நிச்சயமின்மை உங்களைச் சூழ்ந்திருக்கிறது. எப்படி உங்களால் நிம்மதியாக இருக்க முடிகிறது?
நிச்சயமின்மை இந்த உலகின் இயல்புகளுள் ஒன்று. இது ஒவ்வொருவரையும் சூழ்ந்துள்ளது. இங்கு யாருக்கும் நிச்சயம் என்பது இல்லை. அடுத்த நிமிடம் என்ன நிகழும்? என்ன மாற்றங்கள் நிகழும்? எந்தத் துன்பம் வந்தடையும்? என்று யாருக்கும் தெரியாது. நாம் நன்னம்பிக்கை கொள்கிறோம். மனிதர்கள் முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் கணிக்கிறார்கள். அவர்களின் கணிப்புகள் உண்மையாவதும் பொய்யாவதும் அவர்களின் கைகளில் இல்லை. அவர்களின் கணிப்புகள் பொய்யாகலாம். அவர்கள் எதிர்பாராத துன்பம் அவர்களை வந்தடையலாம். திடீர் வேதனையை யார்தான் கணிக்க முடியும்? அடுத்தவரின் மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர் திடீரென மரணமடைந்து விடலாம். தீராத நோயில், பெரும் சிக்கலில் அகப்பட்டவர் யாரும் எதிர்பாராவிதமாக குணமடைந்து, விடுதலையடைந்து விடலாம்.
எதிர்காலம் சூன்யமாக இருப்பதால் சில சமயங்களில் நன்னம்பிக்கை கொள்கிறோம், சில சமயங்களில் பதற்றமடைகிறோம். நன்னம்பிக்கை கொள்வதும் பதற்றமடைவதும் நம்முடன் இருக்கும் மனிதர்களை, நாம் இருக்கும் சூழல்களை, நம்முடைய முந்தைய அனுபவங்களைப் பொறுத்தது. இஸ்லாம் கூறுவது மிக எளிமையானது, பாதுகாப்பானது. நீங்கள் அல்லாஹ்வை நம்புங்கள், அவனுடைய விதியில் நன்மை இருக்கிறது என்பதை நம்புங்கள், அவன் எந்தவொன்றையும் நோக்கமின்றி நிகழ்த்துவதில்லை என்பதை நம்புங்கள், கொடுப்பவன் அவன்; எடுப்பவன் அவன்; கொடுப்பதும் எடுப்பதும் அவனுடைய உரிமைகள் என்பதையும் அவனுடைய செயல்பாடுகள் நோக்கத்தை, நீதியை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் நம்புங்கள்.
