ததப்புர் என்னும் செயல்பாடு -1

You are currently viewing ததப்புர் என்னும் செயல்பாடு -1

كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِه وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ

“அருள்வளமிக்க இந்த வேதத்தை உமக்கு நாம் அருளியுள்ளோம், அவர்கள் இதன் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்துவதற்காகவும் அறிவுடையோர் படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்.” (38:29 )

இந்த வசனம் திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது. அது பொருள்புரியாமல் ஓதப்படும் மந்திரச் சொற்களை கொண்ட நூல் அல்ல.   மனிதர்கள் இதன் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்தி தங்களுக்குத் தேவையான அறிவுரைகளை, படிப்பினைகளை, வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த வேதம் அருளப்பட்டுள்ளது.

நபித்தோழர்கள் திருக்குர்ஆனை அணுகிய விதம் வேறு. இன்றைய முஸ்லிம்கள் திருக்குர்ஆனை அணுகும் விதம் வேறு. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த முதல் தலைமுறை முழுமையான ஒரு மாற்றத்திற்கு உட்பட்டது. காரணம் அது தம்மை முழுமையாக குர்ஆனுக்கு ஒப்புக் கொடுத்தது. குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் அதன் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. பொருள் புரியாமல் வெறும் பரக்கத்திற்காக ஓதப்படும் முறையை அந்த தலைமுறை அறிந்து வைத்திருக்கவில்லை. பொருளைக் கவனத்தில் கொள்ளாமல் பரக்கத்திற்காக ஓதப்படும் முறை பிற்காலத்தில் உருவான ஒன்றுதான்.

உள்ளத்தின் பூட்டுகள் திறக்கப்பட வேண்டும் என்றால், மூளையின் முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்றால் நாம் திருக்குர்ஆனின் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்த வேண்டும். நாம் அதன் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்தவில்லை எனில் அல்லது நம்மால் கவனம் செலுத்த முடியவில்லை எனில் நம் உள்ளங்கள் பூட்டப்பட்டிருக்கின்றன என்று பொருள். பாவங்கள் உள்ளத்தில் துருவாய் படிகின்றன. அவையே பூட்டுகளாக மாறுகின்றன.

திருக்குர்ஆன் யாருக்குப் பயனளிக்கும்? யார் அதிலிருந்து பயனடைய வேண்டும் என்று விரும்புகிறார்களோ, யார் அதற்காக முயற்சிக்கிறார்களோ யார் அந்தப் பாதையில் முன்னேறிச் செல்கிறார்களோ, யார் அது தம் வாழ்வுக்கு மிக அவசியமான ஒன்று என்று கருதுகிறார்களோ, யார் அதன் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்துகிறார்களோ அவர்களுக்குத்தான் அது பயனளிக்கும். மற்றவர்கள் அதிலிருந்து பயனடைய மாட்டார்கள்.

அல்லாஹ்வின் வார்த்தைகள் ஞானம் நிரம்பியவை; செறிவு மிக்கவை; அவை மனித வார்த்தைகளோடு ஒப்பிட முடியாதவை; இடம், காலம் ஆகிய வரையறைகளைத் தாண்டி மனித உள்ளத்தில் ஆழமாக தாக்கம் செலுத்தும் வல்லமை கொண்டவை. அவை முடிவே இல்லாத ஞானச் சுரங்கங்கள்; என்றும் வற்றாத ஞான ஊற்றுகள். அவற்றுக்கு முன்னால் மனிதர்களின் ஞானம் வெறும் சூன்யமே.   

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply