மார்க்கம் என்பது ஒரு வழிமுறை. அது எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகிறது. இங்கு பல வகையான மார்க்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் இயல்புக்கு உகந்த, தாங்கள் சரியெனக் கருதும் ஒரு மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்கள். சிலர் எந்த மார்க்கத்தையும் பின்பற்றாமல் கட்டுப்பாடுகள் அற்ற ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
முஸ்லிம்களாகிய எங்களுக்கு இஸ்லாம் என்பது வாழ்க்கை நெறி. அது நாங்கள் எங்களின் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகிறது. இஸ்லாம் தன்னை இறைவனிடமிருந்து வந்த மார்க்கம் என்று கூறுகிறது. தான் மட்டுமே இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் என்றும் இறைவனை அடைவதற்கு தன்னைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அது உறுதியாகக் கூறுகிறது.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட மார்க்கங்களைக் கொண்டு இறைவனை அடைய முடியாது. மனித முயற்சிகள் எல்லைக்குட்பட்டவை. அவை ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிச் செல்ல முடியாது. மனிதர்களுக்கு அதற்கான ஆற்றலும் வழங்கப்படவில்லை. அவர்களால் தங்கள் காலத்தை, இடத்தை, சூழலைத் தாண்டி சிந்திக்க முடியாது. இன்னொன்று அவர்கள் முரண்படக்கூடியவர்கள். அவர்கள் மற்றவர்களுடன் முரண்படுகிறார்கள். ஏன் தங்களுடன்கூட முரண்படுகிறார்கள். முரண்படுதல் அவர்களின் இயல்பு. முரண்படுதல் அவர்களின் பலவீனம்.

இஸ்லாம் இறைமார்க்கம் என்பதற்கான ஆதாரம் என்ன? சந்தேகமேயின்றி திருக்குர்ஆன்தான். அப்படி ஒரு வேதத்தை மனிதர்களால் உருவாக்க முடியாது. அந்த வேதத்திலுள்ள ஒரு அத்தியாயத்தைக் கூட மனிதர்களால் உருவாக்க முடியாது என்று அது சவால்விட்டுக் கூறுகிறது. உங்களால் முடிந்தால் அப்படி ஒரு வேதத்தை உருவாக்கிக் காட்டுங்கள் என்று அது சவால் விடுகிறது.
திருக்குர்ஆனைப் போன்ற ஒரு வேதத்தை, வழிகாட்டலை மனிதர்களால் ஏன் உருவாக்க முடியாது? மனிதர்கள் பலவீனமானவர்கள். அவர்களின் புலனுறுப்புகள் எல்லைக்குட்பட்டவை. அவற்றைக் கொண்டு அவர்கள் வாழும் கால இட வெளியைத் தாண்டி முன்னால் செல்ல முடியாது. மனிதர்களைப் படைத்தவன் அவர்களின் இயல்புகளுக்கேற்ப அவர்களுக்கு உகந்த ஒரு வழிகாட்டலை வழங்கியுள்ளான். படைத்தவன்தான் அறிவான், தான் படைத்த படைப்புகள் குறித்து, அவற்றுக்கு அவசியமான வழிகாட்டல்கள் குறித்து.
திருக்குர்ஆன் இறைவனைக் குறித்து அவனுடைய பண்புகள் குறித்து மிகச் சிறந்த முறையில் நம்பிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்துகிறது. இறைவனைக் குறித்து அவனுடைய பண்புகள் குறித்து அவன்தானே மனிதர்களுக்குச் சொல்ல முடியும்? மனிதர்களால் இறைவன் இருக்கிறான் என்பதை அறிய முடியும். ஆனால் அவன் எப்படிப்பட்டவன்? அவனுடைய பண்புகள் என்னென்ன? அவனை எப்படி வணங்க வேண்டும் என்பதை அறிய முடியாது. எங்களின் அறிவைக் கொண்டு எங்களால் முழுமையாக இறைவனைக் குறித்து அறிந்துகொள்ள முடியும் என்று புறப்பட்டுச் சென்றவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் வழி தெரியாமல் தடுமாறி நின்றார்கள்; யூகங்களில் உழன்று தாங்களும் குழம்பினார்கள், மற்றவர்களையும் குழப்பினார்கள்.
இறைவனை எப்படி உணர்வது? வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வின் மீதா சந்தேகம் கொள்கிறீர்கள் என்று திருக்குர்ஆன் கேட்கிறது. இறைவனை உணர்தல் மனித இயல்பில் இருக்கின்ற ஒன்றுதான். தன் இயலாமையை உணரும் மனிதன் அடுத்த கணம் இறைவனை உணர்கிறான். அவன் வலிமையாக, செழிப்பாக இருக்கும்போதும் கர்வம் என்னும் போதையில் மூழ்கியிருக்கும்போதும் தன்னால் தனித்து நிற்க முடியும், தன்னால் எதையும் செய்ய முடியும் என்று அவன் எண்ணலாம். ஆனால் அவன் துன்பங்களால் சூழப்பட்டு விட்டால் அவனுடைய இயலாமை பேருரு கொண்டு அவனுக்கு முன்னால் வெளிப்பட்டு நின்றால் அவனுடைய கர்வம் உடைந்து விடுகிறது. அவன் எவ்வித அழைப்பும் இன்றி இயல்பாகவே இறைவனின் பக்கம் திரும்புகிறான். தன்னைப் பாதுகாக்குமாறு இறைவனிடம் மன்றாடுகிறான்.
இறைவனின் இருப்பை நிறுவுவதற்கு வெளியிலிருந்து ஆதாரங்கள் தேவையில்லை. மனிதனுக்குள் இருக்கும் இந்த ஆதாரமே, இந்த இயல்பின் குரலே போதுமானது. ஆதாரங்கள் கொண்டு நிரூபிக்கப்படும் அளவுக்கு அவன் மறைவானவனோ உணர முடியாதவனோ அல்ல. ஒவ்வொரு மனிதனும் இறைவனை உணரவே செய்கிறான். மனிதர்கள் வகுத்துக் கொண்ட அரசியல் நிலைப்பாடுகள் சிலரை அதற்கு மாறாக பேச வைக்கிறது.

இறைவனைக் குறித்து இஸ்லாம் பின்வருமாறு வரையறுக்கிறது:
இறைவன் ஒருவனே. அவன்தான் இந்த உலகிலுள்ள அனைத்தையும் படைத்தான். அவன்தான் படைப்பாளன். அவனைத் தவிர அனைத்துமே அவனுடைய படைப்புகள்தாம். ஆகவே அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன். மனிதர்கள் அவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனிடம் மட்டுமே உதவி தேட வேண்டும். அவனிடமே தங்கள் கோரிக்கைகளை, வேண்டுதல்களை முன்வைக்க வேண்டும். அவனுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும். அவனுடைய சட்டங்களை, வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும்.
அவன் பேராற்றல் கொண்டவன். அவனால் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. படைப்புகள் அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அவனுடைய அனுமதியின்றி இங்கு எதுவும் நிகழ்ந்துவிட முடியாது. இங்கு நிகழக்கூடிய ஒவ்வொன்றையும் அவனே நிகழ்த்துகிறான். இங்கு அவனுக்குத் தெரியாதது என்று எதுவும் இல்லை. அவனுடைய பிடியிலிருந்து யாரும் எங்கும் தப்பிவிட முடியாது.
அவன் களைப்போ தூக்கமோ அற்றவன். மனிதப் பலவீனங்கள் எதுவும் இல்லாதவன்.அவன் படைப்புகள் மீது பேரன்பும் பெரும் கருணையும் கொண்டவன். அவன் மனிதர்களின் தவறுகளை, பாவங்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிடக்கூடியவனாக, மன்னிக்கக்கூடியவனாக இருக்கிறான். அதே சமயம் அநியாயக்காரர்களை தண்டிப்பதில் கடுமையானவனாவும் இருக்கின்றான்.
அவன் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியவன் அல்ல. ஆனால் மனிதர்கள் அனைவரும் அவனுக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள். அவர்கள் செய்த செயல்களுக்காக அவன் அவர்களை விசாரணை செய்வான். தாங்கள் செய்த சிறிய, பெறிய செயல்கள் ஒவ்வொன்றுக்கும் அவர்கள் அவனிடம் பதில் சொல்லியாக வேண்டும். அவன் தான் நாடிதைச் செய்பவன். அவனுடைய நாட்டத்திற்குக் குறுக்காக எந்தவொன்றும் வந்துவிட முடியாது. அதே சமயம் நீதி செலுத்தக்கூடியவன். யாரையும் அவன் அநியாயமாகத் தண்டித்துவிட மாட்டான். அவன் அடியார்கள் மீது சிறிதளவுகூட அநியாயம் செய்பவன் அல்ல.
அவன் ஞானம் மிக்கவன். அவன் மனிதர்களுக்கு வழங்கும் அறிவுரைகளும் சட்டங்களும் ஞானம்பொருந்தியவை. அவற்றில்தான் மனிதர்களுக்கு நன்மை இருக்கிறது. இந்த உலகிலுள்ள அனைத்தையும் அவனே படைத்தான். மட்டுமில்லாமல் அவற்றை அவன் மனித வாழ்கைக்காக, மனிதனின் பயன்பாட்டிற்காக வசப்படுத்தித் தந்துள்ளான். மனிதர்கள் கண்டுபிடிப்பவை யாவும் அவன் வசப்படுத்தித் தந்தவை. அவர்களின் கண்டுபிடிப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆற்றலுக்கு உட்பட்டவையே. அந்த எல்லையைத் தாண்டி அவர்களால் ஓர் அங்குலம்கூட எடுத்து வைக்க முடியாது.
அவனுக்கு தாய்தந்தை இல்லை. அவனுக்கு மனைவி மக்களும் இல்லை. அவனுக்கு இணையாக இங்கு யாரும் இல்லை. அவனைப் போன்று எதுவும் இல்லை. அவனே முதலும் முடிவுமானவன். அனைத்து அதிகாரங்களும் அவன் கைவசமே உள்ளன.

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம், நம்மைச் சுற்றிக் காணப்படும் படைப்புகள், நம் வாழ்வில் நிகழும் நிகழ்வுகள், ஆச்சரியங்கள், எதிர்பாராமைகள், நம் உடலின், மனதின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் நமக்கு பேராற்றல் மிக்க படைப்பாளனை நினைவூட்டிக் கொண்டேயிருக்கின்றன. வானங்கள், பூமியின் படைப்பிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு சான்றுகள் இருக்கின்றன என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
மனிதன் தன்னையும் இந்தப் பிரபஞ்சத்தையும் கொஞ்சம் கவனித்துப் பார்த்தாலே இறைவனின் இருப்பை, அவனுடைய பேராற்றலை, அவனுடைய பராமரிப்பை உணர்ந்துகொள்ள முடியும். அறிவுடைய எந்த மனிதனும் இவையனைத்தும் எந்தவித நோக்கமும் இன்றி வீணாகப் படைக்கப்பட்டன அல்லது தாமாகவே உருவாகி விட்டன என்று கூற மாட்டான்.
நான் இதுவரை கடவுளை உணர்ந்ததில்லை என்று ஒருவர் கூறுவார் எனில் அவரது அந்தக் கூற்றில் அவர் உண்மையாளராக இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். தாம் வெளிப்படுத்தியிருக்கும் ஒரு அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக அவர் அவ்வாறு கூறலாம் அல்லது அவ்வாறு கூறுவதால் அவருக்கு ஏதேனும் லௌகீக இலாபம் இருக்கலாம்.
ஒவ்வொரு மனிதனும் ஒரு கட்டத்தில் ஆன்மிகமான கேள்விகளை எதிர்கொள்கிறான். அவை அவனுடைய மனதில் இயல்பாகவே உருவாகி வரக்கூடியவை. தன்னைப் படைத்தவன் யார்? ஏன் படைத்தான்? இந்த வாழ்க்கையின் இயல்பு என்ன? அதன் நோக்கம் என்ன? என்னைச் சுற்றி காணப்படும் இந்த படைப்புகளின் இயல்பு என்ன? அவற்றுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? ஏன் இப்படியெல்லாம் நிகழ்கிறது? மரணம் என்பது என்ன? மரணத்திற்குப் பிறகு என்ன நிகழும்?
லௌகீகவாதிகளால் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது. அவர்கள் கூறுவதெல்லாம் இந்தக் கேள்விகளைப் புறக்கணியுங்கள் என்பதுதான். இந்தக் கேள்விகளைப் புறக்கணிப்பது வாழ்வை அர்த்தமற்ற ஒன்றாக ஆக்கி விடுகிறது. ஒரு கட்டத்தில் மனம் இட்டு நிரப்ப முடியாத வெறுமையில் சிக்கி தடுமாறத் தொடங்கி விடும் அல்லது மனப்பிறழ்வுக்கு ஆளாகி விடும்.
இந்தக் கேள்விகள் இயல்பாகவே மனிதர்களை இறைவனின் பக்கம் கொண்டு சேர்க்கின்றன. அவனிடம் மட்டுமே அவற்றுக்குச் சரியான, திருப்தியான பதில்கள் இருக்கின்றன. இஸ்லாம் இந்தக் கேள்விகளுக்கு தெளிவான, திருப்தியான பதில்களை வழங்குகிறது. மனித வாழ்வைச் சுற்றியிருக்கும் மூடுமந்திரங்கள் அனைத்தையும் அது அகற்றுகிறது. மனிதனுக்கு நேரான ஒரு பாதையை காட்டுகிறது. அது அந்தப் பாதையின் இயல்பையும் அந்தப் பாதையில் காணப்படும் இடையூறுகளையும் அவனுக்குத் தெளிவுபடுத்துகிறது. இஸ்லாம் இதன்மூலம் நம்பிக்கையாளனுக்கு மனத்தெளிவை அளிக்கிறது. உண்மையில் அது நம்பிக்கையாளனுக்கு வழங்கப்படும் மகத்தான அருட்கொடைதாம்.
இறைநிராகரிப்பாளர்களைக் குறித்து திருக்குர்ஆன் ‘அவர்கள் தங்கள் மன இச்சைகளை கடவுளாக்கிக் கொண்டவர்கள்’ என்று குறிப்பிடுகிறது. எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி இஷ்டம்போல வாழ வேண்டும், சிற்றின்பங்களில் மூழ்கித் திளைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இறைவனை மறந்து வாழ்கிறார்கள் அல்லது மறுத்து வாழ்கிறார்கள். சிலர் துன்பங்களால் பந்தாடப்பட்டு ஒரு கட்டத்திற்குப் பிறகு இறைவனின் பக்கம் திரும்பி விடுகிறார்கள். சிலர் அதே நிலையிலேயே நீடித்து மரணித்தும் விடுகிறார்கள்.
இறைவனை மறந்து வாழ்தல் இறைவனின் இருப்பு மீதான சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு சமயம் மனம் இறைவனை உணர்ந்தாலும் இன்னொரு சமயம் அதற்கு மாறாகவும் உணர்கிறது. அது மனம் கொண்டிருக்கும் சாய்வினால், விருப்பத்தினால் நிகழ்வது. மனம் எதை விரும்புகிறதோ அதனையே புறத்தில் காண முயற்சிக்கிறது. அவர்களின் உள்ளத்தில் ஏற்படும் தடுமாற்றம் கட்டற்ற வாழ்க்கையின் மீது அவர்கள் கொண்டிருக்கும் மோகத்தினால் நிகழ்வது. புறத்தில் அதற்கான ஆதரவுக் குரல்களை, அரசியல் நிலைப்பாடுகளைக் காணும்போது அது அதனை அப்படியே சுவீகரித்துக் கொள்கிறது. இறைமறுப்பு இயல்பின் குரல் அல்ல. அது பிறழ்வின் குரல்.
இறைநிராகரிப்பை இஸ்லாம் மிகப் பெரிய பாவமாக முன்வைக்கிறது. படைத்து பராமரிக்கும் இறைவனை வணங்கி அவனுக்கு நன்றியுள்ள அடியானாக இருப்பதற்குப் பதிலாக அவனை நிராகரித்து நன்றிகெட்ட அடியானாக இருப்பது மிகப் பெரிய பாவம்தான். அது மனிதனை இவ்வுலகிலும் மறுவுலகிலும் பேரிழப்பிற்கு உள்ளாகக்கூடியவனாக ஆக்கி விடுகிறது.
மனித மனதில் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை இறைநம்பிக்கையை கொண்டு அல்லாது வேறு எதனைக் கொண்டும் நிரப்ப முடியாது என்கிறார் பேரறிஞர் இப்னு கய்யூம். இறைவனைக் கண்டு கொண்ட, அவனிடம் சரணடைந்த உள்ளம் திருப்தியடைந்து விடும். அவனை ஏற்றுக்கொள்ளாத, இச்சைகளுக்கு அடிபணிந்த உள்ளம் ஒரு கட்டத்திற்குப் பிறகு கொல்லும் வெறுமையால் சூழப்பட்டு விடும்.

இறைவன் மனிதர்களிடம் நேரடியாகப் பேசுவதில்லை. மனிதர்களுக்கு தன் வழிகாட்டலை எடுத்துரைக்கும் பொருட்டு, அவர்களுக்கு தன் பக்கம் செல்லும் நேரான வழியைக் காட்டும் பொருட்டு அவர்களிலிருந்தே அவன் தூதர்களை அனுப்பினான் என்று இஸ்லாம் கூறுகிறது. அவன் ஒவ்வொரு சமூகத்திற்கும் தூதர்களை அனுப்பியுள்ளான். தூதர்கள் வராத எந்த சமூகமும் இல்லை. “என் சமூகமே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள், அவனுடைய கட்டளைகளைப் பின்பற்றி நடங்கள்” என்பதுதான் அந்தத் தூதர்களுடைய அழைப்பின் அடிநாதமாக இருந்தது.
இயல்பாகவே மனிதர்களிடம் இறைவனை உணரும் தன்மை இருக்கிறது. ஆனால் ஷைத்தானின் சதிவலைகளினாலும் மனதின் மிருக இச்சைகளினாலும் அந்த உணர்வு மழுங்கடிக்கப்படலாம் அல்லது வெளிப்படாமல் மறைவாக இருக்கலாம். தூதர்களின் அழைப்பு அந்த உணர்வை மூடியிருக்கும் திரைகளை அகற்றுகிறது. அந்த உணர்வை இன்னும் வலுப்படுத்துகிறது. மனிதர்கள் தூதர்களை நம்புவதற்கான அடிப்படையான காரணங்களுள் ஒன்று, அவர்கள் மனிதர்களுக்குள் இருக்கும் இயல்பான விசயங்களை நினைவூட்டுகிறார்கள்.
மனித சமூக வரலாற்றில் தூதுத்துவத்தின் வரலாறு மிக நீண்டது. ஏராளமான தூதர்கள் மனித சமூகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தாலும் அவர்களில் சிலரைக் குறித்து மட்டுமே திருக்குர்ஆன் பேசுகிறது. அவர்களில் சிலருடைய வரலாற்றை திருக்குர்ஆன் விரிவாக எடுத்துரைத்துள்ளது. சிலருடைய வரலாற்றை சுருக்கமாக எடுத்துரைத்துள்ளது.
தூதுத்துவ வரலாறு முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு முடிவடைகிறது. அவர்கள்தாம் தூதர்களில் இறுதியானவர். அவர்களுக்குப் பிறகு இனி எந்தத் தூதரும் வர மாட்டார்கள் என்றும் அவர்களுடைய தூதுத்துவம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது என்றும் இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாம் என்பது இறைவன் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதையும் முஹம்மது (ஸல்) தூதர்களில் இறுதியானவர் என்பதையும் மனதளவில் ஏற்றுக்கொண்டு நாவளவில் பிரகடனம் செய்வதாகும்.
மனிதர்களுக்கும் தூதர்களுக்குமான வேறுபாடுகள் என்னென்ன? தூதர்கள் உண்மையில் இறைவனிடமிருந்துதான் வந்துள்ளார்கள் என்பதை எப்படி அறிந்து கொள்வது?
தூதர்கள் தாங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ளவர்கள் என்பதற்கு ஆதாரமாக தெளிவான சான்றுகளையும் கொண்டு வந்தார்கள். ஒவ்வொரு தூதருக்கும் தனித்தனியான சான்றுகள் வழங்கப்பட்டிருந்தன. அவை மனிதர்களால் கொண்டு வர முடியாதவை. மனித சக்திக்கு அப்பாற்பட்டவை. அவை அவர்கள் இறைவனிடமிருந்து வந்துள்ளவர்கள் என்பதற்கான சான்றுகளாகத் திகழ்ந்தன.
ஈசா நபி மரித்தவர்களை உயிர்ப்பித்தார். அந்தச் சமயத்தில் குணப்படுத்த முடியாத நோயாளிகளாக இருந்த தொழுநோயாளிகளைக் குணப்படுத்தினார். ஈசா நபியிடமிருந்து வெளிப்பட்ட அற்புதங்கள் அவர் இறைத்தூதர் என்பதற்கான அடையாளங்களாக இருந்தன. மூசா நபிக்கு சூனியத்தை முறியடிக்கும் மிகப் பெரிய அற்புதம் வழங்கப்பட்டிருந்தது. இப்படி ஒவ்வொரு தூதருக்கும் ஒவ்வொரு விதமான சான்றுகள் வழங்கப்பட்டிருந்தன.
இறுதித்தூதரான முஹம்மது நபிக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய அற்புதம் திருக்குர்ஆனாகும். இதுதான் அவர் இறைத்தூதர் என்பதற்கான மாபெரும் சான்று. அல்லாஹ் கூறுகிறான்: “நாம் நம்முடைய அடியார் மீது அருளிய இந்த வேதத்தின் மீது நீங்கள் சந்தேகம் கொண்டவர்களாக இருந்தால் அதைப் போன்று ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்.” உங்களால் இப்படி ஒரு வேதத்தை மட்டுமல்ல, அதிலுள்ள ஒரு அத்தியாயத்தைப் போன்று ஒரு அத்தியாயத்தைக்கூட உருவாக்க முடியாது என்று அல்லாஹ் சவால்விட்டுக் கூறுகிறான்.

திருக்குர்ஆன் என்பது மனிதர்களால் எழுதப்பட்ட புத்தகங்களைப் போன்ற ஒரு புத்தகம் அல்ல. அது இறைவனிடமிருந்து வந்த வேதம் என்பதற்கான சான்றுகள் ஏராளமாக அதில் கொட்டிக் கிடக்கின்றன. அதன் ஒவ்வொரு அம்சமும் அற்புதம். அதன் அமைப்புமுறை தொடங்கி அது முன்வைக்கும் கண்ணோட்டங்கள், அறிவுரைகள், வழிகாட்டல்கள், சட்டங்கள், ஒழுக்கங்கள் என ஒவ்வொன்றும் காலத்தையும் இடத்தையும் தாண்டி நிற்பவை; முழுக்க முழுக்க மனித இயல்புகளோடு பொருந்தி நிற்பவை; மனிதர்களுக்கான இவ்வுலக, மறுவுலக நலன்கள் அனைத்தையும் கொண்டிருப்பவை.
வெறுமனே ஒரு புத்தகம் ஒன்றை கொண்டு வாருங்கள் என்று அது கூறவில்லை. அதில் இருப்பதுபோன்று காலத்தையும் இடத்தையும் தாண்டி மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய, படிப்பினைகளும் சட்டங்களும் நிரம்பிய, மனித சமூகத்திற்கான நலன்களை உள்ளடக்கிய செறிவான வசனங்களைப் போன்ற வசனங்களைக் கொண்டு வாருங்கள் என்று அறைகூவல் விடுகிறது. முஹம்மது நபிக்கு அருளப்பட்ட மாபெரும் அற்புதம் இந்தக் குர்ஆன்தான். திறந்த மனதோடு முன்முடிவுகள் இன்றி திருக்குர்ஆனை ஆழ்ந்து வாசிப்பவர்கள் இந்தக் கருத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என்று கருதுகிறேன்.
மனிதர்களுக்கும் தூதர்களுக்குமான வேறுபாடு தூதர்களுக்கு இறைவனிடமிருந்து வஹி என்னும் இறைச் செய்தி வருகின்றது என்பதைத் தாண்டி வேறொன்றும் இல்லை. தூதர்களும் மனிதர்கள்தாம். அவர்கள் வானவர்கள் அல்ல. “நான் உங்களைப் போன்ற மனிதன்தான். எனக்கு இறைவனிடமிருந்து வஹி அறிவிக்கப்படுகிறது” என்றுதான் தூதர்கள் கூறினார்கள்.
திருக்குர்ஆன் ஒரேயடியாக ஒரு புத்தகமாக அந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட இருபத்து மூன்று வருடங்கள்வரை அருளப்பட்டது. திருக்குர்ஆனின் வசனங்களை மக்காவில் அருளப்பட்ட வசனங்கள், மதீனாவில் அருளப்பட்ட வசனங்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஆரம்பத்தில் மக்காவில் அருளப்பட்ட வசனங்கள் அந்த முஸ்லிம்களின் கண்ணோட்டங்கள், கொள்கைகள், ஒழுக்கங்கள் ஆகியவற்றை சீர்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கின. மதீனாவில் அருளப்பட்ட வசனங்கள் சட்டங்களையும் சமூக வாழ்க்கைக்கு தேவையான ஒழுங்குகளையும் இன்னபிற அம்சங்களையும் கவனத்தில் கொண்டிருந்தன.
முஹம்மது நபியவர்களின் பணி திருக்குர்ஆனின் வசனங்களைக் கொண்டு அந்த முஸ்லிம்களைப் பண்படுத்தியதும் அவற்றின் அடிப்படையில் ஒரு முன்மாதிரி சமூகத்தை உருவாக்கியதும் ஆகும். அந்த வசனங்கள் எதார்த்தத்தோடு புற வாழ்க்கையோடு தொடர்பற்ற வெற்று தத்துவங்களாக, அறிவுரைகளாக இருக்கவில்லை. அவை ஒவ்வொன்றும் அவர்களின் சூழல்களோடு, விவகாரங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவையாக இருந்தன. அவை அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தாக்கம் செலுத்திக் கொண்டிருந்தன.
நபியவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று அவர்களுடைய மனைவி அன்னை ஆயிஷாவிடம் கேட்கப்பட்டபோது “அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது” என்று பதிலளித்தார்கள். குர்ஆனின் நடைமுறை விளக்கமாக நபியவர்கள் இருந்தார்கள். அப்படித்தான் அவர்கள் தங்கள் தோழர்களையும் உருவாக்கினார்கள். மைல்கல் என்ற புத்தகத்தில் செய்யித் குதுப் திருக்குர்ஆன் உருவாக்கிய அந்த முதல் சமூகத்தைக் குறித்து அற்புதமான முறையில் எடுத்துரைக்கிறார். திருக்குர்ஆன் அந்த முதல் முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கையில் எந்த அளவு தாக்கம் செலுத்தியது என்பதை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் அந்தப் புத்தகத்தை வாசிக்கலாம்.
இங்கு இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்பது திருக்குர்ஆனும் அதற்கு விளக்கமாக வாழ்ந்த நபியவர்களின் வாழ்க்கையும் ஆகும். அது இஸ்லாமிய மொழி வழக்கில் ‘சுன்னா’ என்ற வார்த்தையைக் கொண்டு குறிக்கப்படுகிறது. நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவை ‘சுன்னா’ என்ற சொல்லாடலுக்குள் உள்ளடங்கி விடும். திருக்குர்ஆன், சுன்னா என்ற இரண்டு மூலாதாரங்களிலிருந்தே இஸ்லாமிய சமூக வாழ்க்கைக்கான, குடும்ப வாழ்க்கைக்கான, தனி மனித வாழ்க்கைக்கான அடித்தளங்கள் பெறப்படுகின்றன.
இஸ்லாம் என்ற சொல்லுக்கு கட்டுப்படுதல், கீழ்ப்படிதல் என்று பொருள். இறைவனுக்குக் கட்டுப்பட்டு தன் வாழ்க்கையை அவனுடைய வழிகாட்டுதலின்படி அமைத்துக் கொள்பவனே முஸ்லிம். இஸ்லாம் என்பது மனதளவில் முழுமையாக அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு அவனுக்குக் கட்டுப்படுவது; அவன் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவது. முஸ்லிம் என்பவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்பவன் ஆவான். தூதருக்குக் கட்டுப்படுவதும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதுதான். ஏனெனில் தூதர் தம் மன இச்சைப்படி எதுவும் பேசுவதில்லை. அவன் அல்லாஹ்வின் கட்டளைகளை, வழிகாட்டுதல்களையே எடுத்துரைக்கிறார். ஒரு நம்பிக்கையாளன் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி பெறுவதற்கான ஒரே வழி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு தம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுதான்.
இதன் அடிப்படையில்தான் நம்பிக்கைகொண்ட முஸ்லிம் சமூகம் உருவாகிறது. ஈமான் என்னும் இறைநம்பிக்கையே முஸ்லிம் சமூகத்தினரை இணைக்கும் மையப்புள்ளி. அதுதான் அதன் அச்சாணி. அது இல்லாமல் இந்த சமூகம் இல்லை. அது ஒரு இனத்தின், சமூகத்தின் தொகுப்பு அல்ல. அது ஒரு சங்கமம். இந்த அடிப்படையான தகுதியைக் கொண்ட யார் வேண்டுமானாலும் அந்த சங்கமத்தில் இணைந்து கொள்ளலாம். அந்த சங்கமத்தில் இனத்தின் அடிப்படையில் நிறத்தின் அடிப்படையில் வர்க்கத்தின் அடிப்படையில் எந்த உயர்வு தாழ்வும் இல்லை. அங்கு அனைவரும் சமமானவர்கள். அனைவரும் ஆதம் ஹவ்வா என்ற ஒரே தாய் தந்தையிலிருந்து வந்தவர்கள். அவர்களைப் படைத்த இறைவன் ஒருவன்தான். அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்.
இந்த அடிப்படையான தகுதியைப் பெறவில்லையெனில் அவன் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தாலும் முஸ்லிம் பெயரைக் கொண்டிருந்தாலும் முஸ்லிம்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்தாலும் அரசின் பதிவேட்டில் முஸ்லிமாகக் கருதப்பட்டாலும் இஸ்லாத்தின் பார்வையில் அவன் முஸ்லிமாகக் கருதப்பட மாட்டான்.
இஸ்லாத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. இங்கு வற்புறுத்தியோ ஆசைகாட்டியோ அச்சுறுத்தியோ யாரையும் இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு கொண்டு வருவதால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை. அது மனித உள்ளத்தில் ஆதிக்கம் செலுத்தும் மார்க்கம். மனமுவந்து முழு விருப்பத்துடன் மட்டுமே ஒருவர் இஸ்லாத்தில் நீடிக்க முடியும். நேரான வழி எது, தவறான வழி எது என்பதை தெளிவுபடுத்தப்படுத்துவது மட்டுமே ஒரு அழைப்பாளனின் பணி. விரும்பியவர் இஸ்லாத்தை ஏற்கலாம். விரும்பியவர் இஸ்லாத்தை நிராகரிக்கலாம்.
ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதால் அவருக்கே தவிர வேறு யாருக்கும் நன்மை இல்லை. ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிச் செல்வதால் அவருக்கே தவிர வேறு யாருக்கும் தீமை இல்லை. ஏற்றுக்கொள்பவர்கள் அதற்கான நன்மைகளை இவ்வுலகிலும் மறுவுலகிலும் அனுபவிப்பார்கள். நிராகரிப்பவர்கள் நிராகரிப்பின் விளைவுகளை இவ்வுலகிலும் மறுவுலகிலும் அனுபவிப்பார்கள்.
இது இறைவன் அளித்த மார்க்கம். இதனை மேலோங்கச் செய்வது அவனுடைய பொறுப்பு; அவனுடைய வாக்குறுதி. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தன் இயல்பு நிலையில் இருந்து கொஞ்சம்கூட மாறாமல் அது அப்படியே நிலைத்திருக்கும். வரலாறு இதற்கு சான்று. இஸ்லாத்தைப் போன்று எதிர்க்கப்பட்ட எந்த மார்க்கமும் அதன் இயல்பு நிலையில் நீடித்ததில்லை. ஆனால் அவ்வளவு எதிர்ப்புக்கு ஆளான பின்னரும் அது வேகத்தோடு மேலோங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதுதான் அதன் இயல்பு. அதுதான் அது இறைமார்க்கம் என்பதற்கான சான்று.
