“பேசினால் நல்லதையே பேசுங்கள். இல்லையெனில் மௌனமாக இருங்கள்.” (நபிமொழி)
நல்லதையே பேச வேண்டும். நல்லதைப் பேச முடியவில்லை எனில் மௌனமாக இருக்க வேண்டும். இங்கு மௌனம் வலியுறுத்தப்பட்டதல்ல. உங்களால் நல்லதைப் பேச முடியவில்லை எனில் மௌனமாக இருங்கள் என்றே சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாம் மௌனத்தை ஒரு வணக்க வழிபாடாக முன்வைக்கவில்லை. அதற்கு எந்த சிறப்பு அம்சத்தையும் அளிக்கவில்லை. ஆனாலும் மனிதன் அளவோடு பேச வேண்டியிருக்கிறது. அளவுக்கு மீறிய ஒவ்வொன்றும் சலிப்பை ஏற்படுத்திவிடும் என்பதால். அளவுக்கு மீறிய ஒவ்வொன்றும் அவனைத் தவறான திசையின் பக்கம் திருப்பி விடலாம் என்பதால்.
மனிதர்கள் இயல்பில் போட்டியும் பொறாமையும் கொண்டவர்கள் என்பதால் அடுத்தவர்களின் அந்தரங்கத்தை, தவறுகளைப் பேசுவதில் அவர்களுக்கு அலாதியான ஆர்வம் ஏற்பட்டு விடுகிறது. ஒருவர் இல்லாத சமயத்தில் அவரைக் குறித்து தவறாகப் பேசுவதை இஸ்லாம் தவறென்று கூறுகிறது. ஒருவர் இல்லாத சமயத்தில் அவருக்குத் தெரியாது என்ற பட்சத்தில் அவரைக் குறித்துப் பேசினால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதாலும் அது உங்களின் நேர்மைக்கு முரணானது என்பதாலும் அதனைத் தவிர்த்துதான் ஆக வேண்டும். இது போன்ற சூழலில் பேச்சைவிட மௌனம் அழகானது, பயனுள்ளது. அது தேவையற்ற சிக்கல்களிலிருந்து அவனைப் பாதுகாக்கக்கூடியது.
மௌனம் சில இடங்களில் அழகானதாக, பயனுள்ளதாக மாறிவிடுகிறது. மூளும் சண்டைகளை அணைத்து விடுகிறது. ஒவ்வொரு வாதத்திற்கும் நாம் பதிலடி கொடுத்துக் கொண்டேயிருந்தால் அது எதிர்த்தரப்பினரை இன்னும் கோபமுறச் செய்யும். கூர்மையான வார்த்தைகள் மீண்டும் ஒட்ட முடியாத இடைவெளியை ஏற்படுத்தி விடும். நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, சக மனிதர்களுக்கு மத்தியில் அப்படியான இடைவெளி ஆரோக்கியமானதல்ல. மௌனம் சில இடங்களில் நாம் சொல்ல முடியாத பல விசயங்களையும் தெளிவாகச் சொல்லி விடுகிறது.
