வஹியும் அறிவும்

You are currently viewing வஹியும் அறிவும்

வஹியும் அறிவும் ஒன்றுடன் ஒன்று முரண்படக்கூடியதல்ல. ஒன்று மற்றொன்றை வலுப்படுத்தக்கூடியது. இரண்டையும் ஒன்றுக்கொன்று முரணானவையாக நிறுத்துவது மடமைத்தனம். மனித உள்ளத்தில் சரியை சரியென, தவறை தவறென உணர்ந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறது. அந்தப் பக்குவம் பாவக்கறைகளினால், பிறழ்வுகளினால் மாசடையலாம். அதனால் நீங்கள் பிறழ்வுகளை சரியானவை என்றும் சரியானவற்றை பிறழ்வுகள் என்றும் வாதிடலாம். ஆரோக்கியமான இயல்பில் நீடிக்கும் மனிதர்கள் எதை சரியென உணர்கிறார்களோ அதை சரியென, அவர்கள் எதை தவறென உணர்கிறார்களோ அதை தவறென இஸ்லாம் கூறுகிறது. உண்மையில் ஆரோக்கியமான மனித இயல்புக்கும் வஹியின் போதனைகளுக்கும் மத்தியில் எவ்வித முரண்பாடும் இல்லை.

வஹி அறிவுடன் முரண்படக்கூடியது அல்ல. ஆனால் அறிவைக் கொண்டு முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாததையும் அது கொண்டு வந்துள்ளது. மனித அறிவுக்கு ஓர் எல்லை இருக்கிறது. அந்த எல்லையைத் தாண்டி அதனால் எதையும் புரிந்துகொள்ள முடியாது. அறிவுக்கு முரணானது என்பது வேறு. அறிவால் புரிந்துகொள்ள முடியாதது என்பது வேறு. அறிவால் புரிந்துகொள்ள முடியாததை அறிவுக்கு முரணானது என்று கூறுவது மடமைத்தனம். அறிவு என்பது ஓர் அளவுகோல். ஆனால் வரையறைக்குட்பட்ட அளவுகோல். அதனைக் கொண்டு அதற்கு அப்பாற்பட்ட விசயங்களை அளவிட முடியாது.

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதையும் திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதையும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்பதையும் அறிவைக் கொண்டு புரிந்துகொள்ள முடியும். திருக்குர்ஆனின் போதனைகளை நாம் அறிவைக் கொண்டு புரிந்துகொள்ள முடியும். உங்கள் அறிவைப் பயன்படுத்த மாட்டீர்களா? சிந்திக்க மாட்டீர்களா என்று திருக்குர்ஆன் மனிதர்களைப் பார்த்து கேட்கிறது. மனிதன் தன் அறிவை சரியான முறையில் பயன்படுத்தினால் அவன் உண்மையைக் கண்டுகொள்ள முடியும். திருக்குர்ஆனில் மனித அறிவால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் அவை எண்ணிக்கையில் குறைவானவை.

நம் அறிவைக் கொண்டு இஸ்லாம் சத்திய மார்க்கம், திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதை நாம் உணர்ந்துவிட்டால் அதற்குப் பிறகு நம்முடைய அளவுகோல் இஸ்லாமாக, திருக்குர்ஆனாகத்தான் இருக்க வேண்டும். அந்த அளவுகோலைக் கொண்டே நாம் எல்லாவற்றையும் உரசிப்பார்க்க வேண்டும். அந்த அளவுகோல் என்றும் மாறாத, மனிதப் பலவீனங்களால் பாதிக்கப்படாத நிலையான அளவுகோல்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply