்குடன் பதிலளிப்பவர்களாக இருந்தார்கள்.

அவர்கள் கிரேக்க தத்துவம் எழுப்பிய வாதங்களை அவற்றைப் போன்ற வாதங்களைக் கொண்டே எதிர்கொண்டார்கள். இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்றும் அறிவுக்கு முரணான எதுவும் இஸ்லாமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர்கள் கூறினார்கள். அதனடிப்படையில் அறிவால் புரிந்துகொள்ள முடியாத நம்பிக்கை சார்ந்த விசயங்களுக்கு மாற்று விளக்கம் கொடுக்கத் தொடங்கினார்கள். எந்த அளவுக்கெனில் முனைவர் அஹ்மது அமீனின் கருத்துப்படி அவர்கள் அறிவை வழிபடும் நிலைவரை சென்றார்கள். அதாவது அறிவுதான் அவர்களுக்கு எல்லாவற்றுக்குமான அளவுகோலாக இருந்தது. அதனடிப்படையில்தான் இஸ்லாம் கூறும் நம்பிக்கைகளையும் அவர்கள் எடைபோட்டார்கள்.

அப்பாஸிய கலீஃபா மஃமூனின் இயல்புக்கு முஃதஸிலாக்கள்தாம் மிக நெருக்கமானவர்களாக இருந்தார்கள். ஆகவே அவர் முஃதஸிலாக்களை ஆதரித்தார். குறுகிய காலத்திலேயே அவர்கள் அரசவையிலும் நீதிமன்ற பதவிகளிலும் நிரம்பி வழியத் தொடங்கினார்கள். அவர்கள் முன்வைக்கும் கருத்துகளே மார்க்கத்தின் கருத்துகளாக மதிக்கப்பட்டன. அப்படித்தான் தொடங்கியது, குர்ஆன் படைக்கப்பட்டதா? இல்லையா? என்ற விவாதம்

குர்ஆன் படைக்கப்பட்டதா? இல்லையா? என்ற விவாதம் ஒரு மெய்யியல் விவாதம். முஃதஸிலாக்கள்தாம் இந்த விவாதத்தை தொடங்கினார்கள். அவர்களின் சிந்தனைப் பள்ளி அரசின் அங்கீகரிக்கப்பட்ட சிந்தனைப் பள்ளியாக இருந்ததனால் அவர்கள் அதிகாரம் பெற்றவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுக்கு எதிரான கருத்து அதிகாரத்திற்கு எதிரான கருத்தாக ஆக்கப்பட்டது. அவர்கள் அந்த விவாதத்தை அகீதா விவகாரமாக ஆக்கினார்கள். அதனை ஈமானுக்கும் நிராகரிப்பிறகுமான வேறுபாடாக ஆக்கினார்கள். அதாவது குர்ஆன் படைக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்பவர்கள்தாம் முஸ்லிம்கள். அவ்வாறு ஏற்றுக்கொள்ளாதவர்கள் இஸ்லாம் என்னும் வட்டத்தை விட்டே வெளியேறி விடுவார்கள் என்ற அளவுக்கு அவர்கள் தங்களின் வாதத்தை முன்வைத்தார்கள்.

முஃதஸிலாக்களின் சிக்கல், ஒரு பக்கம் அவர்கள் கருத்து சுதந்திரத்தை ஆதரித்தார்கள். இன்னொரு பக்கம், தங்கள் கருத்துக்கு எதிரானவர்களை ஒடுக்கினார்கள். அஹ்மது அமீன் கூறுகிறார்: இது ஒரு ஆச்சரியமான விசயம், பெரும்பாலும் கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக பேசக்கூடியவர்கள் தங்கள் கருத்துக்கு எதிரானவர்களை ஒடுக்குபவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். தங்கள் கருத்துக்கு ஆதரவாகத்தான் அவர்கள் கருத்து சுதந்திரத்தை விரும்புகிறார்கள்போலும்.

அதிகாரத்தோடு தொடர்பு கொண்டிருக்கும் அறிஞர்களுடன் அவ்வளவு எளிதாக நாம் விவாதிக்க முடியாது. அவர்களின் கருத்துகளுக்கு எதிராகச் சொல்லப்படும் கருத்துகளை அரசுக்கு எதிரான கருத்துகளாக அல்லது இஸ்லாத்திற்கு எதிரான கருத்துகளாக அவர்கள் ஆக்கி விடுவார்கள். அப்படித்தான் அன்றைய அரசவை ஆதரவு அறிஞர்களாக இருந்த முஃதஸிலாக்கள் ஆக்கினார்கள்.

இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் அந்தக் காலகட்டத்தின் மகத்தான ஹதீஸ்துறை அறிஞர்களில் ஒருவர். அவரது எளிய வாழ்வும் பற்றற்ற தன்மையும் மார்க்கப் பற்றும் மக்களிடையே செல்வாக்கு மிகுந்தவராக அவரை ஆக்கியிருந்தன. நான்கு மத்ஹபுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹம்பலி மத்ஹபிற்கு இமாம் அஹ்மது இப்னு ஹம்பல்தான் தோற்றுவாய் ஆவார்.

அரசின் சார்பாக முஃதஸிலாக்களின் இந்தக் கருத்து நாடு முழுவதும் அறிஞர்களிடத்தில் அனுப்பப்பட்டு அந்தக் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பணிக்கப்பட்டார்கள். மூவரைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து அறிஞர்களும் அரசின் சார்பாக அனுப்பப்பட்ட இந்த கட்டளையை ஏற்றுக் கொண்டார்கள். ஏற்றுக் கொள்ளாத மூன்று அறிஞர்களும் விசாரணைக்காக அழைக்கப்பட்டார்கள். அவர்களில் இமாம் அஹ்மது இப்னு ஹம்பலும் ஒருவர்.

இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை எனில் நீங்கள் கொல்லப்பட்டு விடுவீர்கள் என்று மூவரிடமும் சொல்லப்பட்டது. இமாம் அஹ்மதைத் தவிர மற்ற இரு அறிஞர்களும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு திரும்பிச் சென்றார்கள். இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் சிறைவைக்கப்பட்டார்.

அரசின் நீதிபதிகளாக இருந்த அனைவரும் முஃதஸிலாக்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள் இமாம் அஹ்மது இப்னு ஹம்பலிடம் விவாதித்தார்கள், மீண்டும் மீண்டும் உரையாடினார்கள். இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார்கள். ஆனாலும் அவர் “அல்லாஹ்வின் வேதத்திலிருந்து, சுன்னாவிலிருந்து எனக்கு ஒரு ஆதாரம் தாருங்கள் ஏற்றுக்கொள்கிறேன்” என்றுதான் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தார். சிறையில் அவர் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். கசையடிகளுக்கு உள்ளானார். ஆனாலும் அவர் தம் கருத்திலிருந்து பின்வாங்கவே இல்லை. குர்ஆனிலிருந்து, சுன்னாவிலிருந்து எனக்கு ஒரு ஆதாரம் தாருங்கள் என்றே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தார்.

அரசருக்கு முன்னால் அவர் கொண்டு நிறுத்தப்பட்டு அவரிடம் விவாதிக்கப்பட்டது. அப்போதும் அவர் முன்னர் சொன்னது போன்றே சொல்லிக் கொண்டிருந்தார். என்ன செய்தாலும் அவர் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதை அவர்கள் அறிந்துகொண்டவுடன் அரசரும் களைப்படைந்து போனார். இறுதியாக அவர் விடுவிக்கப்பட்டார்.

அவரிடமிருந்து வெளிப்பட்ட வீரமும் அரசருக்கும் முன்னால் அவர் காட்டிய ஈமானிய உறுதியும் தாம் சத்தியம் என நம்பிய ஒன்றிற்காக உயிரையும் இழக்க அவர் துணிந்ததும் அநியாயமான முறையில் அவர் பாதிக்கப்பட்டதும் மக்களிடையே அவருக்கு இருந்த செல்வாக்கை பலமடங்கு அதிகமாகக் கூட்டின. மக்கள் அவரை விரும்பவும் முஃதஸிலாக்களை வெறுக்கவும் தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக முஃதஸிலாக்கள் அரசின் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டார்கள்.

இமாம் அஹ்மது இப்னு ஹம்பலை மறுமலர்ச்சி நாயகர்களில் ஒருவராக அபுல் ஹசன் நத்வீ குறிப்பிடுகிறார். முஸ்லிம் உலகில் தத்துவச் சிந்தனை பரவி உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் தம் எதிர்ப்பின் வழியாக அதனை முனைமழுங்கச் செய்தார். வீணர்களின் வாதங்களுக்கு, அரசர்களின் மன விருப்பங்களுக்கு கட்டுப்படாமல் உறுதியாக நின்றார். அரசவை அறிஞர்களை தனியாளாக எதிர்த்து நின்று சத்தியத்தை நிலைநிறுத்தினார்.

இமாம் அஹ்மது இப்னு ஹம்பலின் வழி அகீதாவிலும் ஒரு சிந்தனைப்பள்ளி நிலைபெறுகிறது. அவர்கள் அஸரீகள் அல்லது ஹம்பலீகள் என்றழைப்படுகிறார்கள். இவர்கள் முஃதஸிலா சிந்தனைப்பள்ளிக்கு நேர்எதிரான சிந்தனைப் பள்ளி ஆவர்.

இமாம் அஹ்மது இப்னு ஹம்பலின் காலகட்டத்திற்குப் பிறகும் முஃதஸிலா கொள்கை வேகமாகப் பரவியது. முஃதஸிலாக்கள் ஆட்சிப் பதவிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் அகற்றப்பட்டு விட்டாலும் அறிவுத்தளத்தில் அவர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. அவர்களை வாதத்தில் வெல்லக்கூடிய திறமை ஹம்பலிகளுக்கு அல்லது அஹ்லுல் ஹதீஸ் என்று அழைக்கப்பட்டவர்களுக்கு இருக்கவில்லை. இதனால் இளைஞர்கள் அதிக அளவில் முஃதஸிலா கொள்கையின் பக்கமே கவரப்பட்டார்கள்.

ஹம்பலிகள் கூறுவதுபோன்று முஃதஸிலா கொள்கையை ஒரேயடியாக ஒரு எதிர்மறை கொள்கையாக நிறுத்திவிட முடியாது. கிரேக்க தத்துவத்தால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்களை அவர்கள் இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனாலும் ஒன்றை இப்படி எதிர்கொள்ளும் சில வரம்புமீறல்களும் நிகழத்தான் செய்யும். அந்த வரம்பு மீறலை உணர்ந்து நேர்வழியின் பக்கம் திரும்புவதற்கு தக்வாவும் ஈகோவை நசுக்கும் மன தைரியமும் அவசியமாகின்றன. அப்படித் திரும்பியவர்களும் இருக்கிறார்கள். திரும்பாமல் மன முரண்டாக அதில் நிலைத்திருந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் காணப்பட்ட பல கண்ணோட்டங்கள் மெய்யியல் வாதங்களின் விளைவுகள்தாம்.

ஹம்பலிகளுக்கும் முஃதஸிலாக்களுக்கும் விவாதப் போட்டி ஏற்பட்ட சமயங்களில் எல்லாம் முஃதஸிலாக்களே மிகைத்தார்கள். ஏனெனில் ஹம்பலிகள் மெய்யியலை முழுக்க முழுக்க புறக்கணித்தவர்களாக, முன்னோர்களின் வழிமுறையே எங்களுக்குப் போதுமானது என்று சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள். ஹம்பலிகள் இந்த தன்மை அவர்களை மக்களுக்கு மத்தியில் அறிவில் குறைந்தவர்களாகக் காட்டியது. முஃதஸிலாக்களின் இலக்கிய நயம், தர்க்கவியல் திறமை, விவகாரங்களை மிக நுணுக்கமாக அவர்கள் அணுகியது இவையெல்லாம் மக்களை அவர்களின் பக்கமே இழுத்தன. இரு சாராருக்கும் இடையே நிகழும் விவாதங்களை கவனிப்பவர்கள் விவாதத்திறமையுள்ளவர்களின் பக்கம் சாய்வது இயல்பானதுதான்.

இந்தச் சமயத்தில்தான் முஃதஸிலாக்களின் வாதங்களுக்கு வலுவான முறையில் மறுப்பு அளிப்பவராக அவர்களிலிருந்தே ஒருவர் உருவாகி வருகிறார். அவர் முஃதஸிலா கொள்கையைக் கைவிட்டு ஹம்பலிகளின் பக்கம் இணைகிறார். முஃதஸிலாக்களின் வாதங்கள் அனைத்திற்கும் மிக வலுவான முறையில் பதிலளிக்கிறார். அவருடைய பதில்களால் திருப்தியடைந்த பலர் முஃதஸிலா கொள்கையை விட்டுவிட்டு முந்தையவர்களின் பாதையின் பக்கம் திரும்புகிறார்கள். ஆனாலும் தான் அஹ்மது இப்னு ஹம்பலின் வழிமுறையையே பின்பற்றுகிறேன் என்று அவர் கூறினாலும் ஹம்பலிகளால் அவரோடு முழுமையாக ஒட்ட முடியவில்லை. அதற்கான காரணம் என்ன?

இமாம் அபுல் ஹசன் அஷ்அரீ நபித்தோழரான அபூ மூசா அஷ்அரீயின் சந்ததியில் வந்தவர். ஹிஜ்ரீ 270ஆம் ஆண்டு பஸராவில் பிறந்தவர். இவரது தாய் இவருடைய தந்தையின் மரணத்திற்குப் பிறகு அந்தக் காலகட்டத்தில் முஃதஸிலாக்களின் வழிகாட்டியாக இருந்த அபூ அலீ அல்ஜப்பாயீ என்பவரை மணமுடித்துக் கொண்டார். அபுல் ஹசன் அஷ்அரீ இவருடைய பராமரிப்பில்தான் வளர்ந்தார். அவரிடமிருந்து கல்வி கற்று அவருக்குப் பிறகு அவரது இடத்தைப் பூர்த்தி செய்யும் அவருடைய பிரதிநிதியாகவும் ஆனார்.

தொடர்ந்து அவர் நாற்பது வயதுவரை முஃதஸிலாக்களின் சார்பாக வாதாடக்கூடியவராகவே, அவர்களின் நம்பிக்கைக்குரிய இமாம்களில் ஒருவராகவே இருந்தார். ஆனால் திடீரென அவரது மனநிலை அவர் முன்வைத்த வாதங்களுக்கு எதிரானதாக மாறியது. அவரால் தொடர்ந்து முஃதஸிலாக்களின் சார்பாக வாதிட முடியவில்லை. முஃதஸிலாக்கள் தங்களின் வாதங்களுக்கும் தாங்கள் உருவாக்கிய அடிப்படைகளுக்கும் ஏற்ப மார்க்கத்தின் ஆதாரங்களை வளைப்பதாக உணர்ந்தார். ஆழமான சிந்தனைக்கும் நீண்ட பயணத்திற்கும் கசப்பான அனுபவங்களுக்கும் ஏராளமான சறுக்கல்களுக்கும் பிறகு அவர் இந்த நிலையை அடைந்ததாக ஷைய்க் அபுல் ஹசன் நத்வீ குறிப்பிடுகிறார்.

அவரது மனதில் இந்த வகையான எண்ணங்கள் உருவான பிறகு அது குறித்து சிந்தித்தவாறும் விரிவாக வாசித்தவாறும் ஆய்வு செய்தவாறும் நல்லதை தெரிவு செய்யும் ஆற்றலை தமக்கு வழங்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவாறும் தம் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தார். கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள்வரை இந்த நிலை நீடித்தது. அவர் மனத் தெளிவை அடைந்தார். பள்ளிவாசலுக்குச் சென்று முஃதஸிலா கொள்கையைவிட்டு தாம் நீங்கி விட்டதாகவும் முந்தையவர்களின் பாதையின் பக்கம் தாம் திரும்பி விட்டதாகவும் அறிவித்தார். அதற்குப் பிறகு முஃதஸிலாக்களின் வாதங்களுக்குப் பதிலளிக்கத் தொடங்கினார்.

அவர் முஃதஸிலாக்களின் பாசறையில் வளர்ந்தவர் என்பதாலும் தர்க்கவியலில் அவருக்கு இருந்த அபரிமான திறமையினாலும் முஃதஸிலாக்களின் பல வாதங்களுக்கு அவர் தெளிவான பதில்கள் அளித்தார். இவரே முஃதஸிலாக்களை தேடித் தேடிச் சென்று அவர்களிடம் விவாதித்தார். அவரிடம் கேட்கப்பட்டது, நீங்கள் ஏன் பித்அத்வாதிகளை நோக்கிச் செல்கிறீர்கள்? அவர் கூறினார், “அவர்கள் பெரும் பெரும் பதவிகளில் இருப்பவர்கள். அவர்களின் ஈகோவின் காரணமாக அவர்கள் கீழிறங்கி வரமாட்டார்கள். நாம்தாம் அவர்களிடம் சென்று சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டும். நமக்கு சத்தியத்தை தெளிவுபடுத்துவது முக்கியம் அல்லவா?”

அபுல் ஹசன் நத்வீ அவரை மறுமலர்ச்சி நாயகர்களில் ஒருவராகக் குறிப்பிடுகிறார். அது வெறுமனே ஸலஃபிகளின் சார்பாக நின்று வாதாடியதனால் அல்ல. அது ஹம்பலிகளுக்கும் முஃதஸிலாக்களுக்கும் மத்தியில் நடுநிலையான ஒரு போக்கை உருவாக்கியதனால்.

ஷைய்க் அபுல் ஹசன் நத்வீ கூறுகிறார்: “அவர் முஃதஸிலாக்களைப் போன்று அளவுக்கு மீறி அறிவை கண்ணியப்படுத்தவோ அதற்கு எந்த எல்லையும் இல்லை, இறைவனைக் குறித்து, இறைவனின் பண்புகளைக் குறித்து, இயற்கைக்குப் பின்னாலுள்ளவற்றைக் குறித்து தீர்ப்பு கூறவும் அதனால் முடியும் என்று நம்பவோ ஒவ்வொரு விசயத்திலும் இறுதி வார்த்தை கூறும் தகுதி அதற்கு மட்டும்தான் உள்ளது என்று கூறவோ இல்லை. அதேபோன்று அவர் தம் சமகாலத்தில் பலர் கருதியதுபோன்று மார்க்கத்திற்கு உதவி செய்யவும் இஸ்லாமியக் கொள்கையைப் பாதுகாக்கவும் அறிவையும் அதன் ஆற்றலையும் நிராகரிப்பதும் அதனை இழிவாகக் கருதுவதும் அவசியம் என்று கருதவோ முஃதஸிலாக்களும் அவர்களைப் போன்றவர்களும் கிளப்பிய இந்த வாதங்களை – இவை காலத்தின் வளர்சியினால், பல சமூகங்கள், மதங்கள் ஒன்றோடொன்று கலந்ததனால் உருவானவை – விலகியிருக்கவோ இல்லை. மாறாக இந்த வாதங்கள் அனைத்தையும் அவர் கவனத்தில் கொண்டார். ஏனெனில் அவை இஸ்லாமியக் கொள்கையில் பெரும் அதிர்வையும் மார்க்கத்தின் மீதான நம்பிக்கையில் பலவீனத்தையும் ஏற்படுத்தின. அவர் முஃதஸிலாக்களுடன், தத்துவவியலாளர்களுடன் அவர்களின் சொல்லாடல்களைக் கொண்டு அவர்களின் மொழியில் விவாதம் செய்தார். ஞானம்நிரம்பிய இந்த வாசகத்தின் அடிப்படையில் அவர் தம் செயல்பாட்டை அமைத்துக் கொண்டார்: “மக்களுடன் அவர்களின் அறிவுத்தரத்திற்கேற்ப உரையாடுங்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நிராகரிக்கப்பட வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா?” ஓர் அறிஞர் ஒரு பாமரனுடன் அவனுடைய அறிவுத்தரத்திற்கு அப்பாற்பட்ட தொனியில் அவனுடன் உரையாடினால் அவன் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரிக்க அது காரணமாகிவிடும். அதேபோன்று ஓர் அறிஞர் அல்லது புத்திசாலி அல்லது சந்தேகம் கொண்டிருப்பவர் அவரது அறிவுத்தரத்திற்கு ஏற்பட உரையாடப்படவில்லையெனில் அது அவரது சந்தேகத்தையே மென்மேலும் வலுப்படுத்தும். அவரை நிராகரிக்கத் தூண்டும். அவன் ஞானம்நிரம்பிய இந்த அறிவுரையை மிகத் தெளிவாகப் புரிந்திருந்தார். இதனை மிகச் சிறந்த முறையில் செயல்படுத்தவும் செய்தார். இதன்மூலம் அபுல் ஹசன் தம் காலத்தில் மகத்தான சேவைகளைச் செய்தார். பல உள்ளங்களும் அறிவுகளும் – அவற்றின் எண்ணிக்கையை அல்லாஹ்வே அறிவான் – மார்க்கத்தின் மீது உறுதியான நம்பிக்கையைப் பெறுதற்கும் ஈமானிய புத்தொளியைப் பெறுவதற்கும் அவர் காரணமாக அமைந்தார்.

நான் இமாம் அபுல் ஹசன் அல்அஷ்அரீயைக் குறித்து ஆரம்பத்தில் வாசித்த சமயத்தில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் அபுல் ஹசன் நத்வீ இவரை இஸ்லாமிய மறுமலர்ச்சியாளர்களில் ஒருவராகக் குறிப்பிடுகிறார்? அப்படி என்ன இவர் பணி செய்து விட்டார்? விவாதங்கள் செய்தது எல்லாம் பெரிய விசயமா? நான் அப்போது புரிந்து கொண்டிருந்தது எல்லாம், மறுமலர்ச்சியாளர் என்றால் பெரும் போராட்டத்தில் அல்லது மூடநம்பிக்கைக்கு எதிரான ஒரு சீர்திருத்தத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்றுதான். மறுமலர்ச்சியாளர் என்றால் இப்படியான பிம்பம்தான் என் மனதில் இருந்தது. ஆனால் என்னுடைய விரிவான வாசிப்பிற்குப் பிறகு குறிப்பாக கிரேக்க தத்துவம் குறித்தும் சிந்தனைப் பள்ளிகள் குறித்தும் வாசித்த பிறகுதான் அவர் உண்மையில் மாபெரும் மறுமலர்ச்சியாளர் என்பதைப் புரிந்து கொண்டேன். படித்த மக்களிடையே இஸ்லாமியக் கொள்கை குறித்த மனத்தெளிவை ஏற்படுத்தியதில் அவரது பங்கு மிக முக்கியமானது.

அந்தக் காலகட்டத்தில் ஹம்பலிகளின் மிக முக்கியமான பிரச்சனையாக இருந்தது, ஒன்றைக் குறித்த அறிவு இல்லாமல் அதை மட்டையடியாக நிராகரித்தது. ஒன்றைக் குறித்து அறிவு இல்லாமல் அது குறித்து நீங்கள் தவறாகப் பேசும்போது அது குறித்த அறிவுடையவர்கள் உங்களின் பேச்சைக் கேட்டால் உங்களின் நம்பகத்தன்மை அவர்களிடம் அகன்று விடும். நீங்கள் உண்மையாளராக இருந்தாலும் நீங்கள் மடையராகத்தான் பார்க்கப்படுவீர்கள். ஒன்றை நிராகரிப்பதற்கும் அது குறித்த அறிவு அவசியம்.

இன்றும் அகீதா அகீதா என்று சொல்லக்கூடிய பலருக்கும் அது குறித்து முழுமையான அறிவு இருப்பதில்லை. தங்கள் குருமார்கள் சொல்லி விட்டார்கள் என்பதற்காக அந்தக் கருத்தை ஆதரிப்பவர்களாகவும் அதற்கு எதிரான கருத்துகளை மூர்க்கமாக நிராகரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதற்கு ஆதரவாக கவர்ச்சியான வசனங்களையும் அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.

நபியவர்களின் காலத்திலோ நபித்தோழர்களின் காலத்திலோ இந்த விவகாரங்கள் குறித்துப் பேசப்படவில்லை என்பதற்காக நாமும் பேசாமல் இருந்துவிட வேண்டுமா? நபியவர்களின் காலத்திலோ நபித்தோழர்கனின் காலத்திலோ இந்த விவகாரங்கள் எதுவும் இல்லை. ஆகவே அவை குறித்து பேசப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால் பிற்காலத்தில் முஸ்லிம் தத்துவவியலாளர்களும் முஃதஸிலாக்களும் செயலின்மையை ஆதரித்த கதரிய்யாக்களும் இன்னும் பலரும் பல விசயங்களை அகீதாவில் புகுத்தி விட்டார்கள். அவை அந்தக் காலகட்டத்தின் உருவாக்கங்கள். அவற்றுக்கு தகுந்த முறையில் மறுப்பளித்தவர்களில் இமாம் அபுல் ஹசன் அஷ்அரீயும் ஒருவர்.

இமாம் அபுல் ஹசன் அஷ்அரி ஹம்பலிகளோடு இணைந்து விட்டாலும் ஹம்பலிகளில் பலர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அவரும் அவரை ஆதரித்தவர்களும் அகீதாவில் தனித்த சிந்தனைப் பள்ளியினராகவே அறியப்படுகிறார்கள். அஷ்அரீ சிந்தனைப் பள்ளி இப்படித்தான் உருவானது.

அஷ்அரீ சிந்தனைப்பள்ளி ஸலஃபுகளின் பக்கம் நின்றே வாதாடியது. ஆனால் அது ஒவ்வொருவரும் அவர்களின் தரத்திற்கேற்ப உரையாடப்பட வேண்டும் என்பதற்காக அவர்களின் மொழியில் நின்று வாதாடியது. இங்கு கவனிக்க வேண்டியது, பாமரர்களிடம் நீங்கள் அவர்களுக்குப் புரியாத உயர்ந்த மொழியில் உரையாடக்கூடாது. அதேபோன்று படித்தவர்களிடம் பாமரத்தனமான மொழியில், தட்டையான வாத மொழியில் உரையாடக்கூடாது. இரு சாராரும் அவரவர் மொழியில்தான் உரையாடப்பட வேண்டும். நபித்தோழர் அலீயின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது, “நீங்கள் மக்களுடன் அவர்களின் அறிவுத்தரத்திற்கேற்ப உரையாடுங்கள்.”

அஷ்அரீ சிந்தனைப்பள்ளி முஸ்லிம் உலகில் வேகமாகப் பரவியது. ஹம்பலிகள் ஒடுங்கிக் கொண்டே சென்றார்கள். இப்னு தைமிய்யா என்ற மகத்தான ஆளுமை ஹம்பலிகளுக்கு மத்தியில் தோன்றவில்லை எனில் வரலாற்றில் அவர்களின் இடம் சிறிய அளவில்தான் இருந்திருக்கும். இப்னு தைமிய்யா அஷ்அரீகளுக்கு எதிராக, ஹம்பலிகளுக்கு ஆதரவாக வாதிடக்கூடியவராகத்தான் முதன் முதலாக அறியப்பட்டார்.

இமாம் அபுல் ஹசன் அஷ்அரீயின் காலகட்டத்தில் இஸ்லாமிய உலகின் இன்னொரு பகுதியில் உருவானவர்தாம் அபூ மன்சூர் மாதுரிதிய்யா. அஹ்லுஸ்ஸூன்னாவின் சார்பாக நின்று வாதாடிய இமாம்களில் இவரும் ஒருவர். இமாம் அபுல் ஹசன் அஷ்அரீயைப் போன்ற நடுநிலையான சிந்தனை கொண்டவர். இருவரும் வேறு வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் பல கருத்துகளில் ஒத்திசைவைக் கொண்டிருந்தார்கள். இருவருக்கும் மத்தியில் அடிப்படையான விசயங்களில் அல்லாமல் கிளை அம்சங்களில்தான் கருத்து வேறுபாடுகள் இருந்தன என்று அபுல் ஹசன் நத்வீ குறிப்பிடுகின்றார். அகீதாவில் மாதுரிதீ என்ற சிந்தனைப்பள்ளி இவரிடமிருந்தே தோற்றம் பெறுகிறது. அஷ்அரீ சிந்தனைப்பள்ளியும் மாதுரீதி சிந்தனைப்பள்ளியும் ஒரே அலைவரிசையில் இடம்பெறக்கூடியதுதான்.

முஸ்லிம் உலகில் பல்வேறு கொள்கைகள் உருவானாலும் அவற்றுள் பல காலப்போக்கில் அழிந்து விட்டன அல்லது இஸ்லாமிய அறிஞர்களால் இஸ்லாம் அல்ல என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டு விட்டன. அஹ்லுஸ்ஸூன்னாவுக்கும் ஷியாக்களுக்கும் மத்தியிலுள்ள பிரச்சனை அரசியல் ரீதியான பிரச்சனையாகத்தான் தொடங்கியது. அகீதா ரீதியான பிரச்சனையாக தொடங்கவில்லை. பிறகு இரு தரப்பிலும் அகீதா ரீதியான பல பிரிவுகள் உருவாயின. ஒரு கட்டத்தில் இரு தரப்பும் ஒட்ட முடியாத அளவு தூரத்தை அடைந்தன.

இங்கு இன்னொரு விசயம் தெளிவுபடுத்துவதற்கு அவசியமானது என்று கருதுகிறேன். இன்று முஸ்லிம் சமூகத்தில் முஃதஸிலா கொள்கை இல்லை. என்றாலும் ஒரு தரப்பினர் சித்தரிப்பதுபோன்று முஃதஸிலாக்கள் இஸ்லாத்தைவிட்டு வெளியேறியவர்கள் இல்லை. அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தில் பாராட்டத்தக்க பல்வேறு பணிகளை அவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். கிரேக்க தத்துவத்தை எதிர்த்து களமாடியவர்கள் அவர்கள்தாம். முஃதஸிலாக்களைவிட அதிக அளவில் ஆபத்தை விளைவித்தது முஸ்லிம் தத்துவவியலாளர்களும் பாத்தினிய இயக்கமும்தான் என்கிறார் அபுல் ஹசன் நத்வீ.

அவர் கூறுகிறார்: அறிவை வழிபடுவதிலும் மெய்யியலைக் கொண்டு மார்க்கத்தை அளவிடுவதிலும் முஃதஸிலாக்கள் வரம்புமீறிச் சென்றாலும் தூதுத்துவத்தையும் வேதத்தையும் கொண்டு ஒரு சமூகத்தை அதன் சரியான அமைப்பை விட்டும் அதன் உண்மையான ஆன்மாவை விட்டும் விலகிய ஒரு வழிமுறையைக் கொண்டு அதனை வழிநடத்தினாலும் சந்தேகமேயில்லாமல் அவர்களின் இயல்பு மார்க்க இயல்பாகவே இருந்தது. அவர்கள் மார்க்கரீதியாகவே சிந்தித்தார்கள். அவர்கள் தூதுத்துவத்தையும் வஹியையும் நம்பினார்கள். தங்கள் வாழ்க்கையில் பற்றற்றவர்களாகவும் பாவங்களைவிட்டு தவிர்ந்து வாழக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். வணக்க வழிபாடுகளைக் கடைப்பிடித்தார்கள். நன்மையை ஏவி தீமையைத் தடுத்தார்கள். இவையனைத்தையும் அவர்கள் கடைப்பிடித்த கொள்கைகளினாலும் சரியெனக் கண்ட நிலைப்பாடுகளினாலும்தான் செய்தார்கள். பெரும் பாவம் செய்பவர்கள் நிரந்தரமாக நரகத்தில் வீழ்வார்கள் என்றும் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது கட்டாயக் கடமை என்றும் கருதினார்கள். இஸ்லாத்திற்கு சேவை செய்வதிலும் அதனைப் பரப்புவதிலும் நாத்திகர்களை எதிர்த்துப் போராடுவதிலும் முழு ஈடுபாட்டோடு இருந்தார்கள். இஃதிஸால் என்னும் கொள்கையின் பரவலும் அவர்களின் ஆதிக்கமும் இஸ்லாமிய சமூகத்தில் நிராகரிப்பும் நாத்திகமும் தூதுத்துவத்தையும் மறுமையையும் மறுக்கும் போக்கும் பரவுவதற்கு காரணமாக அமையவில்லை. மாறாக அவர்களின் ஆதிக்கத்தில் முஸ்லிம்களிடையே மார்க்க உணர்வும் உயிரோட்டமும் நிலைத்திருக்கவே செய்தன.

ஆனால் மெய்யியலாளர்கள் இந்த விசயத்தில் முற்றிலும் மாறுபட்டவர்கள். மெய்யியல் இயல்பிலேயே தூதுத்துவத்தை நிராகரிக்கிறது. அதற்கு நேர்எதிர்திசையில் நிற்கிறது. முதல் புள்ளியிலேயே அது தூதுத்துவத்தைவிட்டு விலகிச் செல்கிறது. பின்னர் மீண்டும் இரண்டும் எந்தப் புள்ளியிலும் சந்திப்பதேயில்லை. மக்களுக்கு அவர்கள் மெய்யியலின் மீது கொண்ட மதிப்பும் நம்பிக்கையும் கூடிக்கொண்டே செல்லும்போது அவர்கள் மார்க்கத்தைவிட்டு விலகிச் செல்வதும் அதனை இழிவாகக் கருதும் போக்கும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதும் அவர்கள் மெய்யியலாளர்கள் உயர்வாக எண்ணி அவர்களுக்கு அடிபணியும்போது இறைத்தூதர்களை இழிவாகக் கருத ஆரம்பித்துவிடுவார்கள் என்பதும் இயல்பானதுதான். மார்க்க வாழ்க்கையின் எந்தப் பகுதியில் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படாமல் இருக்காது. மார்க்கத்தை இழிவாகக் கருதும் அதன் வட்டத்திலிருந்து வெளியேறுவதை அதன் கடமைகளிலிருந்து விடுதலைபெறுவதை கண்ணியமாகக் கருதும் ஒரு பிரிவினர் முஸ்லிம்களிடையே உருவானார்கள். அவர்களில் சிலர் இதனை வெளிப்படையாக அறிவிப்பதற்கு தைரியத்தைப் பெற்றிருக்கவில்லை. இஸ்லாமியத் தோற்றத்தில் அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள். நிராகரிப்பையும் நாத்திகத்தையும் உள்ளுக்குள் மறைத்திருந்தார்கள்.”

மெய்யியலின் விளைவாக தோற்றம் பெற்றவர்கள்தாம் பாத்தினியாக்கள். ஆனால் இவர்கள் தீய நோக்கம் கொண்டிருந்தவர்கள். இஸ்லாத்தின் மீது காழ்ப்பு கொண்டிருந்தவர்களின் புகலிடமாக அவர்களின் இயக்கம் மாறியது. ஒவ்வொரு வார்த்தைக்கும் இரு பொருள்கள் இருக்கின்றன. ஒன்று, வெளிப்படையானது. இன்னொன்று மறைவானது என்ற கருத்தை முதன் முதலாக முன்வைத்தவர்கள் அவர்கள்தாம். வெளிப்படையானதை அனைவரும் அறிந்து கொள்ளலாம் என்றும் மறைவானதை நாங்கள் மட்டுமே அறிவோம் என்றும் கூறிய அவர்கள் தாங்கள் விரும்பிய கருத்துகளை அதன் வழியாக சமூகத்தில் புகுத்தத் தொடங்கினார்கள். இமாம் கஸ்ஸாலி பாத்தினியாக்களின் கொள்கைகளை முழுமையாக ஆராய்ந்து அவர்களுக்கு விரிவானதொரு மறுப்பை எழுதியிருக்கிறார்.

ஒரு புறம் கிரேக்க தத்துவம் ஏற்படுத்திய பாதிப்புகள். அதன் பாதிப்பில் இஸ்லாத்தின் அடிப்படையான அம்சங்களுக்குக்கூட மாற்று விளக்கம் அளிக்கத் துணிந்த முஸ்லிம் தத்துவவியலாளர்கள். இன்னொரு பக்கம் அவர்களை வலுவான முறையில் எதிர்கொண்டாலும் அவர்களால் பாதிக்கப்பட்ட முஃதஸிலாக்கள். இன்னொரு புறம், கிரேக்க தத்துவத்தைக் கொண்டும் இன்னும் சில விசயங்களைக் கொண்டும் இஸ்லாத்தை தகர்த்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த பாத்தினியாக்கள். இன்னொரு பக்கம், அறியாமையினால் உருவான புதுப்புது கருத்துகள். இன்னொரு பக்கம் பல்வேறு பின்னணிகள் கொண்ட சமூகங்கள் ஒன்றாக இஸ்லாத்தில் கலப்பதனால் உருவான புதிய வகையான கலப்புகள். இப்படி ஏராளமான சிந்தனைக் குழப்பங்கள் அகீதாவின் தேவையை எதிர்பார்த்து நின்றன.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படியான குழப்பங்களுக்கு முஸ்லிம் அறிஞர்கள் விளக்கம் அளித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அகீதா என்பது சிந்தனைக் குழப்பங்களுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் அளித்த விளக்கங்களேயாகும்.

நான் இங்கு முதன்மையாகக் குறிப்பிட எண்ணியது, அகீதா நூல்களின் தேவை எப்படி உருவானது என்பதையும் ஹம்பலீ சிந்தனைப்பள்ளி, அஷ்அரீ சிந்தனைப்பள்ளி, மாதுரிதீ சிந்தனைப் பள்ளி, முஃதஸிலா சிந்தனைப்பள்ளி ஆகியவை எப்படி உருவாயின என்பதையும்தான். நான் அவற்றைக் குறித்து சுருக்கமான அறிமுகத்தை அளித்து விட்டேன் என்று நினைக்கிறேன். இவற்றைத் தவிர பல வழிதவறிய சிந்தனைப் பள்ளிகளும் இருக்கின்றன. அவற்றையும் நான் இடையிடையே குறிப்பிடுகிறேன். இப்போது நான் நேரடியாக அவை முன்வைக்கும் கொள்கைகளையும் அவற்றுக்கான காரணிகளையும் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

அந்த அகீதா நூல்கள் ஒவ்வொருவருக்கும் தேவையா என்றால் அகீதா குறித்து வாசிப்பவர்களுக்கு இந்த நூல்கள் அவசியமானவை என்று கூறுவேன். மற்றவர்களுக்கு அவை பெரிய அளவில் பயனளிக்காது என்று நம்புகிறேன். திருக்குர்ஆன், சுன்னாவிலிருந்து அவர்கள் இயல்பாகப் புரிந்து கொள்ளும் புரிதலே போதுமானது என்று கருதுகிறேன். சிந்தனைக் குழப்பம் இல்லையெனில் இந்த இரு தூய ஊற்றுகளிலிருந்து பருகும் நீரே போதுமானது. இந்தப் பதிவுகளும் அப்படித்தான். அகீதா குறித்து நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால் இந்தப் பதிவுகள் உங்களுக்குப் பயனளிக்கும். இல்லையெனில் இவை உங்களுக்குத் தேவையற்றவை

இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான அகீதா என்பது இந்தக் காலகட்டத்தின் குழப்பங்களை தெளிவுபடுத்தக்கூடியவைதான். நாத்திகம், செக்குரிலிசம், லிபரலிசம், ஃபெமினிசம் மற்றும் இன்ன பிற இசங்கள் நம் இளைஞர்களின் நெஞ்சங்களில் பெரிய அளவில் தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அவர்களையும் அறியாமல் அவற்றின் வாதங்களை அவர்கள் எடுத்து வைப்பவர்களாகவும் சில சமயங்களில் அவற்றுக்காக பரிந்து பேசுபவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். அவை இன்று மேலோங்கிய இசங்களாக இருப்பதால், அவற்றுக்கு எதிராகப் பேசுவது பழமைவாதமாகக் கருதப்படுவதால் தங்களையும் நவீனத்தை ஏற்றுக் கொண்டவர்களாக அல்லது குறைந்தபட்சம் சமரசம் செய்து கொண்டவர்களாக பலரும் காட்ட விரும்புகிறார்கள். அவற்றின் வெள்ளத்தில் இஸ்லாத்தை தவிர மற்றவை எளிதாக அடித்துச் செல்லப்படுகின்றன.

முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் அவற்றுக்கு எதிராக நிற்கிறார்கள். அவை ஏற்படுத்தும் சிக்கலை உணர்கிறார்கள். அவற்றிலிருந்து தங்கள் இளைஞர்கள், பெண்கள், பிள்ளைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகவே அந்தக் கொள்கைகளின் இயல்புகள் என்னென்ன? அவை இஸ்லாத்தோடு எந்த வகைகளில் எல்லாம் வேறுபடுகிறது? அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னென்ன? இஸ்லாம் எவ்வாறு மனித இயல்புக்கு உகந்த மார்க்கம்? இஸ்லாத்தை நாம் அளவுகோலாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்னென்ன? இஸ்லாத்தை கைவிட்டு விடுவதால் முஸ்லிம்கள் மட்டுமல்ல, மனிதர்கள் அனைவரும் அடையக்கூடிய இழப்புகள் என்னென்ன? இந்தக் கேள்விகளும் இவை போன்றையும் தெளிவுபடுத்தப்பட வேண்டியவையாக இருக்கின்றன. இஸ்லாமிய அறிஞர்கள் ஆங்காங்கே இது குறித்து தெளிவுபடுத்திக் கொண்டும் இருக்கிறார்கள். நம்முடைய இந்த தலைமுறையை நாம் பாதுகாக்க விரும்பினால் இந்த அடிப்படையில் அவர்களை பலப்படுத்த வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.

யூசுஃப் அல்கர்ளாவீ ‘ஈமானும் மனித வாழ்க்கையும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். ஈமான் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? ஈமானற்ற தன்மை, நாத்திகம் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவுகள் என்னென்ன? போன்ற கேள்விகளுக்கு விரிவாகவும் தெளிவாகவும் விடையளித்துள்ளார்.

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் என்ற தலைப்பில் செய்யத் குதுப் இஸ்லாம் என்ற வகைகளில் எல்லாம் மற்ற இசங்களை, கொள்கைகளை விட்டு வேறுபட்டு நிற்கிறது என்பது குறித்து மிக விரிவாக எழுதியுள்ளார். சீர்மை வெளியீடாக இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதேபோன்று மேற்கின் இசங்களை விமர்சித்தும் இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் ஆட்சேபனைகளை தெளிவுபடுத்தியும் சுல்தான் அப்துற்றஹ்மான் உமைரீ விரிவான ஆய்வு நூல் ஒன்றை முன்வைத்துள்ளார். எங்களுடைய மொழிபெயர்ப்புப் பட்டியலில் இந்த நூலும் இருக்கிறது. முஸ்லிம்களின் வீழ்ச்சியால் உலகம் இழப்பு என்ன என்ற தலைப்பில் அபுல் ஹசன் நத்வீயும் அற்புதமான நூலொன்றை எழுதியுள்ளார். இப்படியாக ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பதிவு எழுதும்போது என் நினைவில் வந்த நூல்களைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். இந்தக் காலகட்டத்திற்கான அகீதா என்பது இந்த வகையான நூல்களைக் கற்பதுதான்.

மற்றவர்களோடு ஒப்பிடும்போது ஹம்பலிகளும் அஷாயிராக்களும் ஒரே அலைவரிசையில் இடம்பெறக்கூடியவர்கள். ஆனாலும் இரு சிந்தனைப் பள்ளிகளுக்கும் மத்தியில் மோதலும் அதிகம். இரு சாராரும் வார்த்தை அளவில் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொள்கிறார்கள். சிலர் இன்னும் வரம்பு மீறி அதையே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான அளவுகோலாகவும் ஆக்குகிறார்கள். மாதுரிதிய்யாக்களை அஷாயிராக்களோடு இணைத்தே கூறுகிறேன். அஷ்அரீ சிந்தனைப்பள்ளியே உலகில் மிக வேகமாகப் பரவியது. ஹனஃபிகளும் ஷாஃபியாக்களும் அந்தக் கொள்கையை தமதாக்கிக் கொண்டார்கள். இந்தியாவில் அஷ்அரீ சிந்தனைப்பள்ளியைச் சார்ந்தவர்களே அதிகம் காணப்படுகிறார்கள். ஹம்பலி ஃபிக்ஹ் ரீதியான சிந்தனைப்பள்ளி மட்டுமல்ல, அகீதா ரீதியான சிந்தனைப்பள்ளியும்கூட.

எகிப்தில் ஹஸனுல் பன்னா வழி உருவான இயக்கமும் அரேபியாவில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வழி உருவான இயக்கமும் அகீதாவில் ஹம்பலியை சிந்தனைப்பள்ளியை முன்னிலைப்படுத்தின. ஆனாலும் ஹஸனுல் பன்னா ஹம்பலீ சிந்தனைப்பள்ளியை முன்னிறுத்தினாலும் அஷ்அரீ சிந்தனைப்பள்ளிக்கும் மதிப்பளித்தார். இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்தார். மற்றதை வழிகேடு எனத் தாக்கவில்லை. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபும் அவரின் வழிவந்தவர்களும் அஷாயிராக்கள் வழிகெட்டவர்கள் என்றே கருதுகிறார்கள். இந்த வகையில் அவர்கள் யாருடனும் ஒட்டாத தனித்த ஒரு குழுவாக மாறிவிடுகிறார்கள்.

ஹஸனுல் பன்னாவின் வழிவந்தவர்களுடன் அஷாயிராக்களும் ஒன்று கலக்கிறார்கள். செய்யத் குதுப் தம்முடைய திருக்குர்ஆனின் நிழலில் என்ற விரிவுரை நூலில் அல்லாஹ்வின் பண்புகள் தொடர்பாக அஷாயிராக்களின் விளக்கத்திற்கே முன்னுரிமை கொடுக்கிறார். அதுவே திருக்குர்ஆனின் ஆன்மாவுக்கும் மொழிக்கும் மிக நெருக்கமானது என்று கூறுகிறார். செய்யத் குதுபை வஹ்ஹாபிகள் வெறுப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. அவர்கள் செய்யத் குதுபை வெறுப்பதற்கான மற்றுமொரு காரணம், அவரிடம் அரச எதிர்ப்பு இருப்பதாகக் (அதாவது அவர்களின் மொழியில் கிளர்ச்சி சிந்தனை) இருப்பதாகக் கூறுகிறார்கள். உண்மையில் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அரசுக்கு விசுவாசமாக இருப்பதையும் அவர்கள் அகீதாவில் இணைத்து வைத்திருக்கிறார்கள். இது ஒரு ஆச்சரியமான விசயம்தான். ஆகவே அதற்கு எதிரானவர்களை கிளர்ச்சி சிந்தனையாளர்கள் (கவாரிஜ்கள்) என்று முத்திரை குத்தி ஓரம்கட்ட நினைக்கிறார்கள்.

இங்குதான் இஹ்வான்களுக்கும் அவர்களுக்குமான விரிசல் ஏற்படுகிறது. இஹ்வான்கள் வஹ்ஹாபிய அரசுக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் வஹ்ஹாபிய அரசு ஒரு கட்டத்தில் அவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை களையெடுக்கத் தொடங்கியது. அதற்குப் பின்னால் இருக்கின்ற சவூதிய, வஹ்ஹாபிய அரசின் அரசியல் புரிந்துகொள்ளத்தக்கதுதான். இப்போது அங்கு இஹ்வான்களுக்கோ செய்யத் குதுபிற்கோ ஆதரவாக பேசக்கூடிய வஹ்ஹாபிய அறிஞர்கள்கூட அச்சுறுத்தப்படுகிறார்கள், ஓரம்கட்டப்படுகிறார்கள்.

ஹம்பலிகளுக்கும் அஷாயிராக்களுக்கும் மத்தியிலுள்ள கருத்து வேறுபாடுகளைப் பார்ப்பதற்கு முன்னர் இன்னொரு அடிப்படையான விசயத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அது அந்தக் கருத்து வேறுபாடுகளுக்கான மூல காரணியை தெரிந்துகொள்ள உதவலாம். முஃதஸிலாக்கள் அறிவை அளவுகோலாக ஆக்குவதில் வரம்பு மீறிச் சென்றார்கள். அறிவுக்கு முரணான எதுவும் இஸ்லாமாக இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். ஆகவே புரிந்துகொள்ள முடியாத விசயங்களுக்கு அவர்கள் மாற்று விளக்கம் கொடுக்கத் தொடங்கினார்கள். அவர்கள் உருவாக்கிய அடிப்படைகளுக்கு எதிரான ஹதீஸ்களுக்கு மாற்று விளக்கம் கொடுத்தார்கள் அல்லது மறுத்தார்கள்.

இந்த விசயத்தில் ஹம்பலிகள் அவர்களுக்கு நேர்எதிர் திசையில் சென்றார்கள். அவர்களுக்கு மறுப்பு கொடுப்பதில் அறிவின் பங்களிப்பை மட்டுப்படுத்தினார்கள். அறிவு அவசியம் இல்லை என்று அவர்கள் சொல்லாவிட்டாலும் ஒரு கட்டத்தில் மார்க்க விசயங்களைப் புரிந்து கொள்வதில் அறிவின் செயல்பாட்டை மட்டுப்படுத்தினார்கள். இன்னும் சிலர் வரம்பு மீறி கிருஸ்தவர்கள் சொல்வதுபோன்று ‘கண்ணை மூடு, சொல்லப்படுவதை நம்பு’ என்ற அளவுக்குச் சென்றார்கள். மறுப்பு கொடுக்கும்போது கொஞ்சம் வரம்பு மீறிச் செல்வது இயல்புதான். ஒரு கடும்போக்கை வீழ்த்தும்போது இன்னொரு கடும்போக்கு உருவாகி விடுகிறது. அறிவுக்கு முரணாக இருந்தாலும் மார்க்க விசயங்களை, அறிவிப்புகளை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பது அவர்களின் வாதம்.

அஷாயிராக்கள் இந்த விசயத்தில் நடுநிலையைக் கடைப்பிடித்தார்கள். அவர்கள் முஃதஸிலாக்கள் செய்ததுபோன்று அறிவை வரம்பு மீறி வழிபடவும் இல்லை, அதுவே அனைத்திற்குமான அளவுகோல் என்று கூறவும் இல்லை. ஹம்பலீகள் செய்ததுபோன்று ஒரேயடியாக மட்டுப்படுத்தவும் இல்லை. அறிவுக்கு உரிய இடத்தை வழங்கினார்கள். மார்க்கம் சொல்லும் விசயங்களைப் புரிந்து கொள்வதற்கு அறிவு மிக அவசியம் என்றார்கள். ஆனால் அறிவுக்கும் மேலான விசயங்களும் மார்க்கத்தில் இருக்கின்றன, அவை அறிவுக்கு முரணானவை அல்ல. புரிந்துகொள்ள முடியாத விசயங்களை முரணானவை என்று கருத முடியாது என்று அவர்கள் கூறினார்கள். இமாம் கஸ்ஸாலீ கூறுகிறார்: அஷாயிராக்கள் அறிவைவிட அறிவிப்புகளின் வழியாகப் பெறுவதே முதன்மையானது என்று கூறினாலும் அறிவின் பங்களிப்பையும் அவர்கள் வீணாக்கவில்லை. வெறுமனே அறிவிப்புகளின் வழியாகப் பெறுவதை மட்டுமே கொண்டு திருப்தியடைந்து அறிவின், ஆய்வின் வழிமுறைகளை நிராகரிப்பவருக்கு நேர்வழி தெளிவாகாது. ஏனெனில் அறிவின் ஆதாரத்தைக் கொண்டே மார்க்கத்தின் உண்மை நிலை அறிந்துகொள்ளப்படுகிறது. மார்க்கத்தின் ஒளியை ஆதாரமாகக் கொள்ளாமல் அறிவை மட்டுமே சார்ந்திருப்பவரும் நேர்வழியை அடைய மாட்டார்…”

அல்லாஹ்வின் பண்புகள் விசயத்தில் எந்த விளக்கமும் அளிக்கக் கூடாது, அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஹம்பலீ தரப்பின் வாதம். உதாரணமாக, ‘அல்லாஹ்வின் கை ஜமாஅத்தில் இருக்கிறது’ என்ற வாசகம் இடம்பெற்றால் அல்லாஹ்வுக்கு கை இருக்கிறது, அது எப்படி இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. அது மனிதனுக்கு இருப்பது போன்ற கை அல்ல. ஆனால் அதற்கு வேறு விளக்கம் அளிக்கக்கூடாது. நபித்தோழர்கள் வேறு விளக்கம் அளிக்கவில்லை என்று ஹம்பலிகள் கூறுகிறார்கள். அஷாயிராக்கள், அப்படியல்ல. அல்லாஹ்வின் கை இருக்கிறது என்றால் அல்லாஹ்வுடைய உதவி இருக்கிறது என்று பொருள். அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது கை அல்ல. இதைக் கொண்டு அல்லாஹ்வுக்கு கை இருக்கிறது என்று வாதிடக்கூடாது. அவ்வாறு வாதிடுவது அவனுக்கு உருவம் கற்பித்து விடுவதைப் போன்றது என்றும் இது மொழியில் பயன்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு வகைதான் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இரவின் மூன்றாவது பகுதியில் அல்லாஹ் அடிவானத்துக்கு இறங்கி வருகிறான், அல்லாஹ் தன் பாதத்தை வைப்பான் போன்ற வாசகங்கள் தொடர்பாகவும் ஹம்பலிகள் அதே வாதத்தையே முன்வைக்கிறார்கள். அல்லாஹ் இறங்கி வருவான். அவன் எப்படி வருவான் என்று தெரியாது. அது குறித்து நாம் பேசக்கூடாது. அதற்கு வேறு விளக்கமும் அளிக்கக் கூடாது. நபித்தோழர்கள் அது குறித்து எதுவும் பேசவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். அஷாயிரா தரப்பு, அவன் அடிவானத்துக்கு இறங்கி வருகிறான் என்பது அவனுடைய அருளையே குறிக்கிறது. அது அவனுடைய அருள் இறங்குகிறது என்பதையே குறிக்கிறது. அறபுக்களின் மொழியில் இப்படியான பயன்பாடுகள் ஏராளமாக இருக்கின்றன. இது சிக்கலான விசயம் அல்ல. மொழியில் சாதாரணமாகக் காணப்படக்கூடிய ஒரு விசயம்தான் என்று கூறுகிறார்கள். அல்லாஹ் தொடர்பாக கண், கை, கால், முகம் போன்ற வார்த்தைகள் வேறு ஒரு பொருளை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதே அன்றி அல்லாஹ்வுடைய உருவத்தை குறிப்பதற்காக அல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கருத்துக்கு இன்னும் நெருக்கமாக அமைவது, “உலகிலுள்ள அனைத்தும் அழிந்து விடும். அவனுடைய திருமுகம் மட்டுமே நிலைத்திருக்கும்” என்ற வசனம். இங்கு அவனுடைய முகம் குறிப்பிடப்படவில்லை. அவன்தான் குறிப்பிடப்பட்டுள்ளான். அல்லாஹ்வைத் தவிர அனைத்தும் அழிந்துவிடும் என்ற பொருளில்தான் அந்த வசனம் வந்துள்ளது.

இப்படித்தான் ஹம்பலிகளும் அஷாயிராக்களும் கருத்து வேறுபடுகிறார்கள். ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொள்கிறார்கள். ஹம்பலீகள் அஷாயிராக்களைப் பார்த்து “அவர்கள் அல்லாஹ்வின் பண்புகளை நிராகரித்து விட்டார்கள்” என்று கூறுகிறார்கள். அஷாயிராக்கள் ஹம்பலீகளைப் பார்த்து “அவர்கள் அல்லாஹ்வுக்கு உருவம் கற்பித்து விட்டார்கள்” என்று கூறுகிறார்கள்.

அகீதா நூல்களில் இடம்பெறும் இதுபோன்ற விசயங்கள் சாதாரண ஃபிக்ஹ் விவகாரங்களைப் போன்றவைதாம். இதன் வழியாக முஸ்லிம் சமூகத்தில் இரு தரப்பிலிருந்தும் மயிர் பிளக்கும் வாதங்கள் உருவாகி ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டதுதான் மிச்சம்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

This Post Has One Comment

  1. Abdul Rajack

    Masha Allah

Leave a Reply