“ஒரு மனிதன் எந்த அளவு மக்களிடம் தேவையற்றிருப்பானோ அந்த அளவு அவன் அவர்களிடம் கண்ணியம் வாய்ந்தவனாக இருப்பான்” என்ற நபிமொழியை நண்பர் ஒருவரிடம் கூறினேன். ஆனால் இந்த விசயத்தில் கூடுதலாக புரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு அம்சமும் இருக்கிறது. முடிந்த மட்டும் பிறரிடம் உதவியை நாடாமல் இருத்தல் வேறு. அவர்களின் உதவி தனக்குத் தேவையே இல்லை என்று எண்ணுவது வேறு. முடிந்த மட்டும் பிறரின் உதவியை நாடாமல் இருப்பதன்மூலமும் பிறருக்கு உதவி செய்வதன்மூலமும் நாம் கண்ணியத்தைப் பெறலாம் என்பது உண்மையே.
ஒரு மனிதன் தன்னை தேவையற்றவனாக உணரும்போது கர்வம் கொள்பவனாக, சக மனிதர்களை மதிக்காதவனாக மாறுகிறான். தேவைகள்தாம் ஒரு மனிதனை சக மனிதர்களுடன் இணைக்கின்றன. இந்தக் கருத்து திருக்குர்ஆனிலிருந்து பெறப்பட்டதுதான். தன்னால் எதுவும் செய்ய முடியும். தனக்கு யாருடைய தயவும் அவசியம் இல்லை என்று கருதும் மனிதன் கர்வம் கொள்பவனாக, உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவனாக, அநியாயம் இழைப்பவனாக மாறலாம்.
தேவையும் சார்பு வாழ்க்கையும்தான் ஒரு மனிதனை சக மனிதர்களுடன் இணைக்கின்றன. அதனால்தான் அவன் குடும்பத்தை உருவாக்கி மனித சமூகத்தைப் பாதுகாக்கும், பெருக்கும் பணியில் தன்னையும் மீறி ஈடுபடுகிறான். கர்வம் மனிதனைத் தனிமைப்படுத்துகிறது. அது அவனை சக மனிதர்களைவிட்டு தூரமாக்குகிறது. தன்னைச் சுற்றி அவன் ஒரு வளையத்தை ஏற்படுத்தி அதிலேயே அடைபட்டு விடுகிறான். உண்மையில் அவன் தனக்குத்தானே அநீதி இழைப்பவனாக மாறிவிடுகிறான். ஒரு கட்டத்தில் அதிலிருந்து மீள முடியாத நிலையை அடைந்து விடுகிறான்.
ஒரு மனிதன் சக மனிதர்களுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டிருப்பது மிகவும் அவசியம். குறைந்தபட்சம் பேசுவதற்காக, கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்காக, ஆறுதல் பெற்றுக் கொள்வதற்காக, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக.. இப்படி ஒவ்வொரு விசயத்திற்கும் ஒரு மனிதனுக்கு சக மனிதர்கள் அவசியமாகிறார்கள். தனிமைப்படுபவர்கள் தங்களைத் தாங்களே சிறையில் அடைத்துக் கொள்கிறார்கள்.
~~~~~~~~~~~
நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ‘சேர்ந்து இருப்பதற்கு சார்ந்து வாழ்வது மிக அவசியம்’ என்று கூறினேன். கூறிய பிறகுதான் இந்த வாசகம் செறிவான ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். நாம் ஒருவரை எந்த அளவு சார்ந்து இருக்கிறோமோ அந்த அளவு அவர்களுடன் சேர்ந்தும் இருப்போம். உணர்வுகள் தற்காலிகமானவை. அவை நீண்ட காலம் நீடிப்பவை அல்ல. ஆரம்பகட்ட இணைதலுக்கு உணர்வுகள் அவசியமானவையாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து இணைந்திருத்தலுக்கு சார்பு வாழ்க்கையே அவசியம்.
உறவினர்கள் இணைந்திருப்பதற்கும் நண்பர்கள் சேர்ந்திருப்பதற்கும் பின்னால் சார்பு வாழ்க்கையே இருக்கிறது. ஒரே விதமான திறமைகள் கொண்டவர்கள் இணைந்திருக்க மாட்டார்கள். அவ்வாறு அவர்கள் சேர்ந்திருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு மத்தியில் பொறாமையும் காழ்ப்பும் அதிக அளவு வேலை செய்யும். ஒருவரின் திறமை இன்னொருவரின் பலவீனத்தைப் போக்குகிறது என்னும் பட்சத்தில்தான் அவர்கள் இணைந்திருப்பார்கள்.
இங்கு யாரும் யாருக்காகவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவையே முதன்மையானதாக இருக்கும். பொதுநலம் என்பது சுயநலனிலிருந்தே உருவெடுக்க முடியும். பொதுநலம் என்பது ஒரு கற்பனைதான். தன் சுயநலனில் பொதுநலனும் கலந்திருக்கும்பட்சத்தில்தான் மனிதன் பொதுநலன் கொண்ட செயல்பாடுகளில் ஈடுபடுவான். மனிதனின் இந்த இயல்பை இஸ்லாம்தான் கச்சிதமாகப் பயன்படுத்துகிறது. அது அவனுடைய சுயநலனிலிருந்தே பொதுநலன்களை உருவாக்குகிறது.
