பெரும்பாலும் நல்ல பாரம்பரியமான குடும்பத்திலிருந்தே சிறந்த ஆளுமைகள் உருவாகி வருகிறார்கள். அன்றாடங்களில் சிக்கி உழல்பவர்களிலிருந்தும், ஒதுக்கப்பட்டவர்களிலிருந்தும் ஆளுமைகள் உருவாகி வருவது மிகவும் அரிது. விதிவிலக்குகள் இருக்கலாம். அன்றாடங்களில் மூழ்கி இருப்பவர்கள் உன்னதமான விசயங்கள் குறித்து சிந்திப்பதற்கு போதுமான நேரத்தையும் வளத்தையும் பெற்றிருக்க மாட்டார்கள் என்பது முதன்மையான காரணங்களில் ஒன்று.
பேரறிஞர் அமீன் அஹ்ஸன் இஸ்லாஹியின் எழுத்துகளில் அவர் பீடத்திலிருந்து பேசுவதுபோன்று உணர்ந்திருக்கிறேன். அவரது மொழிநடை உறுதியும் தெளிவும் கொண்டது. அவரது முன்னோர் ராஜபுத்திர வம்சத்திலிருந்து இஸ்லாத்தை தழுவியவர்கள். மூன்று தலைமுறைகளில் அந்த வம்சத்திலிருந்து ஒரு இஸ்லாமிய பேரறிஞர் உருவாகி வந்திருக்கிறார். அந்த வம்சத்தின் மிடுக்கு அவரது எழுத்துகளில் காணப்படுகிறது.
அவர் மத்ரஸதுல் இஸ்லாஹியாவில் கல்வி பயின்ற பிறகு வெவ்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். சில நூல்களை மொழிபெயர்த்தும் இருக்கிறார். ஆனாலும் அந்தப் பணிகளில் அவரது மனம் இருப்பு கொள்ளவில்லை. அவரது கவனம் முழுவதும் திருக்குர்ஆனின் மீதே இருந்தது. ஒரு நாள் அவரது ஆசிரியர் இமாம் ஹமீதுத்தீன் ஃபராஹீ “எதுவரை இப்படி பத்திரிகைகளில் எழுதிக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்? என்னிடம் குர்ஆனைப் படிப்பதற்கு எப்போது வரப் போகிறீர்கள்?” என்று கேட்டபோது சட்டென தன் வேலையை விட்டுவிட்டு அவருடன் இணைந்து விட்டார்.

கிட்டத்தட்ட ஆறு வருட காலம் இமாம் மரணிக்கும்வரை அவர் இமாமுடன் தங்கிருந்தார். திருக்குர்ஆனின் வசனங்கள் தொடர்பாக அவரிடம் கற்றுக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருந்தார். இமாம் மரணித்த பிறகே அவர் ததப்புருல் குர்ஆன் என்ற நூலை எழுதத் தொடங்குகிறார்.
பேரறிஞர் ரஷீத் ரிளா தம்முடைய தஃப்ஸீரில் எப்படி தம் ஆசிரியர் முஹம்மது அப்துஹுவின் கருத்துகளை குறிப்பிடுகிறாரோ அவ்வாறே அமீன் அஹ்ஸன் இஸ்லாஹீ தம் ஆசிரியர் ஹமீதுத்தீன் ஃபராஹீயின் கருத்துகளை, சிந்தனைகளை குறிப்பிடுகிறார். நான் கணித்தவரை பேரறிஞர் ரஷீத் ரிளாவின் தஃப்ஸீருக்கும் பேரறிஞர் அமீன் அஹ்ஸன் இஸ்லாஹியின் தஃப்ஸீருக்கும் மத்தியில் அதிக அளவில் ஒத்திசைவுகள் காணப்படுகின்றன. இரண்டும் ஒரே மூலத்திலிருந்து வெளிப்பட்டதுபோன்று இருக்கின்றன. ததப்பருல் குர்ஆன் தற்காலத்தில் எழுதப்பட்ட தஃப்ஸீர்களில் மிகச் சிறந்த ஒன்றாகும்.
