திருக்குர்ஆனுக்கு எழுதப்பட்ட விரிவுரை நூல்கள் மரபு வழியாக நமக்குக் கிடைத்த அறிவுச் சொத்துகள் ஆகும். திருக்குர்ஆனுக்கு தொடர்ந்து விரிவுரைகள் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. முதல் தலைமுறை தொடங்கி ஒவ்வொரு தலைமுறையிலும் குர்ஆன் விரிவுரையாளர்கள் காணப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தற்காலத்திலும் குறிப்பிடத்தகுந்த அளவு தஃப்ஸீர்கள் எழுதப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்தப் பணி இடைவிடாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அல்லாஹ்வின் வார்த்தைகள் ஞானம் நிரம்பியவை. அவற்றிலிருந்து ஞானங்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அவற்றிலிருந்து ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான அளவு பெற்றுக் கொள்ளலாம்.
தஃப்ஸீர் நூல்கள் மனித அனுபவங்களின் தொகுப்புதான். ஒவ்வொன்றும் அதற்கே உரிய தனித்தன்மைகளையும் பலவீனங்களையும் கொண்டிருக்கலாம். ஆகவே குறிப்பிட்ட ஒரு தஃப்ஸீரை முன்வைத்து அது மட்டுமே போதுமானது என்று கூற முடியாது. ஒவ்வொரு காலகட்டமும் இடமும் புதிய விரிவுரைகளை வேண்டி நிற்கின்றன. ஏனெனில் ஒவ்வொரு காலகட்டமும் சூழலும் அதற்கே உரிய சிக்கல்களை, தேவைகளைக் கொண்டிருக்கின்றன.
மரபு வழியாக நமக்குக் கிடைக்கும் மனித அனுபவங்களைக் கொண்டு நாம் மிகப் பெரிய அளவில் பயனடைய முடியும். ஆனாலும் குறிப்பிட்ட காலகட்டத்தின், குறிப்பிட்ட சூழலின் சிக்கல்களை அவசியம் இன்றி நாம் நம்முடைய காலகட்டத்திற்கு நம்முடைய சூழலுக்கு கடத்தி விடக்கூடாது. மனித அனுபவங்கள், கருத்துகள் அப்படியே ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல. அவற்றில் தேவையானவை, தேவையற்றவை, அந்த சூழலுக்கு மட்டுமே உகந்தவை, பிழையானவை ஆகியவற்றை பிரித்தறிவது மிக அவசியம்.
எல்லாவற்றையும் தாண்டி குர்ஆன் வசனங்களில் நாமும் ஆழ்ந்து கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நமக்கானவற்றை நாம் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு சிந்திக்கும்போதுதான் நாம் தெளிவையும் உறுதியையும் பெற முடியும். தெளிவையும் அறிவையும் நமக்கு வழங்கப்பட்ட அறிவை, ஞானத்தை பயன்படுத்துவதன் வழியேதான் பெற்றுக் கொள்ள முடியும். மற்றவர்களின் அனுபவங்கள் நம்மை இந்தப் பாதையில் செல்லத் தூண்டலாம், நம்முடைய சந்தேகங்களை, குழப்பங்களை நீக்கலாம். ஆனால் தெளிவையும் உறுதியையும் பெற வேண்டும் எனில் நாம் இந்தப் பாதையில் சென்று நமக்கு வழங்கப்பட்ட அறிவை பயன்படுத்தியே தீர வேண்டும்.

மற்றவர்களின் அனுபவங்கள் நம்மை இந்தப் பாதையில் செல்லத் தூண்டலாம், நம்முடைய சந்தேகங்களை, குழப்பங்களை நீக்கலாம். ஆனால் தெளிவையும் உறுதியையும் பெற வேண்டும் எனில் நாம் இந்தப் பாதையில் சென்று நமக்கு வழங்கப்பட்ட அறிவை பயன்படுத்தியே தீர வேண்டும்.
மிக அற்புதமான வார்த்தைகள் masha allah