நம்பிக்கையாளர்களும் உலகியல்வாதிகளும்

You are currently viewing நம்பிக்கையாளர்களும் உலகியல்வாதிகளும்

நம்பிக்கையாளர்கள் ஒரு விசயத்தை அணுகும் விதத்திற்கும் உலகியல்வாதிகள் ஒரு விசயத்தை அணுகும் விதத்திற்கும் மத்தியில் மிகப் பெரிய அளவில் வேறுபாடு இருக்கிறது. ஏனெனில் மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் குறித்து இருவரும் வெவ்வேறான கண்ணோட்டங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

நம்பிக்கையாளர்கள் மனித அறிவின், ஆற்றலின் எல்லையை அறிந்தவர்கள். இறைவனின் கரமே இங்கு முழுமையாகச் செயல்படுகிறது என்பதையும் அவனுடைய அனுமதியின்றி இங்கு எதுவும் நிகழ்ந்துவிட முடியாது என்பதையும் அவனுடைய நாட்டத்திற்கு குறுக்காக எந்தவொன்றும் வந்துவிட முடியாது என்பதையும் அவனால் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை என்பதையும் அறிந்தவர்கள்.

உலகியல்வாதிகளின் நம்பிக்கை வேறு. அவர்கள் மனித அறிவால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்புபவர்கள். தங்களின் இயலாமை வெளிப்படும் இடங்களில் மந்திர சக்தியால் எதையாவது சாதித்து விடலாம் என்று எண்ணுபவர்கள். இறைவனைக் குறித்து அவர்கள் கொண்டிருக்கும் கண்ணோட்டத்தில் தெளிவு இருக்காது. ஆகவே அது அவர்களின் செயல்பாட்டில் பெரிய அளவில் தாக்கம் செலுத்தாது. இங்கு இறைவனின் கரம் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஒரு புறம் மனித அறிவை, ஆற்றலை முழுமையாக நம்புவார்கள். இன்னொரு புறம் மூடுமந்திரத்தின், புரியாமையின் பக்கம் அடைக்கலம் ஆகிவிடுவார்கள்.

நம்பிக்கையாளர்கள் இக்கட்டான சூழலிலும் இறைவனின் உதவியை எதிர்பார்த்து நன்னம்பிக்கையோடு இருப்பார்கள். அந்த நன்னம்பிக்கை இறைவனைக் குறித்து அவர்கள் கொண்டிருக்கும் கண்ணோட்டத்திலிருந்து வெளிப்படக்கூடியது. ஆகவே அவர்கள் நிராசையடைவதில்லை. இழப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை ஏற்றுக் கொண்டு வாழப் பழகிக் கொள்கிறார்கள். அவற்றில் ஏதோ வகையில் நன்மை இருக்கலாம் என்று கருதுவார்கள். அவர்களின் நம்பிக்கைகள் எளியவை. ஆனால் குழப்பங்கள் அற்றவை.

உலகியல்வாதிகளால் அப்படி இருக்க முடியாது. சில சமயங்களில் மட்டுமீறிய தன்னம்பிக்கையினாலும் சில சமயங்களில் விரக்தியினாலும் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். தெளிவான கண்ணோட்டங்களைக் கொண்டு, நன்னம்பிக்கைகளைக் கொண்டு உள்ளங்கள் அமைதியடையும். தெளிவற்ற கண்ணோட்டங்கள் உள்ளத்தின் நிம்மதியைக் கெடுத்து விடும். தேவையற்ற பயத்திலும் பதற்றத்திலும் நிராசையிலும் ஆழ்த்தி விடும்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply