மனிதன் அவசரப்படக்கூடியவனாக இருக்கிறான் என்கிறது திருக்குர்ஆன். அவசரம் அவனது இயல்பில் உள்ள ஒன்று. ஆனாலும் அந்த அவசரத்திற்கு கட்டுப்படாமல் நிதானமாகச் செயல்படுபவர்களே அதன் பாதிப்புகளிலிருந்து தப்புகிறார்கள். உணர்ச்சி மேலிடும்போது மனிதன் அவசரக்காரனாக மாறுகிறான். அவசரப்பட்டு அளவுகடந்து புகழ்கிறான். அவசரப்பட்டு சாபம் இடுகிறான். யாரை அவன் புகழ்ந்தானோ அவர்களை ஒரு கட்டத்தில் சபிக்கவும் செய்கிறான். யாரை அவன் சபித்தானோ அவர்களை ஒரு கட்டத்தில் புகழவும் செய்கிறான்.
நீங்கள் நிதானமான நிலையில் ஒருவரைப் புகழ்ந்தால் அதற்காக வருத்தப்பட மாட்டீர்கள். நீங்கள் நிதானமான நிலையில் ஒருவரை இகழ்ந்தால் அதற்காக வருத்தப்பட மாட்டீர்கள். உங்களிடமிருந்து வெளிப்படும் அவசரம்தான் உங்களை வருத்தப்பட வைக்கிறது. தவிர்க்கப்பட வேண்டியது அவசரம்தான். சில அதிரடியான முடிவுகள் உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் நெருக்கமானவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
நன்மையான விசயங்களில் அவசரம் விரும்பத்தக்கது. நன்மைகளின் பக்கம் விரையுங்கள் என்கிறது திருக்குர்ஆன். ஏனெனில் ஷைத்தான் ஏதேனும் ஒரு ஊசலாட்டத்தை ஏற்படுத்தி நம்மை அவற்றிலிருந்து திருப்பி விடக்கூடும். சில தருணங்கள் உடனடியான முடிவை வேண்டி நிற்கின்றன. சில தருணங்கள் நிதானத்தை வேண்டி நிற்கின்றன. நம்மிடம் காணப்படும் பக்குவத்திற்கேற்ப இரு வகையான தருணங்களையும் நாம் பிரித்து அறிகிறோம்.
சில தருணங்களில் ஒன்றை தேர்வு செய்ய முடியாமல் நாம் தடுமாறலாம். அந்த தடுமாற்றம் இயல்புதான். எதிர்காலம் குறித்து நாம் எதையும் உறுதியாகக் கூற முடியாது. நம்முடைய கணிப்புகள் கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை. முற்றிலும் அதற்கு மாறாகவும் நிகழலாம். அந்தச் சமயங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்து விட்டு உள்ளுதிப்பின் அடிப்படையில் செயல்படுவதே சிறந்தது.
