“இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்தவொரு அறுதியான முடிவையும் நாங்கள் முன்வைப்பதில்லை. எங்களின் ஆன்மீகப் பாதையில் ஒவ்வொருவரும் அவர்களின் முயற்சிகளுக்கேற்ப வெவ்வேறான நிலைகளை அடையலாம். எங்களுக்கிடையே காணப்படும் தேடல் மட்டுமே பொதுவானது.” இது தம்மை துறவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் கூறியது.
அவர் மட்டுமல்ல பலரும் அவர் கூறியதுபோன்று கூறியிருக்கிறார்கள். அவர் இப்படிக் கூறினாலும் அவர்களுக்கென்று சில வழிமுறைகள், சடங்குகள், நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வழிமுறைகளை, சடங்குகளை, நம்பிக்கைகளை பின்பற்றக்கூடியவர்களே அவர்களுடன் இணைய முடியும். மற்றவர்கள் அவர்களுடன் இணைய முடியாது.
மேற்கூறப்பட்டுள்ள அந்தக் கருத்து வெளிப்படையாகப் பார்க்கும்போது சரியான வாதமாகத் தெரியலாம். ஆனால் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கும்போது அதன் பலவீனத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அது மனிதனுக்கு வழங்கப்பட்ட அறிவின் எல்லையை உணர்ந்து கொள்ளாமல் சொல்லப்பட்ட கருத்தாகும். மனித அறிவு ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிச் செல்லாது.
இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படும் விசயங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, மனித அறிவைக் கொண்டு உணர்ந்து கொள்ளக்கூடிய விசயங்கள். இன்னொன்று மனித அறிவைக் கொண்டு உணர்ந்து கொள்ள முடியாத விசயங்கள். மனித வாழ்வுக்கு அவசியமான அத்தனை அம்சங்களும் இந்தப் பிரபஞ்சத்தில் வைக்கப்பட்டுள்ளன. மனிதன் தன்னுடைய தேவைகளுக்கேற்ப அந்த அம்சங்களைக் கண்டடைந்து கொண்டே செல்லலாம். தேவையே அந்தக் கண்டுபிடிப்பின் திறவுகோல். மனிதனின் தேவைகள் பெருகப் பெருக அந்தக் கண்டுபிடிப்புகளின் வாசல் விசாலமாகிக் கொண்டே செல்லும்.
இன்னொன்று அவனுடைய அறிவைக் கொண்டு புரிந்து கொள்ள முடியாத அம்சங்கள். அவன் அந்த அம்சங்களில் எவ்வளவுதான் முட்டி மோதினாலும் அவனால் அவற்றின் உள்ளே செல்லவே முடியாது. அவை பார்ப்பதற்கு எளிமையான விசயங்கள்போன்று அவனுக்குத் தென்படலாம்.
இறைவனின் இருப்பையும் அவன் ஒருவன்தான் என்பதையும் நம்மால் உணர முடியும். ஆனால் அவனுடைய பண்புகளை, அவன் எப்படிப்பட்டவன் என்பதை, அவனை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை, அவனுடைய விருப்பங்கள் என்னென்ன என்பதை, அவன் நம்மை எதற்காக படைத்தான் என்பதை நாம் நம்முடைய அறிவைக் கொண்டு புரிந்து கொள்ள முடியாது. இந்த இடத்தில் நமக்கு ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறார். அந்த வழிகாட்டி இறைவன் புறத்திலிருந்து வந்தவராக இருக்க வேண்டும். அவரே இறைவனைக் குறித்து, அவனுடைய பண்புகள் குறித்து, அவன் நம்மை எதற்காகப் படைத்துள்ளான் என்பதைக் குறித்து, நம் வாழ்வின் இயல்புகள் குறித்து நமக்குச் சொல்ல முடியும். நம்முடைய அறிவு நிற்கும் இடத்திலிருந்து அவருடைய வழிகாட்டுதல்கள் தொடங்குகின்றன. இஸ்லாத்தில் இறைத்தூதர் என்ற கண்ணோட்டம் இந்த வகையிலானதுதான். இறைத்தூதர் நம்மால் அறிந்துகொள்ள முடியாத மறைவான விசயங்களை நமக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கிறார்.
இஸ்லாம் கூறும் ஆன்மீகமும் மற்ற மதங்கள் கூறும் ஆன்மீகமும் இந்த இடத்தில்தான் வேறுபடுகின்றன. மனிதனால் அறிந்து கொள்ள முடியாத விசயங்களில் இஸ்லாம் அறுதியான கருத்துகளைத்தான் முன்வைக்கிறது. அது அவற்றை மனிதன் வேறு வழிமுறைகளைக் கொண்டு அறிந்துகொள்ள முடியாது என்பதாலும் அவற்றை அந்த ஒரு வழிமுறையைக் கொண்டு மட்டுமே அறிந்துகொள்ள முடியும் என்பதாலும் ஆகும்.
நாங்கள் இஸ்லாம் கூறும் போதனைகள், கட்டளைகள் அறுதியானவை என்று ஏற்றுக் கொள்கின்றோம். ஆனாலும் இஸ்லாம் என்ற இந்த மார்க்கம் இறைவனிடமிருந்து வந்ததுதானா, அதனுடைய தூதர் இறைவனிடமிருந்து வந்தவர்தானா என்பதை மனித அறிவைக் கொண்டு உணர்ந்துகொள்ள முடியும். இந்த மார்க்கம் இறைவனிடமிருந்து வந்த மார்க்கம், இந்த தூதர் இறைவனிடமிருந்து வந்த தூதர் என்பதை நாங்கள் அறிந்த பிறகு இந்த மார்க்கம் கூறும் அத்தனை அம்சங்களையும் உண்மைகள் என்று ஏற்றுக் கொள்கின்றோம். எங்களின் நம்பிக்கை குருட்டுத்தனமான நம்பிக்கை அல்ல. அது மனித அறிவின் எல்லை முடியும் இடத்திலிருந்து தொடங்கும் நம்பிக்கை.
இப்படி இந்தக் களத்தில் எந்த வழிகாட்டலும் இன்றி ஆராயப் போகின்றோம் என்று கூறியவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களில் சிலர் பெரும் குழப்பங்களில் சிக்கினார்கள். அவர்களால் எந்த அறுதியான முடிவையும் கண்டடைய முடியவில்லை. தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பினார்கள். சிலர் முற்றிலும் நேர்எதிரான நிலையை அடைந்தார்கள். எதையும் அடைய முடியாத விரக்தி அவர்களை அந்த நிலைக்கு கொண்டு சேர்த்திருக்கலாம். சிலர், புதியதொரு மதத்தை உருவாக்கினார்கள். அந்த மதத்தின் போதனைகளை ஒன்றுசேர்த்துப் பார்க்கும்போது அவை பலவீனமான மனிதனின் உருவாக்கமே அன்றி வேறில்லை என்ற கருத்தையே நாம் அடைய முடியும்.
