அந்த இடம் எனக்கு சொர்க்கமாகத் தெரிந்தது. அந்த இடத்தை சொர்க்கம் என்றுதான் நினைத்தேன். அந்த இடத்தின் அமைதி மனதில் அபூர்வமான உணர்வையும் அமைதியையும் ஏற்படுத்தியது. எனக்காகவே அந்த இடம் உருவாக்கப்பட்டிருப்பதாக நினைத்தேன். வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத அற்புதமான அனுபவம் அது. அந்த அனுபவம் குறுகிய காலம் அல்ல, நீண்ட காலம்வரை நீடித்தது.
ஒரு கட்டத்தில் அந்த இடம் கடுமையான வெறுமையை ஏற்படுத்தத் தொடங்கியது. விரும்பிய அந்த இடத்தில் இருக்காமல் விலகி ஓடத் தொடங்கினேன். இத்தனை நாள்வரை இனித்த இந்த இடம் திடீரென்று ஏன் கசக்கத் தொடங்கியது என்று யோசித்தேன். ஒன்றுமே புரியவில்லை. குறிப்பிட்ட காலம்வரை எனக்கு அற்புதமான ஆன்மிக உணர்வை தந்த அந்த இடம் இப்போது வெறுமையை ஏற்படுத்துகிறது. ஏதேதோ காரணங்கள் கூறிக் கொண்டேன். எனக்கு நானே சாக்குப்போக்குகள் சொல்லிக் கொண்டேன். அந்த இடத்தைவிட்டு அகன்ற பிறகே அந்த வெறுமை நீங்கியது. அந்த அற்புதமான ஆன்மீக உணர்வையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கு எதிரான வெறுமையையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அங்கிருந்ததும் அங்கிருந்து விலகிச் சென்றதும் விதி என்பதைத் தவிர வேறு எதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
சில மனிதர்களுடன் நாம் கொள்ளும் உறவும் இப்படித்தான். அதீத நெருக்கம் ஒரு கட்டத்திற்குப் பிறகு அந்த நெருக்கத்தை மறக்கடிக்கும் விலகல் என ஒன்றுக்கொன்று முரணான அனுபவங்களை எதிர்கொள்கிறோம். இரண்டு நிலைகளுக்கும் உகந்த காரணங்களை எடுத்துரைத்து நமக்கு நாமே நியாய வாதங்களை முன்வைத்துக் கொள்கிறோம். இணைதலும் விலகுதலும் விதியின் பாதையில் நிகழ்ந்தவை என்பதைத் தவிர அவற்றுக்கு வேறு விளக்கங்கள் நாம் அளிக்க முடியாது. ஆனாலும் விளக்கங்கள் அளிக்கிறோம், நம்மையும் மற்றவர்களையும் திருப்திபடுத்தும்பொருட்டு.
இது ஒரு எடுத்துக்காட்டுதான். நம்முடைய வாழ்வில் இப்படியான அனுபவங்களை நாம் மீண்டும் மீண்டும் எதிர்கொள்ள நேரிடலாம். அதனால் சில சமயம் நாம் புகழப்படலாம். சில சமயம் இகழப்படலாம். அது அருட்கொடையாகவும் அமையலாம் அல்லது தண்டனையாகவும் அமையலாம். நம் வாழ்வு புரிந்துகொள்ள முடியாத நிகழ்வுகளால் நிரம்பிக் காணப்பட்டாலும் நாம் அவற்றின் பக்கம் கவனம் செலுத்துவதில்லை. நாம் எளிதாக எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம். சில சமயங்களில் விதி என்ற ஒன்றில் எல்லாவற்றையும் மூடி விடுகின்றோம். அதுதான் நமக்கு இலகுவானதும்கூட.
பரந்து விரிந்த இந்தப் பிரபஞ்சத்தை சற்று உற்றுப் பார்த்தால் நாம் எந்த மதிப்பும் அற்றவர்கள் என்று தோன்றும். ஆனால் நம்மை நாமே, நம்மைச் சுற்றிலும் நிகழும் நிகழ்வுகளை உற்றுப் பார்த்தால் நாம் ஒரு உயரிய நோக்கத்திற்காக படைக்கப்பட்டுள்ளோம் என்று தோன்றும். இந்த இரண்டு பார்வைகளுக்கு மத்தியில் காணப்படும் சமநிலையே வாழ்க்கை. நாம் அற்பத் துளிகள்தான். ஆனால் வீணான துளிகள் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தின் சமநிலையில் நம்மையும் மீறி நாம் பங்கு வகிக்கின்றோம்.
