தேவையில்லாத, முக்கியத்துவம் அற்ற செயல்பாடுகளில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொண்டால் தேவையான, முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகளை செய்ய முடியாதவர்களாகி விடுவீர்கள் அல்லது அவற்றை சரியான முறையில் நிறைவேற்றாதவர்களாகி விடுவீர்கள்.
கவனச் சிறதல்கள் மிகுந்த இந்தக் காலகட்டத்தில் மிக அவசியமாக செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்பதை முடிவு செய்த பிறகு வேறு எவற்றின் பக்கமும் திரும்பாமல் அவற்றில் ஈடுபட்டால் மட்டுமே அவற்றைச் செய்து முடிக்க முடியும். இல்லையெனில் அவசியமற்ற ஏதோ ஒன்றில் மூழ்கி நம் ஆற்றலையும் வளத்தையும் வீணடித்து விடுவோம். இது அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான விசயம் என்றாலும் இஸ்லாமிய அழைப்பாளர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
நம்முடைய மனம் பல்வேறு விசயங்களை ஒருசேர நினைவில் கொள்வதில்லை. மாறாக அவை நம்மை அழுத்தத்திற்கு உள்ளாக்கி களைப்படையச் செய்கின்றன. சில சமயங்களில் நம்மைக் குழப்பி விடுகின்றன. எந்தவொன்றிலும் நாம் முழுமையாக கவனம் செலுத்த முடியாதவர்களாகி விடுகிறோம். எந்தப் பணியையும் உருப்படியாகச் செய்து முடிக்க முடியாது. ஆனால் விரைவாக களைப்படைந்து விடுவோம். நம்முடைய மனம் குறுகியது. அது ஒரே சமயத்தில் பல்வேறு விசயங்களில் கவனம் செலுத்த முடியாது.
இங்கு பல்கலை வித்தகர் உருவாக முடியாது. அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. அதற்கான தேவையும் குறைவு. அதற்கான சாத்தியமின்மை முதலில் பல்வேறு விசயங்களை ஒரு சேர கவனம் செலுத்த முடியாத மனதின் தன்மையிலிருந்தே உருவாகிறது. உங்களின் தன்முனைப்பு உங்களை ஏமாற்றி விடக்கூடாது. உங்களால் முடியாதது எதுவும் இல்லை என்று அது கூறிக் கொண்டேயிருக்கும். ஒவ்வொரு துறைக்கும் நிபுணர்கள் இருக்கிறார்கள். இது நிபுணர்களுக்கான காலகட்டம். துறைசார்ந்த நிபுணர்களை ஏற்றுக்கொள்ள விடாமல் தடுப்பது உங்களின் தன்முனைப்புதான். நீங்கள் மற்றவர்களை அங்கீகரித்தால் அவர்களை உங்களை அங்கீகரிப்பார்கள்.
நீங்கள் ஓர் அமைப்பை வழிநடத்தும் தலைவராக விரும்பினால் துறைசார்ந்த நிபுணர்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களைக் கொண்டு உங்கள் அமைப்பின் வெற்றிடங்களை நிரப்புங்கள். ஓர் இஸ்லாமிய இயக்கம் பல்வேறு பணிகளில் கவனம் செலுத்த முடியும். அதற்கான மனிதர்களையும் அந்த மனிதர்களை ஊக்கப்படுத்தி வழிநடத்தும் சிறந்த தலைமையையும் அது கொண்டிருந்தால். ஆனாலும் உங்களின் வளமும் ஆற்றலும் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டிய முதன்மையான பணிகளுக்குத்தான் முதலில் பயன்படுத்தப்பட வேண்டும். கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் என்பது அந்தக் காலகட்டத்தையும் இடத்தையும் சூழலையும் சாத்தியக்கூறுகளையும் பொறுத்து அமையக்கூடியவை.
இந்த உலகில் எப்படி ஓர் அற்புதமான சமநிலை காணப்படுகிறதோ அதேபோன்று மனித வாழ்க்கையிலும் அற்புதமான சமநிலை காணப்படுகிறது. இஸ்லாமிய அழைப்பியலிலும் இந்த சமநிலை காணப்படுகிறது. மனிதர்களின் ஆர்வங்களும் திறமைகளும் வேறுபட்டவை. ஒவ்வொருவரும் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப ஆர்வங்களையும் திறமைகளையும் கொண்டிருப்பார்கள்.
இஸ்லாமிய அழைப்பியல் பல்வேறு பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும் அதற்கே உரிய நிபுணர்களை, திறமையாளர்களை வேண்டி நிற்கிறது. உங்களின் ஆர்வமும் திறமையும் எந்த பணியில் இருக்கிறதோ அந்தப் பணியில் நீங்கள் ஈடுபடலாம். ஆனால் அது மட்டுமே நிறைவேற்ற வேண்டிய பணி என்ற தோற்றத்தை நீங்கள் ஏற்படுத்தி விடக்கூடாது. மற்ற பணிகளை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். உங்களால் இயன்ற அளவு அந்த பணிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அவர்களை உங்களைச் சார்ந்தவர்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும். அழைப்பாளர்களின் பணிகள் வெவ்வேறு களங்களில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ‘அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காக செயல்படுகிறோம்’ என்ற நோக்கத்தில் ஒன்றிணைய முடியும். இந்த ஒன்றிணைவு மிக அவசியம் என்று கருதுகிறேன். ஒருவர் மற்றவரை வலுப்படுத்துவதன்மூலம் இஸ்லாமிய அழைப்பியலில் செயல்படும் சமநிலையில் நாமும் பங்கேற்க முடியும்.
இந்தியாவில் அரசியல் செயல்பாடு என்பது ஆழமான கிணற்றில் பொடிக்கற்களை போடுவதைப் போன்ற ஒன்றுதான். சில சமயங்களில் அது உங்களை நிராசையடையச் செய்து விடலாம். அது சிலரை எதிர்மறை மனிதர்களாக மாற்றிவிடலாம். ஆகவே நீங்கள் செய்யும் பணிகள் இந்த உலகில் என்ன வகையான மாற்றங்களை ஏற்படுத்தும்? மறுமையில் அவை அல்லாஹ்விடத்தில் கூலியை பெற்றுத் தருமா? இந்த செயல்கள் எனக்கு மனநிறைவைத் தருமா? இவை போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்களை நீங்கள் பெற்றிருப்பது மிக அவசியம் என்று கருதுகிறேன். அப்படி இல்லையெனில் ஏதேனும் ஒரு அழைப்பியல் செயல்பாட்டில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இதுவும் மிகக் குறைவான அளவில்தான் உங்களுக்குப் பயனளிக்கும் என்றாலும் அல்லாஹ்விடத்தில் கூலி கிடைக்கும் என்ற திருப்தி உங்களுக்குக் கிடைக்கும்.
என்னைப் பொறுத்தவரை இங்கு நீங்கள் செய்யும் தனிப்பட்ட பணிகள், ஆர்வங்கள் தவிர்த்து சமூகத்திற்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அது இஸ்லாமிய அழைப்பியலின் ஏதேனும் ஒரு பணியாகவே இருக்க வேண்டும் என்று பரிந்துரைப்பேன். அழைப்பியலுக்கான தேவைகளும் சாத்தியக்கூறுகளும் இங்கு மிகுந்திருக்க வேறு பணிகளில் கவனம் செலுத்துவது ஆற்றலையும் வளத்தையும் வீணடிப்பதில்தான் உள்ளடங்கும். இங்கு அழைப்பியலுக்கான சாத்தியக்கூறுகள் இன்றளவும் அப்படியேதான் இருக்கின்றன. அரசியல் நெருக்கடிகள்தாம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
