ஈர்ப்பு விதி

You are currently viewing ஈர்ப்பு விதி

ஈர்ப்பு விதி என்கிறார்கள். நாம் விரும்புவது நம்மை வந்தடையும் என்பதுதான் அது. இதை மிகப் பெரிய பிரபஞ்ச இரகசியமாக முன்வைக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சம் நீங்கள் கேட்பதைக் கொடுக்கும். ஆகவே நீங்கள் விரும்புவதை மட்டும் கேட்டுக் கொண்டேயிருங்கள்.  உலகியல்வாதிகளைப் பொறுத்தவரை, இங்கு செயல்படும் விதிகளை அறிந்து கொண்டால் போதுமானது. அவற்றுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பது குறித்து அவர்கள் யோசிக்க மாட்டார்கள். அவ்வாறு யோசிப்பது அவசியமற்ற ஒன்று என்று அவர்கள் கருதுகிறார்கள்.  

ஆன்மாக்களுக்கு மத்தியில் நாம் புரிந்து கொள்ள முடியாத வகையில் ஏதோ ஒரு வகையான தொடர்பு இருக்கிறது. நாம் யாரைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறாமோ அவர் திடீரென நம் முன்னால் தோன்றுவதும் அல்லது தொடர்புச் சாதனங்கள் வழியாக நம்மை தொடர்பு கொள்வதும் இதனால்தான் என்று கருதுகிறேன்.

ஈர்ப்பு விதி என்பது இங்கு செயல்படக்கூடிய விதிகளுள் ஒன்றுதான். நாம் தேடுவது நம்மை வந்தடையும். நாம் எதை அடைய நினைக்கிறோமோ அது முதலில் எண்ணமாக நம்முடைய மனதில் உருவாகும். பிறகு குறித்து முதலில் பேசுவோம். அதற்கான மனிதர்களைச் சந்திப்போம். பிறகு அதை நோக்கி நகர்வோம். பிறகு அடைய வேண்டியதை அடைவோம்.

இங்கு ஈர்ப்பு விதி என்பது அல்லாஹ்வுடைய நாட்டத்திற்கு உட்பட்டதுதான். அவன் நாடினால் அதனைச் செயல்பட விடாமல் ஆக்கி விடுவான். இங்கு செயல்படும் விதிகள் அனைத்தும் அவனுடைய நாட்டத்திற்கு உட்பட்டவையே. நெருப்பிற்கு சுடும் தன்மையை அளித்தவன் அவனே. அவன் நாடினால் அந்த தன்மையை அதிலிருந்து நீக்கி விடுவான்.

இதுதான் நம்பிக்கையாளர்களையும் உலகியல்வாதிகளையும் வேறுபடுத்துகிறது. தாங்கள் எதிர்பார்த்த ஒன்றிற்கு மாறாக நிகழும்போது நம்பிக்கையாளர்கள் அதனை இறைநாட்டம் என்று பொருந்திக் கொள்கிறார்கள். அவர்கள் நிராசையடைவதில்லை. அல்லாஹ் தங்களுக்கு இதைவிட சிறந்த ஒன்றை வழங்கலாம் என்று அவர்கள் ஆறுதலடைகிறார்கள். ஆனால் உலகியல்வாதிகள் அப்படி இருப்பதில்லை. தாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக நிகழும்போது அவர்கள் நிராசையடைகிறார்கள். புரிந்து கொள்ள முடியாத மூடுமந்திரத்திற்குள் சிக்குகிறார்கள். வாழ்க்கை அவர்களுக்கு மூடுமந்திரமாக, குருட்டுத்தனமாகத் தெரிகிறது.  

நீங்கள் உங்களின் விதியை நோக்கி ஈர்க்கப்படுவீர்கள். அடைய வேண்டிய இலக்கை அடைவதற்கு முன்னால் நீங்கள் அமைதியடைய மாட்டீர்கள். அந்த இலக்கை அடைந்து விட்டால் நீங்கள் அமைதியடைந்து விடுவீர்கள். உங்களை மறுபடியும் அந்தப் பாதையில் யார் தள்ள நினைத்தாலும் உங்களால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது. ஒவ்வொருவரும் தாம் படைக்கப்பட்ட நோக்கத்தை நோக்கி செலுத்தப்படுவார்கள்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply