நட்பை தக்க வைப்பது

You are currently viewing நட்பை தக்க வைப்பது

மனதிற்குத் தெளிவாகத் தெரியும், நட்பு கொள்வதற்காக, உறவைப் பலப்படுத்துவற்காக, நட்பையும் உறவையும் தக்கவைத்துக் கொள்வதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது. நாம் ஒருவருடன் நட்பை, உறவை விரும்புகிறோம் எனில் நாம் ஒருவருடைய நட்பை, உறவை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறோம் எனில் அதற்கு இசைவான, உகந்த வார்த்தைகளும் செயல்களும்தான் நம்மிடமிருந்து வெளிப்படும். அவர்களைக் காயப்படுத்தும் சொற்களை நாம் சொல்ல மாட்டோம். அவர்கள் விரும்பாத மனிதர்களுடன் நாம் நம்முடைய உறவை பலப்படுத்திக் கொள்ள மாட்டோம்.

ஆனால் நட்பை, உறவை நாம் முறித்துக் கொள்ள விரும்புகிறோம் எனில் அவர்களைக் காயப்படுத்தும் சொற்களை கூறுகின்றோம். அவர்களைக் கோபமூட்டும் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றோம். சில சமயங்களில் அந்த வகையான சொற்களை, செயல்களை வாதப்படி நியாயமானவை என்று நாம் முன்வைக்கலாம். அவை வாதப்படி நியாயமானவையாக இருந்தாலும் மனப்பூர்வமான நட்பின், உறவின் அடிப்படையில் நியாயமானவை இல்லை என்பதை நாம் அறிவோம். ஆனாலும் நாம் எல்லாவற்றையும் உடைத்துச் சொல்ல மாட்டோம். நாம் தப்பிக்கும் பொருட்டு நம்முடைய கோபத்தை, காழ்ப்பை மெல்லிய திரை கொண்டு மூடியும் வைப்போம். மனிதர்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. போலியான வாதங்களைக் கொண்டு தங்களின் தீய உணர்வுகளை மறைத்து விடுகிறார்கள்.

நட்பு என்பதும் உறவு என்பதும் ஒரு வகையான உடன்படிக்கைதான். அந்த உடன்படிக்கை மென்ணுணர்வுகளால் பின்னப்படுகின்றது. அந்த உடன்படிக்கையை மீறுவது என்பது அந்த மென்ணுணர்வுகளைக் காயப்படுத்துவதுதான். நட்பும் உறவும் ஒரு வகையான மறைமுகமான வியாபாரமும்தான். பயனளித்து பயனடைதல் என்பது அதன் மறைமுகமான விதி. உண்மையில் அது அவசியமான விதியும்கூட.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply