மற்ற புத்தகங்களை வாசிப்பதைப் போல நாம் குர்ஆனை வாசிக்கக்கூடாது. அது ஒரே நேரத்தில் முழுமையாக வாசித்து முடிக்க வேண்டிய ஒரு புத்தகம் அல்ல. அது கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கப்பட வேண்டும். அது தாகத்திற்கேற்ப மிடறு மிடறாக அருந்தப்பட வேண்டும். அது அதற்கே உரிய தனித்துவமான முறையில் அணுகப்பட வேண்டும். அது எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும்.
அது ஒரே சமயத்தில் ஒரேடியாக அருளப்பட்ட வேதம் அல்ல. இருபத்து மூன்று வருட காலம் அந்த மக்களுடைய தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக அருளப்பட்டது. அதன் ஒவ்வொரு வசனமும் மனித வாழ்வோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கிறது. மனித வாழ்வுக்கு அவசியமற்ற, மனிதர்களால் செயல்படுத்த முடியாத எந்தவொன்றும் அதில் இல்லை.
அது அல்லாஹ்வை சரியான முறையில் அறிமுப்படுத்துகிறது. அவனுடைய ஒவ்வொரு பண்பையும் தகுந்த இடத்தில் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு பண்பும் அதற்கேயுரிய கச்சிதமான இடத்தில் குறிப்பிடப்படுகிறது. அந்த பண்புகளை மனித உள்ளம் உண்மைப்படுத்துகிறது. மனிதர்களுக்கு உரிய குறைகள் கொண்ட, பலவீனமான எந்தப் பண்பும் அவனுக்கு இல்லை.
அது மனிதர்களுக்கு நேரான வழியைக் காட்டுகிறது. அது அல்லாஹ்வின் பக்கம் செல்லக்கூடிய, அவனுடைய திருப்தியைப் பெற்றுத் தரக்கூடிய வழி. அந்த வழியில்தான் மனிதர்களின் இவ்வுலக, மறுவுலக வெற்றி அடங்கி இருக்கிறது. அந்த வழியில் செல்வதன்மூலமே மனிதன் நிம்மதியான, அமைதியான, அர்த்தமுள்ள ஒரு வாழ்வை வாழ முடியும். அந்த வழி இறைத்தூதர்களும் நல்லடியார்களும் அல்லாஹ்வுக்காக தங்களை அர்ப்பணம் செய்தவர்களும் உண்மையாளர்களும் சென்ற வழி. திருக்குர்ஆன் அந்த வழியையே காட்டுகிறது.
அது முந்தைய சமூகங்களின் சம்பவங்களை எடுத்துரைப்பதன்மூலம் மனித வாழ்க்கையில் செயல்படும் மாறா நியதிகளை அடையாளம் காட்டுகிறது. அந்த சம்பவங்களின் வழி முந்தைய சமூகங்கள் ஏன் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளானார்கள்? அவர்கள் எப்படி வழிகெட்டு வெகுதூரம் சென்றார்கள்? அவர்கள் ஏன் அல்லாஹ்வுடைய தண்டனைக்கு ஆளானார்கள்? ஆகிய கேள்விகளுக்கும் அது விடையளிக்கிறது.
இந்த உலகம் குருட்டுத்தனமான விதிகளால் ஆனது அல்ல. இங்கு தற்செயல்கள் என்று எதுவும் இல்லை. இங்கு சீரான, நிலையான விதிகள் செயல்படுகின்றன. அல்லாஹ்தான் அந்த விதிகளை அமைத்தான். அவன் ஏற்படுத்திய விதிகளில் யாரும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. அந்த விதிகள்தான் தனிமனித வாழ்க்கையிலும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையிலும் ஒரு சமூகத்தின் வாழ்க்கையிலும் செயல்படுகின்றன. திருக்குர்ஆனின் வசனங்கள் இங்கு செயல்படும் அற்புதமான சமநிலையை, ஒழுங்கை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. அவை இந்தப் பிரபஞ்சம் என்னும் மாபெரும் புத்தகத்தை வாசிக்கத் தூண்டுகின்றன. நம் கவனத்தை அதன் பக்கம் திருப்பிக் கொண்டே இருக்கின்றன.
அதில் நம்மைக் குறித்து கூறப்பட்டிருக்கிறது. நமக்குத் தேவையான அத்தனையும் அதில் இருக்கிறது. ஆனால் நமக்குத் தேவையானவற்றை அதிலிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் எனில் அதில் நாம் ஆழ்ந்து கவனம் செலுத்த வேண்டும். மேலோட்டமான வாசிப்பு நமக்கு எதையும் உணர்த்தாது. அதில் ஆழ்ந்து கவனம் செலுத்தும்போதுதான் அதன் ஞானங்கள் நமக்கு வெளிப்படும். நமக்குத் தேவையான அத்தனையும் அதிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அது என்றும் வற்றாத ஜீவ ஊற்று. நாம் தேவையான அளவு அதிலிருந்து பருகிக் கொண்டே இருக்கலாம். அது அளிக்கும் ஆத்மீக இன்பம் ஈடு இணை அற்றது.
தக்வா உடையவர்களுக்குத்தான் அது வழிகாட்டும். தக்வா உடையவர்களே அதிலிருந்து பயன்பெற முடியும். யார் அதிலிருந்து பயனடைய விரும்புகிறார்களோ அவர்கள்தாம் அதிலிருந்து பயனடைய முடியும். திருக்குர்ஆனைக் கொண்டு வழிகெட்டவர்களும் இருக்கிறார்கள். கோணலான இயல்புடையவர்களே அதனைக் கொண்டு வழிகெடுகிறார்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ
ஆல்ந்து கவனம் செலுத்துவதை பற்றி பொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க பாய்…
அடுத்தடுத்த கட்டுரைகள் வழியாக தெளிவுபடுத்துகிறேன், இன்ஷாஅல்லாஹ்.