மனிதனால் சட்டென எப்படி இன்னொரு முகத்திற்கு மாறிவிட முடிகிறது என்பது ஆச்சரியமான ஒன்றுதான். நாம் ஒரு மனிதனைக் குறித்து அவனுடைய கடந்த கால நம்முடைய நட்பின், பழக்கத்தின் அடிப்படையில், அவனைக் குறித்து நாம் அடைந்த புரிதலின் அடிப்படையில் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்போம். அந்த பிம்பத்தைக் கொண்டே அவனை அணுகுவோம். அவன் ஏதேனும் வகையில் பெரும் செல்வத்தையோ புகழையோ பெறாதவரை அந்த பிம்பம் சிதைவதில்லை.
குறுகிய காலத்தில் அவனுக்கு பெரும் செல்வம் வந்து சேரும்போது அல்லது அவன் பெரும் புகழை அடையும்போது அவனுடைய பிம்பம் வேறு ஒரு பிம்பமாக மாறிவிடுகிறது. அது நாம் அறிந்த பிம்பம் அல்ல. நமக்குத் தெரியாத இன்னொரு பிம்பம். அவனுக்குக் கிடைத்த வசதி வாய்ப்புகள், பெரும் புகழ் அவனுடைய இன்னொரு பிம்பத்தை நம் முன் கொண்டு வருகின்றன. நாம் அந்த பிம்பத்தைக் கண்டு அவனா இப்படி மாறிவிட்டான் என்று நம்ப முடியாமல் திகைக்கிறோம். முந்தைய அதே நட்போடு, அதே பழக்கத்தோடு, அதே புரிதலோடு நாம் அவனை அணுக முடிவதில்லை. அப்படி அணுக நினைப்ப நினைப்பவர்களுக்கு தாங்கள் இழிவுபடுத்தப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
மனிதன் அடையக்கூடிய வசதி வாய்ப்புகள் அவனுக்கு வேறு ஒரு பிம்பத்தைக் கொண்டு வருவது தவிர்க்க முடியாதது. ஏனெனில் அவை அவனுடைய மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. சரண்டர் மனம், விட்டுக்கொடுக்கும் பண்பு, சகித்துக் கொள்ளும் பண்பு ஆகியவை அவனிடமிருந்து அகன்று விடலாம். அரிதாக சில மனிதர்கள் அதே பண்புகளோடும் நீடிக்கலாம். ஆனாலும் நம்முடைய பார்வையில் ஏற்படும் மாற்றம் தவிர்க்க முடியாதது.
