மகிழ்ச்சியளித்து மகிழ்தல்

You are currently viewing மகிழ்ச்சியளித்து மகிழ்தல்

மகிழ்ச்சியளித்து மகிழ்தல் என்பது உன்னதமான ஆன்மிக அனுபவங்களுள் ஒன்று. இறைவன் இந்த உலகில் அமைத்த நியதிகளுள் இதுவும் அடங்கும். தேவையுடையவர்களுக்கு, சிரமப்படுபவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி இருக்கிறது. இங்கு மனிதர்கள் யாருடைய உதவியும் இன்றி தனித்து வாழ முடியாது.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் சார்ந்து வாழக்கூடியவர்கள். சார்பு வாழ்க்கை இங்கு அவசியமான ஒன்று. சார்பு வாழ்க்கை இழிவானது அல்ல. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கிறது. ஒவ்வொருவரிடமும் மற்றவர்களுக்கு அவசியமான ஏதேனும் ஒரு பண்பு இருக்கிறது.

நான் யாரிடமும் எந்த தேவையும் அற்றவன் என்று ஒருவன் அகந்தையுடன் கூறுவது அவனை சமூகத்தைவிட்டு தனித்தவனாக, விலகியவனாக ஆக்கிவிடும். சக மனிதர்கள் அவனை ஒதுக்கி விடுவார்கள் அல்லது அவனிடமிருந்து ஒதுங்கி விடுவார்கள். ஒதுக்கப்பட்டவனை வெறுமையுணர்வும் தனிமையுணர்வும் சூழ்ந்து கொள்ளும்.

“நீங்கள் உங்கள் சகோதரரின் துன்பத்தைப் போக்கினால் அல்லாஹ் உங்களின் துன்பங்களைப் போக்குவான்” என்றும் “நீங்கள் உதவி செய்தால் உதவி செய்யப்படுவீர்கள்” என்றும் கூறுகிறார்கள் நபியவர்கள்.

உதவி என்பது பல வகைப்படும். அது வெறுமனே பண ரீதியான உதவியை மட்டும் குறிப்பது அல்ல. மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் கூறும் ஆறுதல் உதவிதான். அறியாதவர்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுப்பதும் உதவிதான். பாதையில் கிடக்கும் தீங்கான பொருட்களை அகற்றுவதும் உதவிதான். நல்வழிகாட்டுவதும் உதவிதான். நல்ல வார்த்தை கூறுவதும் உதவிதான். மலர்ந்த முகத்துடன் உங்கள் சகோதரர்களை சந்திப்பதும் உதவிதான். மற்றவர்களை உதாசீனப்படுத்தாமல் இருப்பதும் உதவிதான். உங்களிடமிருந்து வெளிப்படும் புன்னகை சட்டென சக மனிதனின் மன இறுக்கத்தை தளர்த்துகிறது எனில் அதுவும் உதவிதான். இப்படி உங்களால் இலகுவாக செய்ய முடிந்த ஒவ்வொரு நற்செயலும் உதவிதான்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply