பிரார்த்தனைகள்

You are currently viewing பிரார்த்தனைகள்

பிரார்த்தனை செய்யுங்கள். அதுவும் இறைவணக்கத்தின் ஒரு வடிவம்தான் என்கிறது இஸ்லாம். நாம் செய்யும் பிரார்த்தனை நம்முள் அசாதரண மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. பிரார்த்தனையின்மூலம் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பாரங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் விடுபடுகிறோம். இறைவனிடம் நம்பிக்கையுடன் நாம் செய்யும் பிரார்த்தனைகள் மனதின் அழுத்தங்களிலிருந்து நம்மை விடுவிக்கின்றன. மனதின் அழுத்தங்களிலிருந்து விடுபட பிரார்த்தனையைவிட மிகச் சிறந்த வழி வேறெதுவும் இல்லை.

நம்பிக்கையின் முழு பலனையும் முழுமையான நம்பிக்கையில்தான் நாம் பெற முடியும். பிரார்த்தனையும் அப்படித்தான். அங்கீகரிக்கப்படும் என்ற முழு நம்பிக்கையுடன் அது முன்வைக்கப்பட வேண்டும். பிரார்த்தனை குறித்து நபியவர்கள் கூறியுள்ள அறிவுரைகள் நம்மை நிராசையிலிருந்து பாதுகாக்கக்கூடியவை. உங்களின் பிரார்த்தனை உடனடியாக அங்கீகரிக்கப்படலாம் அல்லது அதன் காரணமாக உங்களுக்கு வரக்கூடிய ஆபத்திலிருந்து நீங்கள் பாதுகாக்கப்படலாம் அல்லது அது மறுமைநாளில் உங்கள் நன்மைகளின் கணக்கில் சேர்க்கப்படும். நீங்கள் செய்யும் பிரார்த்தனைகள் எதுவும் வீணாகப்போவதில்லை என்பதுதான் அவர்களின் இந்த அறிவுரையிலிருந்து நமக்குக் கிடைக்கும் முக்கியமான அம்சம்.

பிரார்த்தனைகள் நம் இயலாமையின் வெளிப்பாடுகள்தாம். நாம் நம் இயலாமையை உணர்வது நம் அறிதலில் முக்கியமான மைல்கல். அதன்மூலமே நாம் இறைவனின் பேராற்றலை உணரத் தொடங்குகிறோம். நாம் நம் இயலாமையை உணரக்கூடிய தருணங்களில் நம்மை ஆட்சி செய்யும் பேராற்றல்மிக்க இறைவனை உணர்கிறோம். தன்னால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்று இறுமாந்திருக்கும் மனிதனால் சத்தியத்தைக் கண்டுகொள்ள முடியாது. கர்வம் அவனது கண்களைக் குருடாக்கிவிடும். பேரிடியே அவனை அவனது போதையிலிருந்து மீட்டுக் கொண்டு வரும்.

பேராற்றல்மிக்க அந்த இறைவனிடம் சரணடைவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. அவனிடம் அன்றி நமக்கு வேறு எங்கும் அடைக்கலம் இல்லை. அவனைத் தவிர வேறு யாராலும் நம்மைப் பாதுகாக்க முடியாது. அவனே நம் கோரிக்கைகளை செவிகொடுத்துக் கேட்பவன்; நாம் செய்யும் பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவன். உண்மையில் அவனிடம் சரணடைவதில்தான் நமக்கான விடுதலையே இருக்கிறது.  

நம்பிக்கையாளனின் நம்பிக்கையை அதிகரிக்கும் தருணங்களில் தன் பிரார்த்தனையை அங்கீகரிக்கப்பட்டதாக அவன் காணும் தருணமும் ஒன்று. அவன் கேட்டது அப்படியே நிறைவேறும்போது, சாத்தியமற்ற ஒன்று அவனுடைய பிரார்த்தனையின்மூலமாக சாத்தியமான ஒன்றாக மாறி நிற்கும்போது அவன் மகிழ்ச்சியடைகிறான். இந்த மகிழ்ச்சி அவனுடைய ஈமானை அதிகரிக்கிறது. அவன் இறைவனை நோக்கி இன்னும் நெருங்கிச் செல்கிறான். இதைத்தான் ஈமானிய அனுபவம் என்கிறோம்.

ஈமானிய அனுபவங்களை உணர்ந்தவர்களுக்கும் உணராதவர்களுக்கும் மத்தியிலுள்ள வேறுபாடு இயல்பானவற்றுக்கும் வலிந்து உருவாக்கப்படுதலுக்கும் மத்தியிலான வேறுபாட்டைப் போன்றது. முதலாமவர்களின் சொற்களிலும் செயல்களிலும் வெளிப்படும் நம்பிக்கை மற்றவர்களின் உள்ளத்தில் அவர்களையும் அறியாமல் தாக்கம் செலுத்துகிறது. 

ஈமானிய அறிதல் அனுபவங்களின் வாயிலாக பெறப்படக்கூடிய ஒன்று. வெறுமனே வாசிப்பின் வாயிலாகவோ தர்க்கத்தின் துணைகொண்டோ நாம் அத்தகைய அறிதல்களை பெற்றுவிட முடியாது. ஒரு மனிதன் அத்தகைய அறிதல்களைப் பெற அதற்கு முன்னால் தன்னை அப்படியே ஒப்புக்கொடுக்க வேண்டும். அரைகுறையான நம்பிக்கையால் எந்தப் பயனும் இல்லை. அரைகுறை நம்பிக்கையாளர்கள் எளிதில் நயவஞ்சர்களுடன் இணைந்துவிடுவார்கள். 

ஈமானிய அனுபவங்களைப் பெற்றவர்களிடம் ஈமானிய அடையாளங்கள் மிக இயல்பாக வெளிப்படும். அவர்களின் விருப்பும் வெறுப்பும் அதனைச் சுற்றியே அமையும். அவர்கள் அதற்கு முரணானவற்றை நேசிக்க மாட்டார்கள். அவர்கள் இறைவனுக்குக் கட்டுப்படுவதில், அவனை வணங்கி வழிபடுவதில் இன்பம் காணுவார்கள். இச்சையால் உந்தப்பட்டு அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டுவிடும்போது அவர்கள் துடிதுடித்துப் போவார்கள். முன்னர் நினைவுகூர்ந்ததைவிட அதிகமதிகம் அவனை நினைவுகூருவார்கள். அவனிடம் பாவமன்னிப்புக் கோருவார்கள்.  

இஸ்லாம் கற்றுத்தரக்கூடிய பிரார்த்தனைகள் மனித மனதின் இயல்பான தேட்டங்களாகவே இருக்கின்றன. அவற்றோடு ஒன்றிப்போகும் மனம் பிரியத்திற்குரிய தொலைத்த பொருளை கண்டுகொண்ட மகிழ்ச்சியை உணர்கிறது.

நிகழ சாத்தியமேயில்லை என்று நாம் எண்ணும் பல விஷயங்கள் மிக இயல்பாக நிகழ்ந்து விடுவதை நாம் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம். ஆனாலும் நம் அறிவால் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி சிந்திக்க முடிவதில்லை. மீண்டும் மீண்டும் அது பழக்கப்பட்ட எல்லையில்தான் வந்து நின்றுகொண்டிருக்கிறது.

இறைவனின் பேராற்றலை உணரக்கூடிய நம்பிக்கையாளன் அறிவு ஏற்படுத்தும் குறுகிய எல்லையைத் தாண்டி எல்லையில்லா பெருவெளியில் பிரவேசிக்கிறான். அங்கு அவன் தன் நம்பிக்கையை இழப்பதில்லை. நிராசை அடைவதில்லை. எல்லாவற்றையும் படைத்துப் பராமரிக்கின்ற, எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பேராற்றல்மிக்க அந்த இறைவனால் நிறைவேற்ற முடியாதது எதுவும் இல்லை என்பதை அவன் அறிந்துகொள்கிறான். அவன் வாழ்க்கை இறைசார்ந்த வாழ்க்கையாக ஆகிவிடுகிறது.

திருக்குர்ஆனில் மர்யம் என்ற அத்தியாயத்தைப் படித்துப் பாருங்கள். அதில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள், நாம் நிகழ சாத்தியமற்றவையாகக் கருதும் நிகழ்வுகள் இறைநாட்டத்தால் எப்படி இயல்பாக நிகழ்ந்துவிடுகின்றன என்பதையே மையக்கருத்தாகக் கொண்டுள்ளன.

நம் வாழ்வில் செயல்படக்கூடிய மறைகரங்களை நாம் கண்டுகொள்ள மறுக்கிறோம் அல்லது கண்டும் காணாமல் இருக்கிறோம். அற்புதங்கள் நம் வாழ்வில் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் நாம் அலட்சியத்தில் உறைந்து கிடக்கின்றோம். இறைவன் தான் நினைத்ததைச் செய்யக்கூடியவன், அவனுடைய நாட்டத்திற்குக் குறுக்காக எந்தவொன்றும் வந்துவிட முடியாது, அவன் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் உடையவன்.

நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகள் இரத்தினச் சுருக்கமானவை; பொருட்செறிந்தவை. நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் தோன்றும் இயல்பான எல்லா ஆசைகளும் அச்சங்களும் கச்சிதமான வரிகளில் பிரார்த்தனைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. நம்முடைய ஆசைகளும் அச்சங்களும் உரிய வழியில் வெளிப்படுத்தப்பட்டால் மனம் அலாதியான அமைதியை உணரும். அவை அழுத்தங்களாக நம்முள் சேகரமாவதில்லை. நபியவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகள்கூட அற்புதங்கள்தாம் என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள். அவர்கள் அவ்வாறு கூறுவதற்குக் காரணம் அவை சாதாரண ஒரு மனிதனால் முன்வைக்க முடியாதவை  என்பதாலும் நம்பிக்கைகொண்ட மனித மனதின் ஆசைகளையும் அச்சங்களையும் மிகத் துல்லியமாக, கச்சிதமான வெளிப்படுத்துகின்றன என்பதாலும்தான்.

மனித மனதின் மாறும் தன்மை குறித்து நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனை மிக ஆச்சரியமானது. “உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே! எனது உள்ளத்தை உனது மார்க்கத்தின் மீது நிலைபெறச் செய்வாயாக” என்பதுதான் அது. அறிவின் பங்கு ஆலோசனை அளிப்பது மட்டும்தான். மனதின் விருப்பும் வெறுப்புமே முதன்மையானவை. அவைதான் மனிதனைச் செயல்படத் தூண்டுகின்றன. விருப்பும் வெறுப்பும் உள்ளத்தில் புகட்டப்படுகின்றன என்பதே உண்மை. திடீரென ஒருவன் தன்னுடைய அத்தனை ஆய்வுகளையும் புறக்கணித்துவிட்டு அவற்றுக்கு எதிரான முற்றிலும் வேறொரு பாதையில் அவன் செல்லலாம். அத்தனை வருட அவனுடைய ஆராய்ச்சி அவனுடைய மனமாற்றத்தால் அவனுடைய பார்வையில் மதிப்பிழந்து போய்விடலாம். யாருக்குத் தெரியும், மனதில் எந்தச் சமயத்தில் எந்த மாற்றம் நிகழும் என்று. நம்பிக்கைகொண்ட உள்ளம் ஈமானைவிட்டு எந்தச் சமயத்திலும் தடம்புரண்டுவிடக்கூடாது என்று அஞ்சுகிறது. அதனால்தான் அது தன்னுடைய அச்சத்தை பிரார்த்தனையாக வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. 

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply