“பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போது ஏற்படும் தீங்கிலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன்”
பொறாமை ஒரு மோசமான குணம். அது மனிதனை ஷைத்தானாக மாற்றி விடும் தன்மை கொண்டது. பொறாமைக்காரன் மன நிறைவு அடைய முடியாது. அவன் யார் மீது பொறாமை கொண்டோனோ அவர் அடையும் வீழ்ச்சிதான் அவனை அமைதிப்படுத்தும். உண்மையில் இது குரூர ஆனந்தம். அவனுக்குள் நல்ல பண்புகள் மிச்சமிருந்தால் அந்த ஆனந்தம் அவனுக்குள் குமட்டலையும் வருத்தத்தையும் உண்டாகும். ஆதமின் மகன் அப்படித்தான் வருத்தப்பட்டான்.
பொறாமை என்பது என்ன? ஒருவரிடம் இருக்கும் அருட்கொடை அழிய வேண்டும் என்று விரும்புவது. எந்த தனித்தன்மையின் காரணமாக ஒருவர் சிறப்பிக்கப்படுகிறாரோ அது அவரிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்று விரும்புவது. மனித மனதின் கீழ்மை இப்படித்தான் விரும்பும். அந்தக் கீழ்மையை நாம் அடையாளம் கண்டு நசுக்கவில்லை என்றால் அது நம்மை மிகைத்து விடும். நம்மையும் மீறி நம்முடைய சொற்களிலும் செயல்களிலும் அது வெளிப்படத் தொடங்கும். குரூர ஆனந்தத்தை விரும்பும் மனம் அதற்கான போலிக் காரணங்களையும் ஏற்படுத்திக் கொள்ளும்.
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போது ஏற்படும் தீங்கிலிருந்து பாதுகாவல் தேடுமாறு நாம் பணிக்கப்பட்டுள்ளோம். அவனை நாம் அறிந்துகொள்ள முடியாது. சில சமயங்களில் அறிகுறிகளை முன்வைத்து கணிக்கலாம். ஆனாலும் அந்தக் கணிப்பு உண்மையாகவும் இருக்கலாம் அதற்கு மாறாகவும் இருக்கலாம். சில சமயங்களில் அந்தக் கணிப்பு நம்மை எதிர்மறையான மனிதராகக் கூட மாற்றி விடலாம். பொறாமை அற்ற மனிதர்களை நாம் காண முடியாது. இந்தப் பொறாமை நமக்குள்ளும் எரிந்து கொண்டிருக்கிறது தானே! மனிதர்களை அவர்களின் பலவீனங்களை மட்டுமே முன்வைத்து அணுகினால் நாம் யாரிடமிருந்தும் பயன்பெற முடியாது. நாம் ஒதுங்கி ஒதுக்கப்பட்டு விடுவோம்.
இது நமக்குத் தெரியாமல் நிகழும், நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத மறைவான தீங்கு. எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இறைவனிடம் பாதுகாவல் தேடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. அவனுடைய அனுமதியின்றி எதுவும் நமக்குத் தீங்கிழைத்து விட முடியாது. அவனே நமக்கான அடைக்கலம். அவனைத் தவிர வேறு எங்கும் நமக்கு அடைக்கலம் இல்லை. இந்த உண்மையை மனம் உணரும்போது எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் தேவையற்ற அச்சங்களிலிருந்தும் விடுபட்டு விடுகிறது.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ
வ அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹ்