மனதில் பயம் தொற்றிக் கொண்டால் வாழ்க்கை நரகமாகி விடும். உறுதியான நம்பிக்கையைக் கொண்டே அந்த பயத்தை நீக்க முடியும். அது நம்மைப் படைத்துப் பராமரிக்கும் பேரிறைவனின் மீதான உறுதியான நம்பிக்கை. அவன் நம்மைக் கைவிட மாட்டான் என்னும் வலுவான நம்பிக்கை.
அந்தப் பேரிறைவனை விட்டுவிட்டு நீங்கள் எதைப் பற்றிக் கொண்டாலும் உங்களின் பயம் தீராது. வாழ்க்கையில் அவனைத் தவிர வேறு எங்கும் அடைக்கலம் இல்லை என்ற சந்தர்ப்பத்தை நீங்கள் அடைந்தும் அவனிடம் அடைக்கலம் தேடவில்லை எனில் உள்ளத்தின் நோய் உங்களைக் கொன்றுவிடும். இறைவனை மறந்து வாழ்கின்ற, மறுத்து வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் இப்படியான சந்தர்ப்பங்கள் வரவே செய்யும். இறைவன் அவகாசம் அளிப்பான். அது நீங்கள் திருந்துவதற்கான அவகாசம். அப்போதும் நீங்கள் உங்களின் தவறை உணர்ந்து அவனிடம் மீளவில்லை எனில் நீங்கள் நரகப் படுகுழியை நோக்கியே விரைந்து செல்கிறீர்கள்.
உண்மையான இறைவனை விட்டுவிட்டு நீங்கள் எங்கே செல்வீர்கள்? போலித் தெய்வங்களிடம் சரணடைவீர்கள். உங்களைப் போல பலவீனம் கொண்ட மனிதனை இறைவனாக ஏற்றுக் கொள்வீர்கள். உங்களால் புரிந்து கொள்ள முடியாத மூடுமந்திரத்திற்குள் நுழைவீர்கள். இறைவனை மறுத்துவிட்டு உங்களால் வாழவே முடியாது. வாழ்க்கை அதன் சிக்கலான கோர முகத்தை உங்களிடம் காட்டும்போது மனம்பிறழ்ந்து விடுவீர்கள். எதையும் நம்பாத நீங்கள் சொல்லப்படும் அனைத்தையும் நம்ப ஆரம்பித்து விடுவீர்கள்.
சந்தேகங்கள் இயல்பாக உருவாகக்கூடியவைதாம். அந்த சந்தேகங்களுக்கு விடை தேடி புறப்படும் நம்பிக்கையாளன் தகுந்த விடைகளை, மனநிறைவை அடைவான். வழிவழியாக வரக்கூடிய நம்பிக்கைகளின் மீது சந்தேகங்கள் உருவாகலாம். திருப்தியளிக்கும் பதில்கள் அந்த சந்தேகங்களை அகற்றிவிடும். ஆனால் இன்னொன்று இருக்கிறது. அந்த சந்தேகங்களோடு கட்டற்ற ஒரு வாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசையும் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வும் ஒன்றுகலந்து விடுவது. அப்படிப்பட்டவன் அந்த சந்தேகங்களிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணாமல் அவற்றையே சாக்காகக் கொண்டு வெளியேறிவிட வேண்டும் என்று விரும்பினால் அவன் நாத்திகத்தின் பாதையை தெரிவு செய்வான்.
முர்தத்துகள் முதலில் நாத்திகத்தின் பக்கம் சாய்கிறார்கள். அதற்குப் பிறகுதான் சொந்த சமூகத்தின் மீது, முந்தைய நம்பிக்கையின், வழக்கங்களின் மீது கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு உருவாகத் தொடங்கி ஒரு கட்டத்தில் தீவிர வெறுப்பாக உருமாறுகிறது. போலியான வாதங்களைக் கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு சொந்த சமூகத்தினரின் நம்பிக்கைகள் மீது வெறிநாய்கள்போன்று தாக்குதல் தொடுக்கத் தொடங்குகிறார்கள். முர்தத்துகள் இந்த நிலையை அடைந்து விட்டால் அவர்களுடன் விவாதிப்பது வீணாகி விடும். வெறுப்பை கக்கிக் கொண்டே இருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு நோக்கம் இருக்காது. அந்த வெறுப்பை அவர்கள் பல்வேறு வார்த்தைகளைக் கொண்டு மறைக்க முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களால் அந்த வெறுப்பை மறைத்துவிட முடியாது. வெறிநாய்களை அடையாளம் காண்பது கடினமானது அல்ல.
ஈமான் என்பது ஒளி. ஈமானிய ஒளியைப் பெறுவதற்கு நீங்கள் இயல்பு நிலையில் நீடித்தாலே போதுமானது. மனித உள்ளத்தில் ஏற்கனவே இஸ்லாம் இருக்கிறது. நபியவர்கள் வழியாக மனித சமூகத்திற்கு வழங்கப்பட்ட இஸ்லாம் ஏற்கனவே உள்ளத்திலிருக்கும் இஸ்லாத்தை உறுதிப்படுத்துகிறது. அது ஒளியின் மீது ஒளியாக அமைந்து விடுகிறது. இஸ்லாம் மனித இயல்புக்கு மிக நெருக்கமானது, உகந்தது என்று கூறுவது இந்தப் பொருளில்தான்.
இஸ்லாம் அந்நியமான ஒன்றல்ல. அது உங்களிடம் இருப்பதுதான். அது கூறும் போதனைகள் அந்நியமானவை அல்ல. இயல்பு நிலையில் நீடிப்பவர்களின் கருத்துகளையும் இஸ்லாத்தின் போதனைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த விசயத்தை மிக எளிதாக விளங்கிக் கொள்ள முடியும்.
இஸ்லாத்தின் போதனைகள் உங்களுக்கு கசக்கத் தொடங்கினால் நீங்கள் உங்களின் இயல்பான அளவுகோலை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதற்கு பாலின சமத்துவம், சமூக நீதி, விலங்கு நேசம் போன்ற சொல்லாடல்களை முன்வைக்கலாம். ஆனால் அவற்றுப் பின்னால் இருப்பது உங்களின் குற்ற உணர்ச்சிகளை நீங்கள் வெல்ல நினைப்பதும் கட்டற்ற ஒரு வாழ்க்கையின் மீதான உங்களின் விருப்பமும்தான்.
