சில வருடங்களுக்கு முன்னால் ஒருவரிடம் ஒரு பைக் வாங்கினேன். அதற்கான பணத்தை கொடுத்த பிறகு ஒரு மாதம் கழித்து எனக்கு என்னுடைய பைக் வேண்டும், நான் உங்களின் பணத்தை தந்து விடுகிறேன் என்றார். அவரது குரலில் கெஞ்சல் இருந்ததனால் நானும் எந்த மறுப்பும் இன்றி அவரது பைக்கை திருப்பி அளித்து நான் அளித்த பணத்தைப் பெற்றுக் கொண்டேன்.
என்னுடைய நண்பர் ஒருவரிடம் அவரது இந்தச் செயலைக் குறித்து கூறியபோது அந்த நண்பர் கூறினார், “விட்டுவிடுங்கள், அவர் குழந்தை இல்லாதவர்” என்றார்.
இது பலருக்கும் நிகழக்கூடிய சாதாரண ஒன்றுதான். திடீரென அவருக்கு அந்த பைக்கின் நினைவு வந்து விட்டது. அதனால் அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாடினார். நான் அதனை சரியென்றோ தவறென்றோ குறிப்பிடவில்லை. இங்கு அந்த சம்பவத்தைக் குறிப்பிடுவதன் நோக்கம், அந்த நண்பரின் பதில்தான்.
அவரது பதில் எனக்கு ஒரு திறப்பாக அமைந்து விட்டது. எனக்கு அந்த நண்பரின் மீது மதிப்பு அதிகம். அவர் வாசிப்பு பழக்கம் கொண்டவரோ முறையான கல்வி கற்றவரோ அல்ல. ஆனால் படிக்காத ஞானி. அவரிடம் இருந்ததை அனுபவ அறிவு அல்லது கூர்மையான பார்வை என்பேன்.
தனியாக இருக்கும் மனிதன் திருமணமான பிறகு ஒரு வகையான பக்குவத்தைப் பெறுகிறான். பிறகு அவனுக்கு அடுத்தடுத்த குழந்தைகள் பிறக்கும்போது அவன் இன்னும் பக்குவமடைந்து கொண்டே செல்கிறான். பொறுமை என்பது பழக வேண்டிய ஒரு பண்பு. திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு மனிதனும் அவன் எதிர்கொள்ளும் சவால்களின் வழியே கொஞ்சம் கொஞ்சமாக பொறுத்திருக்கப் பழகுகிறான்..
ஒரு குடும்பஸ்தன் மனிதர்களை சகித்துக் கொள்ளப் பழகுகிறான். அவர்களிடமிருந்து பயனடைய வேண்டுமெனில் அவர்களின் தவறுகளை கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டும் என்ற அனுபவ ஞானத்தைப் பெறுகிறான். பொறுப்புகள் அவனை ஓடச் செய்கின்றன. அதே சமயத்தில் அவை அவனை பொறுப்பானவனாகவும் ஆக்குகின்றன. அவன் சமூகத்தின் ஒழுங்குகளை பின்பற்றும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறான். ஏனெனில் அவனுடைய குடும்ப பாதுகாப்பிற்கு அந்த ஒழுங்குகள் மிக அவசியமானவை என்று கருதுகிறான். இந்த இடத்தில்தான் குடும்பஸ்தர்கள் தனியர்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்குகிறார்கள். அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள்தாம்.
இளைஞனாக இருக்கும் மனிதன் வேகமானவனாகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவனாகவும் இருக்கிறான். அதே மனிதன் திருமணமாகி குழந்தைகளுக்குத் தந்தையான பிறகு அவனுடைய வேகமும் உணர்ச்சிவசப்படக்கூடிய தன்மையும் மட்டுப்படுகின்றன. பக்குவமும் விவேகமும் அவனுடன் இணைந்து விடுகின்றன. அவன் எந்தவொன்றையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்றில்லாமல் அதன் விளைவுகளைக் குறித்து செயல்படக்கூடியவனாக மாறிவிடுகிறான்.
குடும்ப வாழ்க்கையின் சவால்களிலிருந்தே ஒரு மனிதன் பொறுமையை அழகிய முறையில் கற்றுக் கொள்ள வேண்டும். பொறுமை ஒரு மனிதன் தன் துறையில், தன் வியாபாரத்தில், தன் பணியில் தொடர்ந்து நீடிப்பதற்கும் பக்குவம் அடைவதற்கும் வெற்றி அடைவதற்கும் அவசியமான முதன்மையான பண்பு.

ஒரு குடும்பஸ்தன் மனிதர்களை சகித்துக் கொள்ளப் பழகுகிறான்.
-இது உண்மை