அவமானப்படுத்தப்பட்ட மனிதர்களிடம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்பட்டுவிடுகிறது. தங்களை அவமானப்படுத்தியவர்களுக்கு முன்னால், தங்களைப் பொருட்படுத்தாதவர்களுக்கு முன்னால் தாங்கள் வாழ்ந்து காட்டியே தீர வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். அப்படி வாழ்ந்து காட்டுவதையே தங்கள் வாழ்வின் இலட்சியமாக அவர்கள் ஆக்கிக் கொள்கிறார்கள். பெரும்பாலும் அவ்வாறு அவமானப்படுத்துபவர்கள் நெருங்கிய உறவினர்களாக, நண்பர்களாக, பக்கத்து வீட்டுக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள். மனிதர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்கள் கூறுவதையே பொருட்படுத்துகிறார்கள். தங்களுக்கு எந்த சம்பந்தமும் அற்ற மனிதர்கள் தங்களைக் குறித்து ஏதேனும் கூறினால் அவர்கள் அதனைப் பெரிய அளவில் பொருட்படுத்துவதில்லை. அப்படி பொருட்படுத்தினாலும் தற்காலிகமாகத்தான் பொருட்படுத்துகிறார்கள்.
ஒரே ஊரில், ஒரே பகுதியில், ஒரே வீட்டில் இருப்பவர்களிடம் இந்தப் பண்பு அதிகமாகக் காணப்படுகிறது. தொடர்ந்து இடம்பெயர்பவர்களிடம் இந்தப் பண்பு பெரிய அளவில் காணப்படுவதில்லை. இடம்பெயர்தல் அவர்களின் உலகை ஓரளவு விசாலமாக்கி விடுகிறது. இந்த உலகை ஒரு மனிதன் எந்த அளவு அதிகம் காண்கிறானோ அந்த அளவு அவனுடைய உலகும் விசாலமாகிக் கொண்டே செல்லும். இங்கு கிணற்றுத் தவளைபோல தங்களின் வாழ்வை அமைத்துக் கொள்வோரும் இருக்கிறார்கள். பெரும் கடலை தங்களின் இருப்பிடமாகக் கொண்டோரும் இருக்கிறார்கள். மனிதர்கள் கொண்டிருக்கும் கண்ணோட்டங்களுக்கேற்ப அவர்களின் உலகும் விசாலமாகிக் கொண்டே செல்லும்.
ஒரு மனிதனை அவன் வாழும் சூழலிலிருந்து விடுவித்து அப்படியே வேறு ஒரு சூழலுக்குக் கொண்டு சென்றால் அவன் குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு வேறொரு மனிதனாக மாறிவிடுவான். சிலர் சூழலை எதிர்கொள்ள முடியாமல் திணறினாலும் போகப் போக அதற்கேற்ப அவர்களின் மனநிலையும் நெகிழ்ந்து கொடுக்கும். சிலர் முற்றிலும் மதிப்பிழந்து விடுவார்கள். சிலர் பூத்துக் குலுங்குவார்கள். ஒரு மனிதனுக்கு இயல்பாக காணப்படும் திறமைகளோடு அவற்றுக்கு ஒத்திசைவான சூழலும் அவசியம். சூழல் முற்றிலும் வேறு ஒன்றாக இருந்தால் அவன் மதிப்பிழந்து விடுவான். அதனால்தான் மனிதர்கள் தங்களுக்கு ஒத்திசைவான மனிதர்களுடன் இணைந்திருக்க விரும்புகிறார்கள். ஒத்திசைவான சூழல்களை தேடிக் கொண்டேயிருக்கிறார்கள்.
