பொறுமை

You are currently viewing பொறுமை

ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அதற்கு நபியவர்கள், “கோபம் கொள்ளாதீர்கள்” என்றார்கள். மீண்டும் தனக்கு அறிவுரை கூறுமாறு கேட்டார். அதற்கும் ”கோபம் கொள்ளாதீர்கள்” என்றார்கள். (புகாரீ)

‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பார்கள். ஆத்திரம் கொள்ளும்போது மனிதன் தன்னிலை இழந்துவிடுகிறான். அப்போது அவனிடமிருந்து வெளிப்படும் சொல்லோ செயலோ மற்றவர்களுக்கு மட்டுமில்லாமல் அவனுக்கே ஆபத்தாக அமைந்துவிடுகிறது. இது தனிமனிதனுக்கு மட்டுமல்ல ஒரு சமூகத்திற்கும் பொருந்தும்.

உணர்ச்சிக் கொந்தளிப்பில் செய்யப்படும் காரியத்தை ஒருபோதும் வீரமாகக் கருத முடியாது. அது அறிவு மழுங்கடிக்கப்படுவதன் வெளிப்பாடு. அவ்வளவுதான். கோபத்தை வெளிப்படுத்துவதைவிட கட்டுப்படுத்துவதே மிகவும் கடினமானது. ஆனால் அதைத்தான் வீரம் என்றும் நம்பிக்கையாளர்களின் தனித்துவமான பண்பு என்றும் கூறுகிறது இஸ்லாம்

“பிறரை அடித்து வீழ்த்துபவன் வீரனல்ல. கோபம் வரும்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே உண்மையான வீரனாவான்”(.நபிமொழி)

கோபத்திற்குக் கட்டுப்படுவது மிக எளிதானது. அந்த வகையில் முரடனே அல்லது பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காத மூடனே வீரனாகக் கருதப்படுவான். ஆனால் இஸ்லாம்  தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களையே உண்மையான வீரர்களாகக் குறிப்பிடுகிறது. அவர்கள் உணர்ச்சி வேகத்தில் செயல்படும் உற்சாக மூடர்களாக இருக்க மாட்டார்கள். தம்மைக் கொந்தளிப்பில் ஆழ்த்தி அதில் குளிர்காய நினைப்பவர்களின் சூழ்ச்சியைக் கண்டுகொண்டு பொறுமையுடனும், மதிநுட்பத்துடனும் அவர்களை எதிர்கொள்வார்கள். இறைவழிகாட்டுதலே அவர்களை வழிநடத்தும்.

பொறுமை என்பது செயலின்மையோ கோழைத்தனமோ அல்ல. அது நேர்மறையான தொடர் செயல்பாடும் இடைவிடாத முயற்சியும் அவசரப்படாமல் பதற்றப்படாமல் நிராசையடையாமல் இறையருளை எதிர்பார்த்தவாறு நிதானமாகக் காத்திருத்தலும் பொங்கி வரும் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருத்தலும் ஆகும். காத்திருத்தலும் கட்டுக்குள் வைத்திருத்தலும் வலிமிகுந்ததுதான் என்றாலும் முடிவு அனுபவித்த வலிகள், அழுத்தங்கள் அனைத்தையும் மறக்கடித்துவிடும்.

ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட ஒரு நேரத்தை இறைவன் நிர்ணயித்துள்ளான். எதுவும் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட முந்தவும் செய்யாது, பிந்தவும் செய்யாது. நம்முடைய அவசரமும் பதற்றமும் நமக்கு மனஅழுத்தத்தை அதிகப்படுத்துமே தவிர அதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது.

கண நேரப் பொறுமை எவ்வளவு பிரச்சனைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுகிறது! நம் அவசரமும் பதற்றமும் கோபமும் எவ்வளவு பிரச்சனைகளை உண்டாக்கி விடுகின்றன! பொறுமையாளர்கள் கணக்கின்றி நன்மைகளைப் பெறுவார்கள் என்று திருக்குர்ஆன் கூறுவது மறுவுலகில் மட்டுமல்ல. இவ்வுலகிலும்தான்.

நம்பிக்கையாளர்களின் தவிர்க்க முடியாத பண்புகளில் ஒன்றாகவும் திருக்குர்ஆன் இதனைக் குறிப்பிடுகிறது. அவர்கள் கோபத்தில் தன்னிலை இழக்கும் மனிதர்களாக இருக்க மாட்டார்கள். அதனைக் கட்டுப்படுத்தும் வலுவான ஆற்றலைப் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் காணப்படும் இறைஉணர்வை வேறு எந்த உணர்வும் மிகைக்க முடியாது. அது எல்லா வகையான உணர்வுகளையும் மிகைக்கும் அளவு வலிமையானதாக இருக்கும்.

கோபத்தைக் கட்டுப்படுத்துவது முதல் நிலை. அது மட்டும் போதுமானதல்ல. மனிதன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு குரோதத்தையும் காழ்ப்பையும் உள்ளுக்குள் தேக்கி வைக்கிறான். பொங்கும் கோபம் மறைந்திருக்கும் குரோதமாக மாற்றமடைகிறது. மறைந்திருக்கும் குரோதத்தையும் காழ்ப்பையும்விட வெளிப்படையான கோபம் எவ்வளவோ மேலானது. ஆகவே இஸ்லாம் கோபத்தைக் கட்டுப்படுத்துவதோடு மன்னிக்கவும் வலியுறுத்தி உள்ளத்தை கசடுகளிலிருந்து தூய்மைப்படுத்துகிறது. மன்னிப்பு மனதிற்கு பெரும் விடுதலையைத் தருகிறது. அதன்மூலம் தேவையற்ற உளைச்சல்களிலிருந்தும் கவலைகளிலிருந்தும் மனம் விடுதலையடைகிறது. நம்பிக்கையாளர்கள் இதுபோன்ற அடையாளங்களைக் கொண்டே அறியப்படுகிறார்கள்.

இமாமாக இருந்த சமயத்தில் ஒரு வெள்ளிக்கிழமை உரையில் பொறுமையைக் குறித்தும் கோபத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும் உரையாற்றினேன். உரை முடிந்தவுடன் ஒருவர் எழுந்து இப்படியே பொறுமையைக் குறித்தும் கோபத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும் உரையாற்றினால் எப்படி? மக்களை ஏன் கோழைகளாக ஆக்கிக் கொண்டே செல்கிறீர்கள்? இமாம்களாகிய நீங்கள் ரௌத்திரம் பழகுவது குறித்தும் பேச வேண்டும் என்று கொந்தளிக்கத் தொடங்கிவிட்டார். வழக்கம்போல அந்தக் கேள்விக்கு உடனடியாகப் பதிலளிக்காமல் அமைதியாக இருந்துவிட்டேன். சில நாட்கள் கழித்தே அவர் கேட்ட கேள்விக்கு நான் பதிலளித்தேன்.

கோபம் கொள்வது இயல்பானது. அதற்கெல்லாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இயல்பான ஓர் உணர்வை வலிந்து உருவாக்க முடியுமா என்ன? ஆனால் அதனைக் கட்டுப்படுத்துவது குறித்து மனிதனுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனெனில் அதனால் ஏற்படும் விளைவுகள் கொடூரமானவை. இஸ்லாம் எங்குமே கோபம் கொள்ளுங்கள் என்று கூறவில்லை. மாறாக கோபம் கொள்ளாதீர்கள் என்றுதான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறது. நம்பிக்கையாளர்களின் தவிர்க்க முடியாத பண்புகளில் ஒன்றாக திருக்குர்ஆன், அவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள் என்று குறிப்பிடுகிறது.

இங்கு இன்னொரு விசயம் இருக்கிறது, அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது. அது நீதியின் தேட்டம். ஒரு சமூகம் சிறந்த சமூகமாக விளங்க வேண்டுமெனில் அங்கு அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கப்பட வேண்டும். இங்கு இரண்டு வகையான மௌனம் இருக்கிறது. ஒன்று, இயலாமையின் விளைவாக மௌனமாக இருப்பது. இதனைத் தவறென்று கூற முடியாது. அந்த அநீதியை அங்கீகரிக்கும்பொருட்டு மௌனமாக இருப்பது. ரௌத்திரம் பழகு என்று நம்மவர்கள் குறிப்பிடுவது அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதைத்தான். அநியாயக்கார அரசனுக்கு முன்னால் அவனுடைய அநியாயத்தை எதிர்த்து குரல்கொடுப்பது மிகச் சிறந்த ஜிஹாத் என்று இஸ்லாமும் குறிப்பிடுகிறது. நிச்சயம் அந்தக் குரலுக்கு பெரும் மதிப்பு இருக்கிறது. அது அதிகாரம்மிக்க ஆட்சியாளர்களைக்கூட நடுநடுங்கச் செய்யக்கூடியது. அந்த முதல் அடுத்தடுத்த பல குரல்களை உருவாக்கும் அளவுக்கு வலிமையானது. அதனால்தான் அந்த முதல் குரலைக் கண்டு ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள். அந்தக் குரலை நசுக்க தங்களால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்கிறார்கள்.      

பொறுமையையும் கோழைத்தனத்தையும் பலர் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. பொறுமையை கோழைத்தனம் என்றும் கோழைத்தனமே பொறுமையென்றும் அவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். கோழைத்தனம் இயலாமையின் விளைவு. பொறுமை பழிவாங்க ஆற்றல் பெற்றிருந்தும் பழிவாங்காமல் இருப்பது. பழிவாங்ககக்கூடிய ஆற்றல் அந்தச் சமயத்தில் இருக்கலாம் அல்லது சிறிது காலத்திற்குப் பிறகு அந்த ஆற்றலைப் பெறலாம். நாம் யார் மீது கோபம் கொள்கிறோம்? நமக்கு மேலிக்கும் அதிகாரிகள் மீதா? நம்மைவிட பதவியிலும் அந்தஸ்திலும் செல்வத்திலும் உயர்ந்தவர்கள் மீதா? பெரும்பாலும் நமக்குக் கீழ் இருப்பவர்களிடம்தானே கோபம் கொள்கிறோம். ஆற்றல் பெற்றிருந்தும் அந்த ஆற்றலை பயன்படுத்தாமல் இருப்பதுதான் பொறுமை. அநீதிக்கு எதிராக மௌனமாக இருப்பது பொறுமையல்ல. அது இயலாமை. இயலாமையினால் நாம் அமைதியாக இருக்கிறோம். அது ஒன்றும் கோழைத்தனம் அல்ல. மாறாக அதுதான் இயல்பு. அப்படித்தான் இருக்க முடியும். காலம் மாறும். அது அதே நிலையில் நீடிப்பதில்லை. அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கக்கூடியது.  ஆனால் காலம் மாறி அவர்களின் இடத்தில் நாமும் நம்முடைய இடத்தில் அவர்களும் இருக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதில்தான் நம்முடைய தனித்துவம் வெளிப்படுகிறது. அவர்கள் எப்படி நடந்துகொண்டார்களோ அப்படியே நாங்களும் நடந்துகொள்வோம் என்றால் நிச்சயம் அவர்களுக்கும் நமக்கும் மத்தியில் எந்த வேறுபாடும் இல்லை. அந்தச் சமயத்தில் நாம் பேசக்கூடிய நீதியே உண்மையான நீதி. அந்தச் சமயத்தில் பழிவாங்கும் உணர்ச்சிகளுக்கு எதிராக நாம் முன்வைக்கும் பொறுமையே உண்மையான வீரம். கோபத்தை அப்படியே கொட்டுவது வீரமல்ல. அது மிருகத்தனம்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply