அர்த்தமின்மை

You are currently viewing அர்த்தமின்மை

இமாம் இப்னு கைய்யும் கூறுவது போன்று, மனித மனதில் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை இறை நினைவைக் கொண்டு மட்டுமே நிரப்ப முடியும். வேறு எதனைக் கொண்டும் அதனை நிரப்ப முடியாது.

இறைவனை அறிந்துகொள்ளாத, இறைவனுக்குக் கட்டுப்படாத உள்ளம் காரிருளில் வழிதெரியாமல் தடுமாறித் திரியும். அது காணும் ஒவ்வொன்றையும் பாதை என நம்பி அதில் சென்று நிராசையடையும். அது எந்தவொன்றிலும் நீடிக்காது. அது எந்தவொன்றைக் கொண்டும் திருப்தியடையாது. சந்தேகம் என்னும் நோய் அதன் இயல்பான பண்புபோல எப்போதும் அதன் உடனிருக்கும். தெளிவும் உறுதியும் கொண்ட எந்தவொரு செயலும் அதனிடமிருந்து வெளிப்படாது.

இறைவனை அறிந்து கொண்ட உள்ளமே இலக்கை அறிந்து கொள்ளும். இறைவனைக் கண்டு கொண்ட உள்ளமே சந்தேகம் என்னும் நோயிலிருந்து விடுபட்டு உறுதியையும் தெளிவையும் அடையும். இலக்கில்லாத வாழ்வில் மன நிறைவு அடைய முடியாது. இலக்கில்லாத வாழ்வு வெறுமையால் நிரப்பப்பட்டு விடும்.

நீங்கள் இறைவனுக்கு கட்டுப்படவில்லை எனில் அவனை வணங்கவில்லை எனில் அவனிடம் சரணடையவில்லை எனில் அவனிடம் பிரார்த்தனை செய்யவில்லை எனில் நீங்கள் உங்களைப் போன்ற மனிதர்களுக்கு கட்டுப்படுவீர்கள்; உங்களைப் போன்ற படைப்பினங்களை வணங்குவீர்கள்; உங்களைப் போன்ற மனிதர்களிடம் அல்லது உங்களை விட கீழான படைப்புகளிடம் நீங்கள் உங்கள் பிரார்த்தனைகளை முன்வைப்பீர்கள். எதற்கும் கட்டுப்படாமல் எதனையும் வணங்காமல் எதனிடமும் எந்த பிரார்த்தனையையும் முன் வைக்காமல் உங்களால் இருக்க முடியாது.

மனிதனால் நீண்ட நாட்கள் தனித்து நிற்க முடியாது. அவனுக்குள்ளும் அவனைச் சுற்றியும் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் அவனுக்கு அவனுடைய இயலாமையை நினைவூட்டி கொண்டே இருக்கும். இறைவனின் பக்கம் திரும்புபவர் வாழ்வின் அர்த்தத்தை கண்டு கொள்வார். இறைவனை மறுத்தோ மறந்தோ வாழ்பவர் வாழ்வின் அர்த்தத்தை தொலைத்து விடுவார்.

அவன் உங்களுக்கு உதவி செய்தால் யாராலும் உங்களை வெல்ல முடியாது. அவன் உங்களை கைவிட்டு விட்டால் யாராலும் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன். இங்கு அவனுடைய அனுமதியின்றி எந்த ஒன்றும் நிகழ்ந்துவிட முடியாது. அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. அவனிடம் திரும்புவதில்தான் வாழ்வு இருக்கிறது.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply