காமமும் அகங்காரமும் மனிதனுக்குள் அணையாமல் இருந்து கொண்டிருக்கும் இரு நெருப்புக் கங்குகள். அவை எப்போது வேண்டுமானாலும் தூண்டப்படலாம். எப்போது வேண்டுமானாலும் கொழுந்துவிட்டு எரியலாம். அவை எப்போது வேண்டுமானாலும் அவனை மிகைக்கலாம். மீண்டும் மீண்டும் அவனை பாவங்களில் ஆழ்த்தலாம். ஒரேயடியாக இந்த இரண்டு பண்புகளிலிருந்தும் யாரும் விடுபட்டுவிட முடியாது. தப்பித்தலும் தற்காலிக தப்பித்தல்களே. சிலர் ஒரு முறை தப்பித்தால் அடுத்த முறை மாட்டிக் கொள்கிறார்கள். சிலர் மீண்டும் மீண்டும் மிகைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். சிலரது வாழ்வு பெரும்பான்மையான தப்பித்தல்களைக் கொண்டிருக்கிறது. சிலரது வாழ்வு அதற்கு மாறாகவும் அமைகிறது. சிலரது வாழ்வு முழுக்க முழுக்க அவற்றுக்கு அடிமையானதாக ஆகிவிடுகிறது.
இவையிரண்டும் மனிதனை முன்னகர்த்திச் செல்லும், செயல்படத் தூண்டும் வலுவான ஊக்கிகளும்கூட. மனிதனின் வெறுமையைப் போக்குவதில் இவையிரண்டுக்கும் குறிப்பிட்ட அளவு பங்கு உண்டு. அதே சமயம் அவை அவனை வீழ்த்திவிடும் வல்லமையும் கொண்டவை. மனிதனிடம் காணப்படும் எந்தவொன்றும் நன்மையின் கூறுகளோடு தீமையின் கூறுகளையும் உள்ளடக்கியதாகத்தான் இருக்கிறது. உங்களின் வாழ்க்கைத் துணையோ பிள்ளைகளோ உங்களோடு ஒத்திசைந்து செல்லக்கூடியவர்களாக இருக்கலாம். நீங்கள் செல்லும் நேர் எதிர்திசையில் செல்லக்கூடியவர்களாகவும் இருக்கலாம். உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியவர்களாகவும் இருக்கலாம். உங்கள் துன்பங்களுக்குக் காரணமானவர்களாகவும் இருக்கலாம். வெறுமனே இலாபத்தை, பயனை மட்டும் தரக்கூடியவர்களாக இங்கு யாரும் இல்லை.
இந்த இரண்டு பண்புகளிலிருந்தும் யாரும் ஒரேயடியாக விடுபட்டுவிட முடியாது. ஆனால் அவற்றின் தீங்கிழைக்கும் தன்மைகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியும். அது விழிப்பு நிலையிலான ஒரு வாழ்வின் மூலம் சாத்தியமாகலாம். ஆனாலும் சில சமயங்களில் அந்த விழிப்பு நிலையும் மிகைக்கப்படலாம். தன் தவறுகளை ஒத்துக்கொண்டு உடனடியாக மீண்டு வரும் மனப்பக்குவத்தையும் மனிதன் பெற்றிருக்க வேண்டும். இங்கு காமத்தோடு அகங்காரமும் கலந்துவிடக்கூடாது. அது மீளவே முடியாத தூரத்திற்கு அவனை இட்டுச் சென்றுவிடும்.
ஓர் ஆணையும் பெண்ணையும் இணைப்பதில் காமம்தான் முதன்மையான இடத்தில் இருக்கின்றது. மற்ற காரணிகள் அதற்குப் பின்னால் வரக்கூடியவை அல்லது அதனோடு சேர்ந்து வரக்கூடியவை. பல சமயங்களில் மனிதன் அந்தக் காரணத்தை வெளிப்படுத்தத் தயங்குகிறான். வேறு காரணிகளைக் கொண்டு அதனை மூடிமறைக்க முயல்கிறான். காமம் மிக இயல்பான ஒன்றுதான். இறைவன் அளித்த மாபெரும் கொடை அது. ஆனால் அது தவறான இடத்தில் பயன்படுத்தப்படும்போது தவறான ஒன்றாக, குற்றவுணர்ச்சியை தோற்றுவிக்கும் ஒன்றாக மாறிவிடுகிறது. எந்தவொரு அருட்கொடையும் அப்படித்தான். அது தவறான இடத்தில் பயன்படுத்தப்படும்போது குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தவே செய்யும்.
ஆதமைப் போன்று அவரது சந்ததியினரும் ‘தடுக்கப்பட்ட மரத்தை’ மீண்டும் மீண்டும் அணுகவே செய்கிறார்கள். ஆனால் அனைவரும் ஆதமைப் போன்று தங்களின் தவறை உணர்ந்து வருத்தப்பட்டு அதிலிருந்து உடனே மீண்டுவிடுவதில்லை. சிலர் ஆதமைப் போன்று உடனே மீண்டு விடுகிறார்கள். சிலர் ஷைத்தானைப் போன்று தங்கள் தவறுகளை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். இங்கு விரும்பத்தக்கது, வேண்டப்படுவது ஆதமின் பண்புதானே அன்றி ஷைத்தானின் பண்பு அல்ல. ஷைத்தானின் பண்பைப் பெற்றிருப்பவர்கள் மீள முடியாத தூரத்தை அடைந்துவிடுவார்கள்.
காமம் மனிதனின் ஒட்டுமொத்த பார்வையையே மாற்றிவிடும் அளவுக்கு வலிமையானது. அது கொஞ்சம் கொஞ்சமாக மேலேழும்போது அருவருக்கத்தக்க விசயங்கள்கூட அவனுக்கு முன்னால் ஈர்ப்புமிகுந்தவையாக தோற்றம் பெற்றுவிடுகின்றன. அது தணிந்த பிறகு ஒவ்வொன்றும் அதன் இயல்பு நிலையை நோக்கி திரும்பிவிடுகின்றன. இதன் பக்கமா ஈர்க்கப்பட்டோம் என்று அவனே ஆச்சரியப்படும் அளவுக்கு, வெட்கப்படும் அளவுக்கு அவன் திரும்பி விடுகிறான். அது அவனுக்குள் இருந்து வெளிப்பட்டாலும் அவனையும் மீறிய ஒன்று. அதனை மிகைக்க நினைப்பவர் மிக எளிதாக மிகைக்கப்பட்டு விடுவார்.
ஏன், இங்கு திருமணம் மிகப் பெரிய சடங்காக ஆக்கப்பட்டுவிட்டது? ஆண்-பெண் இணைவதற்கான இயல்பான, இலகுவான வழிமுறைதானே அது? அதன் பாதையில் கிடக்கும் தேவையற்ற தடைக்கற்கள் மாற்று வழிகளின் மனிதர்களின் கவனத்தை திருப்பிவிடுகின்றன. இங்கு பொறுப்புகளைச் சுமக்க விரும்பாத மனிதர்களும் மாற்று வழிகளை நாடுகிறார்கள். விளைவாக, தேவையற்ற சுமைகளை அவர்கள் சுமக்கும் நிர்ப்பந்த நிலைக்கு அவர்கள் ஆளாகிவிடுகிறார்கள். அவசியமான பொறுப்புகளைச் சுமக்காதவர்கள் தேவையற்ற சுமைகளால் சூழப்பட்டுவிடுகிறார்கள். கடமைகளைச் செய்யாமல் உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்று எண்ணும் அநியாயக்காரர்கள் தேவையற்ற கடமைகளில் சிக்கிக் கொள்கிறார்கள். இங்கு யாரும் எதையும் அளிக்காமல் எதையும் பெற்றுவிட முடியாது. இங்கு எந்த அளவு அளிக்கிறீர்களோ அந்த அளவு அதிகம் பெறுவீர்கள். அள்ளிக் கொடுப்பதே அதிகம் பெறுவதற்கான வழி.
எதையும் அளிக்காமல் நாங்கள் அதிகம் பெற்றுவிட்டோம் என்று எண்ணுபவர்கள் ஒரு கட்டத்தில் தங்களையும் அறியாமல் தாங்கள் இழந்ததே அதிகம் என்பதை உணர்வார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் தங்களின் மனிதத்தன்மையை இழந்து விடுவார்கள். வெறுமனே அனுபவித்துக் கடப்பதற்காக அந்த உணர்வு அளிக்கப்படவில்லை என்பதை அவர்கள் அப்போதுதான் உணர்வார்கள். அவர்களையும் அறியாமல் அவர்களுக்குள் சேகரமாகும் குற்றவுணர்கள் அவர்களைக் கொல்லும் மோசமான விஷமாக உருமாறி நிற்பதை அவர்கள் அப்போதுதான் உணர்வார்கள். இங்கு நாம் எதை விதைத்தோமோ அதனை அறுவடை செய்யாமல் இங்கிருந்து நாம் தப்பிச் சென்றுவிட முடியாது. காலம் எல்லாவற்றையும் நமக்குப் புரிய வைத்துவிடும். காலத்தைவிட மிகச் சிறந்த உபதேசி வேறு யாரும் இல்லை.
காமம் தன் வீரியத்தை இழந்து மனிதன் அமைதியடையும்போது அவன் விடைபெறும் மனநிலையை அடைந்து விடுகிறான். அது அவனுடைய வெறுமையை பெருமளவில் போக்குகிறது. மீண்டும் மீண்டும் அவன் காமத்தைக் கொண்டே தன் வெறுமையைப் போக்க முயல்கிறான். அது எல்லாவற்றையும் அழகாகக் காட்டுகிறது; வாழ்க்கையை சுவாரசியமானதாக ஆக்கிவிடுகிறது. அது கிட்டத்தட்ட மனிதனின் பார்வையையே மாற்றிவிடுகிறது. அதனால்தான் அவன் பொறுப்புகளை, சுமைகளை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறான். அது அவனை உந்தித் தள்ளும் உந்து சக்தி; அவனுக்கான ஊட்டம். மிகச் சிறந்த இளைப்பாறுதலும்கூட. காமத்தைத் தணிப்பதற்கு தகுந்த துணையைப் பெறாத மனிதர்கள் உளச்சிக்கலுக்கு உள்ளாகிறார்கள்.
தகுந்த வழிகளின்மூலம் காமத்தைத் தணிப்பவர்களே விடுபடுகிறார்கள். மற்றவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். குற்றவுணர்வுகள் அவர்களையும் அறியாமல் அவர்களுக்குள் சேகரமாகிக் கொண்டே செல்கின்றன. ஒரு கட்டத்தில் அவை மூர்க்கமாக எழுந்து அவர்களை அச்சுறுத்தத் தொடங்குகின்றன. அவர்களை வாழ்க்கையை விட்டு வெருண்டோட, தங்களைவிட்டே வெருண்டோட எண்ணுகிறார்கள். என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். சொல்லப்படும் அனைத்தையும் அப்படியே நம்புகிறார்கள்.
எந்தவொன்றுக்கும் ஒரு விலை இருக்கிறது. எந்தவொன்றுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. உரிமைகளைப் பெற்ற நீங்கள் கடமைகளைச் செய்தே தீர வேண்டும். இல்லையெனில் அவை உங்களை வேறொரு வடிவில் வந்து உங்களை நெறிக்கத் தொடங்கிவிடும். காமம் மனித சமூகம் பெருகுவதற்கான மூலம். பேரின்பத்திலிருந்தே பெரும் சுமைகளும் பிறப்பெடுக்கின்றன.
காமத்தை வெல்ல முடியாது. வெல்ல நினைப்பவர்கள் எளிதாக அதனால் வெல்லப்படுவார்கள். அது உங்களுக்கு ஏற்படும் இயல்பான பசியே. பசியை வெல்ல முடியுமா என்ன? உகந்த உணவை உண்ணவில்லையெனில் கண்டதையும் எடுத்து உண்ணத் தொடங்கி விடுவீர்கள். அது உங்களுக்கு விஷமாகவும் மாறிவிடலாம்.

Ennoda thambiki 35 years agudhu,kalyanam venamnu solran kaaranam ketal enaku andha tagudhi illai endru solgiran .avonoda visayathil maargam enna solgiradhunu konjam sollunga.
அவருக்குத் தகுதி இல்லையெனில் அவர் மணமுடிக்க வேண்டாம். தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்து தகுதியை அவர் அடைந்து விட்டால் மணமுடித்துக் கொள்ளலாம்.