நமக்கு முன்னால் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று கண்ணியத்தின் வழி. இரண்டு இழிவின் வழி. ஒன்று நேரான வழி. இன்னொன்று தவறான வழி. நேரான வழியில் செல்வது, அதில் நிலைத்திருப்பது ஒரு வகையில் இலகுவானது. இன்னொரு வகையில் கடினமானது. அது இயல்பின் வழி என்ற அடிப்படையில், இவ்வுலக ஒழுங்குகளுடன் ஒத்திசைந்து செல்லக்கூடியது என்ற அடிப்படையில் அந்தப் பாதையில் செல்வது இலகுவானது. அது இச்சைகளுக்கு எதிரான வழி என்ற அடிப்படையில் அது கொஞ்சம் கடினமானது. தவறான வழி என்பது மிருக இச்சைகளின் வழி. அது இவ்வுலக ஒழுங்குகளுக்கு எதிரான வழி.
ஒருவன் தன் மிருக இச்சைகளை அப்படியே நிறைவேற்ற முனைவதுதான் தவறான வழியில் செல்வது. அது ஒரு வகையில் இலகுவானது. இன்னொரு வகையில் துன்பம் தரக்கூடியது. அது இழிவையும் பெரும் துன்பங்களையும் சக மனிதர்களின் வெறுப்பையும் குற்றவுணர்ச்சியையும் வெறுமையையும் கொண்டு வரக்கூடியது. அது மன அமைதிக்கு எதிரானது.
மிருக இச்சைகளை நிறைவேற்றுவதைக் கொண்டு மனம் அமைதியடையுமா? அடைவதுபோன்று தோன்றினாலும் நிச்சயம் அடையாது. அது மேலும் மேலும் இச்சைகளைப் பெருக்கிக் கொள்ளும். எவ்வளவு நீர் அருந்தினாலும் தீராத தாகத்தில் அகப்பட்டுக் கொள்ளும். அது மனிதன் தன்னைத் தானே வெறுக்கும் அளவுக்கு, சக மனிதர்களின் வெறுப்புக்கும் ஆளாகும் அளவுக்கு அவனைக் கீழ்மைகளில் உழலச் செய்துவிடும். அவன் கர்வங்களில் கழிவிரக்கங்களில் சிக்கிக் கொள்வான். கர்வம் அவனது தொடக்கம். கழிவிரக்கம் அவனது முடிவு. அவன் ஆரம்பத்தில் தன்னால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்ற தன்முனைப்புடன் இருந்தாலும் போகப் போக அதனை இழந்து கொண்டே செல்வான். ஒரு கட்டத்தில் நிராசையடைவதும் கழிவிரக்கம் தேடுவதும் அவனுடைய இயல்பான பண்புகளில் உள்ளவையாகி விடும்
